தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்து இரு வாரங்களுக்கு மேலாகியும், அவசரச் சட்டத்தை ஆளுனர் இன்னும் பிறப்பிக்கவில்லை. சமூகநீதி சார்ந்த விஷயங்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுனர் தேவையின்றி தாமதம் செய்வது வருத்தமளிக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டன. முதன்முதலில் நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்ட 2017-18 ஆம் ஆண்டில் அரசு பள்ளி மாணவர்களில் ஒருவருக்குக் கூட மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கவில்லை. 2018-19ஆம் ஆண்டில் 4 மாணவர்களுக்கும்,  2019-20 ஆம் ஆண்டில் 5 மாணவர்களுக்கும் மட்டும் தான் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிலையை மாற்றி சமூக, கல்வி அடிப்படையில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை தீர்மானித்து, அதற்கான அவசர சட்டத்தை கடந்த ஜூன் 15-ஆம் தேதி தமிழக ஆளுனருக்கு அனுப்பி வைத்தது.


 


READ | இளநிலை சித்த மருத்துவக் கல்லூரியை புறநகர் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்: PMK


 


ஆளுனரின் ஒப்புதலுக்காக அவசர சட்டம் அனுப்பி வைக்கப்பட்டு இன்றுடன் 16 நாட்கள் ஆகும் நிலையில், இதுவரை அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை. மருத்துவப் படிப்புகளில் அரசு பள்ளிகளின் மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அவசர சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி செல்லுமா? என்பது குறித்து சட்ட வல்லுனர்களிடம் சட்ட ஆலோசனை கேட்க  தமிழக ஆளுனர் புரோகித் முடிவு செய்திருப்பதாகவும், ஆலோசனை கேட்ட பிறகு தான் இந்த விஷயத்தில் முடிவெடுப்பார் என்றும் தமிழக அரசு வட்டாரங்கள்  தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.


தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள், அமைச்சரவையில் நிறைவேற்றப்படும்  தீர்மானங்கள், அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்படும் அவசர சட்டங்கள் ஆகியவற்றுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன்பாக, அது பற்றி சட்ட வல்லுனர்களிடம் ஆலோசனை கேட்க ஆளுனருக்கு அதிகாரம் இருப்பதை மறுக்க முடியாது. அதேநேரத்தில், மிக முக்கியமான அவசர சட்டங்களை நிறைவேற்ற அரசு விரும்பும் போது, சட்ட ஆலோசனை என்ற பெயரில், அதற்கு ஆளுனர் முட்டுக்கட்டை போடக் கூடாது.


மருத்துவப் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் முடிவை தமிழக அரசு தன்னிச்சையாக எடுக்கவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பொன். கலையரசன் தலைமையில் ஆணையம் அமைத்து, அதன் பரிந்துரை அடிப்படையிலேயே அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு முடிவு செய்தது. அதுமட்டுமின்றி, அவசர சட்டம் நிறைவேற்றப்படுவதற்கு முன் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரிடமும் சட்ட ஆலோசனை பெற்றுள்ளது. இவ்வளவுக்குப் பிறகும், மீண்டும் ஒருமுறை சட்ட ஆலோசனை பெறப் போவதாகக் கூறி அவசரச் சட்டம் பிறப்பிப்பதை ஆளுனர் அலுவலகம் தாமதப்படுத்துவது நியாயமற்றது ஆகும்.


 


READ | 27% ஒதுக்கீட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் எனக் கொண்டாடுவது மிகப்பெரிய மோசடி!!


 


அரசு மருத்துவக் கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் அவசியம் ஆகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, அத்தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கும்,  மருத்துவப் படிப்பில் தேவையான மதிப்பெண்கள் பெறுவதற்கும் லட்சக் கணக்கில் பணம் செலுத்தி, தனியார் பயிற்சி மையங்களில் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டியுள்ளது. அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு இது சாத்தியப்படாது. இத்தகைய சூழலில் அரசு பள்ளி மாணவர்களின் பிற்படுத்தப்பட்ட தன்மையை கருத்தில் கொண்டு மருத்துவப் படிப்பில் அவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது தான் சமூக நீதி ஆகும். தமிழக அரசின் இந்த நல்ல முயற்சிக்கு ஆளுனர் துணையாக இருக்க வேண்டுமே தவிர, தேவையற்ற தாமதம் செய்து தடையாக இருக்கக்கூடாது.


தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்த ஒரு வாரத்திற்குள் வெளியிடப்பட உள்ளன. தேர்வு முடிவுகள் வெளியானவுடன் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். அதில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து குறிப்பிடப் பட வேண்டும். அதற்கு வசதியாக அரசு பள்ளி மாணவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில்  தனி இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அவசர சட்டத்தை ஆளுனர் உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்றார்.