அதிமுக மாநிலங்களவை வேட்பாளர் பட்டியலை நீண்ட இழுபறிக்கு பிறகு இரு தினங்களுக்கு முன்பு அதிமுக வெளியிட்டது. அதில் யாரும் எதிர்பாராத விதமாக தர்மருக்கு சீட் வழங்கப்பட்டதால் அதிமுகவுக்கு கடும் அதிருப்தி அலை எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயக்குமாருக்கு சீட் கிடைக்கும் என்று பேசப்பட்ட நிலையில், அவருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்த பிரச்சனைகள் எல்லாம் ஒருபுறம் இருக்க சசிகலா கட்சிக்குள் நுழைய தீவிரம் காட்டி வருவதாகவும் சில தகவல்கள் கிடைத்துள்ளன. இதுபற்றிய விரிவான விவரங்களை பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


அதிமுக கட்சிக்குள் இபிஎஸ் - ஓபிஎஸ் இடையே ஒரு பனிப்போர் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓபிஎஸ்-ம், இணை ஒருங்கிணைப்பாளராக இபிஎஸ்-ம் பதவி வகித்து வருகின்றனர். சசிகலா தொடர்ந்த பொதுச்செயலாளர் வழக்கு தள்ளுபடி ஆனதும், பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர எடப்பாடி பழனிசாமி முயற்சித்ததாக கூறப்படுகின்றது. பொதுச்செயலாளராக தானும், துணை பொதுச்செயலாளராக ஓபிஎஸ்-ஐயும் பதவி யேற்க வைக்க இபிஎஸ் முயற்சித்த போது அதற்கு கராராக நோ சொல்லிவிட்டாராம் ஓபிஎஸ். இதற்கு நடுவே திடீரென ஓபிஎஸ் சகோதரர் ராஜா சசிகலாவை சந்திக்க மீண்டும் அதிமுக கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அதனை தனது பாணியில் கையாண்டு பிரச்சனையை முடித்து வைத்தார் இபிஎஸ். 


மேலும் படிக்க | தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள்: அண்ணாமலை


அதன்பிறகு முதலமைச்சருக்கு எந்த ஒரு சமூக பிரச்சனை என்றாலும் ஓபிஎஸ், இபிஎஸ் தனித்தனியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். மாநிலங்களவை வேட்பாளர்களை தேர்வு செய்யும் கூட்டத்தில் கூட இருதரப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கும், ஓபிஎஸ் ஆதரவாளர் ஒருவருக்கும் சீட் வழங்க பேசி முடிக்கப்பட்டது. அதன்பிறகு மிகப்பெரிய இழுபறிக்குப் பிறகு இபிஎஸ் ஆதரவாளரான முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ஓபிஎஸ் ஆதரவாளர் தர்மர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. 



முதலில் ஜெயக்குமார், செம்மலை, கோகுல இந்திரா, வளர்மதி, இன்பதுரை, ராஜ் சத்யன் ஆகியோர்களின் பெயர்கள் அடிபட்டன. இதில் ஜெயக்குமாருக்கு கட்டாயம் வாய்ப்பு வழங்கப்படும் என பேசப்பட்டது. காரணம் அவர் தான் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும், சசிகலாவுக்கு எதிராகவும் பேசி வருகிறார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல நடக்கவில்லை. ஜெயக்குமார் சட்டமன்ற தேர்தலில் சொந்த தொகுதியிலேயே தோல்வியடைந்ததால், மக்கள் மத்தியில் அவரது செல்வாக்கு குறைந்துவிட்டதாக அவருக்கு எதிராக சில அதிமுக நிர்வாகிகள் குரல் எழுப்பியுள்ளனர்.


மேலும் படிக்க | அண்ணா சாலையும், கருணாநிதி சிலையும்.! - 47 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்ன ?


அதோடு ஜெயக்குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில் அது கட்சிக்கு பின்னடைவாக அமைந்துவிடும் எனவும் சிலர் முனுமுனுத்துள்ளனர். இதனால் அவைத்தலைவர் பதவி காலியாக இருப்பதால் ஜெயக்குமாருக்கு அந்த பொறுப்பை வழங்குவதாக எடப்பாடி பழனிசாமி உறுதியளித்ததாக சில தகவல்கள் கிடைத்துள்ளன. தீவிரமாக சசிகலாவுக்கு எதிராக பேசி வந்த ஜெயக்குமார் தற்போது மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வாய்ப்பு பறிபோனதால் கடுப்பில் உள்ளாராம். 


இப்படி கட்சிக்குள் பெரிய பூகம்பமே உருவாகி வருவதை அறிந்து கொண்ட சசிகலா ஸ்மார் மூவ் செய்யத்தொடங்கியுள்ளார். கடந்த சில நாட்களாக அடிக்கடி செய்தியாளர்களை சந்தித்து வரும் அவர், அதிமுக எனது தலைமையின் கீழ் வருவது 100 சதவீதம் உறுதி என கூறியுள்ளார். இதனையடுத்து அதிமுக நிர்வாகிகள் சிலர், ஜெயக்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை பயன்படுத்தி கட்சிக்குள் நுழைய சசிகலா தீவிரம் காட்டி வருவதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு கட்சிக்குள் பயங்கர எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஜெயக்குமாரை சமாதானம் செய்வாரா எடப்பாடி பழனிசாமி? அதிமுகவை கைப்பற்றும் முனைப்பில் செயல்பட்டு வரும் சசிகலா சொன்னதை செய்வாரா? பொறுத்திருந்து பார்க்கலாம்.


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR