ஃபானி புயலால் பாதித்த ஒடிஷாவுக்கு TN Govt சார்பில் ₹ 10 கோடி நிதி!!
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிப்பு!!
ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவிப்பு!!
ஒடிசா மாநிலத்தில் ஆக்ரோஷமாக கரை கடந்த ஃபானி புயலால், 14 மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பாலான உயிரிழப்புகள் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தாதல் ஏற்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒடிசாவில் புயலின் கோரத்தாண்டவம் காரணமாக ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தும் பணியில் முழுமூச்சாக தேசியப் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்திய விமானப்படையின் 3 சூப்பர் ஹெர்குலிஸ் ஹெலிகாப்டர்கள் நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொண்டு செல்ல அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடற்படை ஹெலிகாப்டர்களும் கப்பலில் இருந்து ஒடிசாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு 15 நாட்களுக்கு உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஹெலிகாப்டர் மூலம் புயல் பாதிப்புகளை பார்வையிட்டார்.
ஒடிசாவையும் மேற்குவங்கத்தையும் விட்டு நகர்ந்து, நேற்று வங்காள தேசத்தை தாக்கியது ஃபானி புயல்-முன்கூட்டியே பல லட்சம் பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் 79 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன. புவனேசுவருக்கு இன்று முதல் ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களுக்கு 14 விரைவு ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஃபானி புயல் காரணமாக வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம் ,அஸ்ஸாம், மணிப்பூர், மீசோரம், நாகாலாந்து, திரிபுரா,மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஃபானி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிஷாவுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி நிவாரண நிதி அறிவித்துள்ளது. மேலும், புயலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக மக்கள் சார்பில் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஒடிஷா மாநிலத்திற்கு தேவையான உதவிகளை வழங்க தமிழக அரசு தயாராக உள்ளது எனவும் தமிழக முதலவர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.