தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள்: அண்ணாமலை

தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பு பிரதமரை நெகிழச் செய்தது. ஒரு வருடம் கழித்து பாரதப் பிரதமர் தமிழகம் வந்ததற்கு அவருக்கு மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது: அண்ணாமலை

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 27, 2022, 08:49 PM IST
  • பிரதமர் பெருந்தன்மையாக நடந்துகொண்டார்: அண்ணாமலை
  • முதலமைச்சர் பேசியது திமுக தலைவர் தொண்டர்களிடம் பேசியது போல் இருந்தது: அண்ணாமலை
  • தினசரி காலையிலும், இரவிலும் அறிவாயலம் சென்று ஸ்டாலினுக்கு பூஜை செய்வதே திமுக கூட்டணிக்கட்சிகளின் வேலை: அண்ணாமலை
தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள்: அண்ணாமலை title=

சென்னை: பாஜக தலைமை அலுவலகத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார்.  

அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டு மக்களுக்கு நேற்றைய தினம் சரித்திர நாள். தமிழ்நாட்டு மக்களின் வரவேற்பு பிரதமரை நெகிழச் செய்தது. ஒரு வருடம் கழித்து பாரதப் பிரதமர் தமிழகம் வந்ததற்கு அவருக்கு மிகவும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மனம் நெகிழ்ந்துவிட்டேன் என்றும் கூறிவிட்டு தான் பிரதமர் டெல்லி புறப்பட்டு சென்றார். அதேபோல் மோடி வருகைக்காக கட்சியினர் அனைவரும் கடினமாக உழைத்தனர். 

நேற்று நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாரதப் பிரதமர் தமிழ் கலாச்சாரத்தை நேசிக்கும் வகையில் மண்ணை நேசிக்கும் வகையில் பேசினார். ஆனால் முதலமைச்சர் பேசியது திமுக தலைவர் தொண்டர்களிடம் பேசியது போல் இருந்தது. 

தமிழக வளர்ச்சி பொருளாதாரத்தில் மட்டுமில்லாமல் சமூக நீதி சிந்தனையுடன் வளர்ச்சியாக இருக்கும் என்று முதலமைச்சர் பிரதமர் மோடி முன் பேசினார். சாதி பெயரை சொல்லி திட்டியதற்காக அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கிடைத்த பரிசான துறை மாற்றம், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி பேசிய பேச்சுக்களையெல்லாம் மேடையில் சமூக நீதி பற்றி பேசும்போது ஸ்டாலின் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

 சமூக நீதி பற்றி பிரதமர் இருந்த மேடையில் ஸ்டாலின் பேசியது எள்ளி நகையாட வேண்டிய விஷயம் தான். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த எல்.முருகனும் பிரதமருடன் மேடையில் அருகில் அமர்ந்திருந்தார். இதுவே சமூக நீதி என்று கூறினார். 

சரக்கு சமப்படுத்தல் கொள்கையை பற்றி முதலமைச்சர் ஏன் பேசவில்லை? முதல்வரும், அவர் குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை வண்டிகட்டி இழுப்பதைப் போல் பேசியிருக்கிறார் ஸ்டாலின். குறிப்பாக, ஐபோன் தயாரிப்பு நிறுவனம், மோடியின் திட்டத்தால் தான் ரூ.25,000 கோடி மதிப்பில் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு ரூபாயைக் கூட முதலீடு செய்ய வைக்க முடியாதது தான் திராவிட மாடலாக திமுகவினர் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மேலும் ரூ.70,189 கோடி மத்திய அரசின் பங்காக தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறது. 

ஆனால் வரலாறு தெரியாமல் நிதியமைச்சர் தந்த பேப்பரை படித்தாரா முதலமைச்சர்? காங்கிரஸ் ஆட்சியில் வழங்கியதை விட 2014 முதல் இப்போது வரை இரண்டரை மடங்கு அதிகமாக ரூ.1,19,455 கோடியை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கியுள்ளது. 

வருவாய் இழப்பு பற்றி ஸ்டாலின் பேசியது அவர் குடும்பத்தின் வருவாய் இழப்பா? பாஜக ஆட்சியில் ரூ.7.35 லட்சம் கோடி மாநிலங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீடாக தமிழ்நாட்டுக்கு வரவேண்டியது ரூ.6,500 கோடி என்று பட்ஜெட்டில் நிதியமைச்சர் கூறினார். 

மேலும் ஜிஎஸ்டி இழப்பீடு ரூ.14,006 கோடி என்று நேற்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். எது உண்மை என்று தெரியவில்லை. ஜிஎஸ்டி கவுன்சிலில் தலையிடும் உரிமை மத்திய நிதியமைச்சருக்கோ, பிரதமருக்கோ கிடையாது. ஜிஎஸ்டி கவுன்சில் செயல்பாடு பற்றி முதலமைச்சருக்கு தெரியுமா? தமிழ்நாடு அரசுக்கு அரசு ஊழியர்கள் செலுத்திய ரூ.10,436 கோடி தொகையை என்பிஎஸ் திட்டத்தில் தமிழ்நாடு அரசு சேர்க்கவில்லை. அதேபோல் ரூ.25,949 கோடியை தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு தர வேண்டும் என்றும் மேடையில் பிரதமர் பேசமாட்டார்.

மேலும் படிக்க | Live Update: இன்றைய முக்கிய செய்திகள் (மே 27, 2022) 

ஆனால் முதலமைச்சர் வரிந்துகட்டிக்கொண்டு பேசியிருக்கிறார். கச்சத்தீவு பற்றி பேச உரிமையில்லாத கட்சி திமுக. திமுகவிலும் பேசவே கூடாத ஆள் யார் என்றால் அது ஸ்டாலின். கட்சத்தீவு என்ன கருவாடா? கருவாடு விற்பது போல் கச்சத்தீவை விற்றது திமுக. இன்று சேலையில் முள் எடுப்பது போல் ஒவ்வொரு பிரச்சனையாக சரிசெய்து வருகிறார் பிரதமர் மோடி. 

இந்நிலையில் எதற்காக அதைப் பற்றி ஸ்டாலின் பேச வேண்டும்? வராத ரயிலில், தண்டவாளத்தில் தலைவைத்து விட்டு தமிழ் மொழியை காப்பது போல் பேசுகிறார் ஸ்டாலின். 

மேலும் தாய்மொழியான தமிழில் படிப்பதை திமுக அரசு கட்டாயமாக்கியதா? இல்லை. மாறாக, புதிய தேசிய கல்விக்கொள்கை மூலம் அதை கட்டாயமாக்கியவர் மோடி. 

இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பள்ளி மாணவர்களின் கற்றல் அடைவுத்திறன் குறைவாக இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. தொடர்ந்து கல்வியை அழித்ததற்கு பட்டம் தர வேண்டுமென்றால் அதை திமுகவுக்குத் தான் தர வேண்டும். 

நீட் என்ற பொம்மையை வைத்து டிராமா போடுகிறார் ஸ்டாலின். கும்மிடிப்பூண்டி முதல் கோபாலபுரம் வரை தான் ஸ்டாலினின் அரசியல். இந்தியா முதல் உலகம் வரை மோடியின் அரசியல். மோடிக்கு அனைத்தும் தெரியும். சிறுபிள்ளை போல் பேசாமல் சரியான முறையில் ஆக்கப்பூர்வமான முறையில் ஸ்டாலின் செயல்பட வேண்டும்.’ என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர், ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியை கட்டிப்பிடித்தது, மீனவப்பெண் பாலியல் பலாத்காரம், லாக் அப் மரணங்கள், பாஜக நிர்வாகி கொலை, சினிமாவை மொத்தமாக குத்தகைக்கு எடுத்திருப்பது, கமிஷன் அடித்தது, பிஜிஆர் எனர்ஜி-க்கு ஒப்பந்தம் வழங்கியது தான் திமுக அரசின் ஓராண்டு சாதனை என்றும் 

இதுதான் திராவிட மாடல் பெருமைப் படுத்திக் கொள்கிறது என்றும் கூறினார். 

மேலும் ஜூன் முதல் வாரத்தில் திமுக அரசு செய்த மிகப்பெரிய இரண்டு ஊழல்களை ஆதாரத்துடன் வெளியிடுகிறேன் என்றும் இனி ஒவ்வொரு துறை வாரியாக ஊழல் பட்டியலை வெளியிடுவோம் என்றும் தெரிவித்தார். 

நேற்று நடந்த நிகழ்ச்சிக்கு இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் போல் கண்டவருக்கெல்லாம் டிக்கெட் தந்து அழைத்து வந்து நேரு அரங்கில் அரசு விழாவை நிகழ்த்திக்காட்டியது திராவிட மாடலின் சாதனை. 

2021 திமுகவின் தேர்தல் அறிக்கையிலேயே மத்திய அரசு என்று தான் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆட்சிக்கு வந்து கையெழுத்து போட்ட பின் ஏன் அது ஒன்றிய அரசாக மாறிப்போனது? என்று கேள்வி எழுப்பினார் அண்ணாமலை.

பாரத பிரதமர் மோடி மனம் நெகிழ்ந்து சென்றதே நமக்கு கிடைத்த கௌரவம். கோட்டைக்குள் சென்று அடிதடி செய்து, மேசை, நாற்காலிகளை உடைக்கும் ஆட்கள் நாங்கள் இல்லை. நாங்கள் தேசியவாதிகள். ஜனநாயக ரீதியில் கோட்டையை முற்றுகையிட்டு போராட உள்ளோம். இது அரசுக்கான எச்சரிக்கை மணியே என்று அண்ணாமலை தெரிவித்தார். 

பிரதமர் இருந்த மேடையில் கோரிக்கைகளை சொல்வதில் தவறில்லை ஆனால் அது சரியானதா? என்ன லாஜிக் இருக்கிறது? எந்த லாஜிக்கும் இல்லாமல் எனக்கு வாராவாரம் பி.வில்சன் நோட்டீஸ் அனுப்பிக்கொண்டிருக்கிறார். எனக்கு நோட்டீஸ் அனுப்புவதற்கு பதில் உச்சநீதிமன்றம் போகலாமே, 

அங்கு சென்றால் கிழிந்துவிடும் என்று தெரியும் என்றார் அண்ணாமலை. நீட் விவகாரத்தில் என்ன டேட்டா இருக்கிறது? வெள்ளை அறிக்கையைக் கேட்கிறோம், ஆனால் தரமாட்டார்கள். எந்த ஆதாரமுமின்றி வெறும் பேப்பரை அனுப்பிவைத்தால் குடியரசுத் தலைவர் எப்படி கையெழுத்து போடுவார்? 

மேலும் ஜிஎஸ்டி கவுன்சில் குஜராத்துக்கும் நிலுவைத் தொகை வைத்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலை என்ன பூட்டு போட்டா பூட்டி வைக்க முடியும்? ஜிஎஸ்டி கவுன்சிலில் தலையிட நிர்மலா சீதாராமனுக்கே அதிகாரமில்லை. இதை மறைத்து ஏன் அரசியல் செய்ய வேண்டும்? 

மத்திய மின்சார வாரியத்திடம் மின்சாரம் வாங்கியதற்கான பணத்தையே திமுக அரசு தரவில்லை. எதற்கெடுத்தாலும் விதண்டாவாதமாக அரசியல் செய்தால் அதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?

பிரதமரை வரவேற்பதும், அனுப்பி வைப்பதும் முதலமைச்சரின் அரசியலமைப்பு கடமை. அது அவருக்கும் தெரியும். கோட்டுக்கு வெளியே தொடாமல் கபடி ஆடுகிறார் முதலமைச்சர். பிரதமரை பகைத்துக்கொள்ளவும் மனமில்லை ஆனால் மேடை கிடைத்தால் சாக்கு, போக்கு சொல்கிறார். முதலமைச்சர் பிரதமரை மேடையில் வைத்துக்கொண்டு, கணக்குப்பிள்ளை கணக்கு கேட்பது போல் பேசியிருக்கிறார். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் நாங்கள் முதலமைச்சரை விட்டுத்தந்ததில்லை. ஆனால் அந்த பதவிக்குண்டான மரியாதையை அவர் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். 

பிரதமர் அள்ளி அள்ளி தருகிறார், ஆக்கப்பூர்வமாக கேட்டு வாங்குவோம். நம் முதலமைச்சர் இப்படி நடந்துகொண்டிருக்க கூடாது என்பதே எங்களின் வருத்தம். ஆனால் பிரதமர் பெருந்தன்மையாக நடந்துகொண்டார். தினசரி காலையிலும், இரவிலும் அறிவாயலம் சென்று ஸ்டாலினுக்கு பூஜை செய்வதே திமுக கூட்டணிக்கட்சிகளின் வேலை. அந்த தகுதி இருந்தால் தான் கூட்டணிக்கட்சியாகவே சேர்த்துக்கொள்வார்கள்.

‘என் அப்பா தெரியாமல் தவறு செய்துவிட்டார், கட்சத்தீவை தாரை வார்த்தது நாங்கள் தான், என் அப்பா செய்தது தவறு’ என்று ஸ்டாலின் மன்னிப்பு கேட்டால் நானே அறிவாலயம் வருகிறேன், அவரையும் கூட்டிக்கொண்டு டெல்லி செல்கிறேன், கட்சத்தீவை மீட்பதற்கான வேலைகளை தொடங்குவோம் என அண்ணாமலை தெரிவித்தார். 

திமுக - காங்கிரஸ் கூட்டணி அரசு இலங்கையில் செய்த குளறுபடிகளை பாஜக அரசு இப்போது தான் சரி செய்துள்ளது. நிச்சயம் தமிழ் மக்களின் நலன் காப்போம். 

மேலும் காவல்துறை அனுமதி பெற்று தான் மோடிக்கு வரவேற்பு வழங்கியது. பாஜக நீதிமன்ற அறிவுறுத்தலின் படியே பேனர்கள் வைக்கப்பட்டது. விதிமுறைகளை பாஜகவினர் மீறவில்லை என்று, அண்ணாமலை தெளிவுபடுத்தினார். 

தொடர்ந்து அண்ணாமலையிடம் பேனர் விதிமீறல் பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளரிடம், நேற்று நடந்த நிகழ்ச்சியில் பாஜக சார்பில் வைக்கப்பட்ட பேனர் ஒரு சில இடத்தில் விழுந்ததாக குறிப்பாக பேனர் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்துள்ளது என்று பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு தாங்கள் செய்த அனைத்து ஏற்பாட்டிற்கும் காவல்துறையிடம் அனுமதி பெற்றே அனைத்தையும் செய்தோம் என்று கூறிய அண்ணாமலை, தொடர்ந்து பத்திரிக்கையாளர் போட்டி போட்டுக்கொண்டு கேள்வி கேட்டதால் ‘அண்ணா உங்களுக்கு 200 உண்டு என்று கூறிய நிலையில் தொடர்ந்து பத்திரிக்கையாளர் கேட்டுக்கொண்டே இருந்ததால் வாக்குவாதம் செய்வது போல் 400 600 2000 கடைசியாக 3000  ரூபாய் கண்டிப்பாக உண்டு, திமுக விடம் வாங்கிக் கொள்ளுங்கள்’ என்றார். 

மேலும் அண்ணாமலை ஒரு சிறு கதாபாத்திரத்தில் அரபி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளதால் அவரது திரை வாழ்க்கை குறித்த கேள்விக்கு, ‘உதயநிதி அளவுக்கு நான் நல்ல நடிகர் அல்ல, சராசரியான நடிகர் தான். கர்நாடகாவில் நீச்சல் வீரர் ஒருவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் ஒரே ஒரு படத்தில், ஒரே ஒரு சீன் நடித்துள்ளேன். நான் நடித்தால் என் படத்துக்கு நானே டிக்கெட் வாங்கி நானே தான் படம் பார்க்க வேண்டும்’ என்று நகைச்சுவையாக கூறினார்.

மேலும் படிக்க | அரைவேக்காடு அண்ணாமலை - கே.பாலகிருஷ்ணன் கண்டனம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News