சசிகலா புஷ்பா: அதிமுகவில் இருந்து நீக்கம்
ராஜ்யசபாவில் இன்று, அதிமுக - திமுக எம்.பி.,க்கள் மோதல் தொடர்பான விவகாரம் குறித்து எழுப்பப்பட்டது. இப்போது பேசிய அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா தனக்கு டில்லியில் பாதுகாப்பில்லை என தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:- டில்லியில் எனது உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. எனக்கு அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எனது புகாரில் தனிப்பட்ட பிரச்னை ஏதும் இல்லை. உணர்ச்சி வசப்பட்டு நடந்து கொண்டேனே தவிர அதில் உள்நோக்கம் ஏதும் இல்லை. அப்படி நடந்து கொண்டதற்காக திருச்சி சிவா மற்றும் திமுக தலைவரிடம் நான் மன்னிப்பும், வருத்தமும் கேட்டுக் கொள்கிறேன்.பெண்களுக்கு இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லாததால் நான் எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.
ராஜ்யசபா சபாநாயகர் குரியன் கூறியதாவது: சசிகலா எம்.பி. என்ற முறையில் அவருக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடையில் சசிகலா புஷ்பாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அதிமுக.,வின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து சசிகலா புஷ்பா நீக்கப்பட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் டில்லி விமான நிலையத்தில் திமுக எம்.பி., திருச்சி சிவா மற்றும் அதிமுக எம்.பி., சசிகலா புஷ்பா இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சசிகலா புஷ்பா, திருச்சி சிவாவை அறைந்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக ஜெயலலிதா நேற்று சசிகலா புஷ்பாவை அழைத்து விசாரித்தார். இந்நிலையில் சசிகலா புஷ்பா இன்று அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.