Tamil Nadu Rain Weather Latest News Updates: நாகப்பட்டினத்தில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் சுமார் 590 கிலோமீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 710 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னையில் இருந்து தெற்கு தென்கிழக்கு திசையில் 800 கிலோமீட்டர் தொலைவிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக வலுப்பெறும்பட்சத்தில் அடுத்த இரண்டு நாள்களில் தமிழக கரைகளை நோக்கி வர வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


உருவாகுமா ஃபெங்கல் புயல் 


அந்த வகையில், ஒருவேளை நாளை புயல் உருவாகும்பட்சத்தில் சௌதி அரேபியா பரிந்துரைத்த ஃபெங்கல் (FENGAL) என்ற பெயர் இந்த புயலுக்கு சூட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பெருங்கடலில் உருவாகும் புயல்களுக்கு ஆசிய நாடுகள் அவற்றுக்கு பெயர் சூட்டும் வழக்கம் உண்டு. அதன்பேரில், இந்த முறை சௌதி அரேபியா பரிந்துரைத்திருக்கிறது எனலாம்.


மேலும் படிக்க | சென்னை புதுவண்ணாரப்பேட்டை: முழங்கால் அளவு தேங்கிய மழைநீரால் இன்னல்


20 செ.மீ., மழைப்பதிவு


தற்போது இந்த புயல் இன்னும் ஓரிரு நாள்களில் தமிழக கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் அடுத்த சில நாள்களுக்கு கனமழை தொடரக்கூடும். அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு (நாளை காலை 8.30 மணிவரை), மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் 20 செ.மீ., வரை அதி கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது எனவும் பாலசந்திரன் தெரிவித்தார்.


சென்னையில் கனமழை


சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் இன்று, நாளை, நாளை மறுதினம் என மூன்று நாள்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும். இதனால் மூன்று நாள்களுக்கும் இங்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று நகர் முழுவதும் பரவலாக மழை பெய்தது. ஓஎம்ஆர் சாலைகளில் மழைநீர் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையை பொறுத்தவரை அதிகபட்சமாக பள்ளிக்கரணையில் 6.7 செ.மீ., மழை பொழிவு பதிவாகி உள்ளது. 


இன்று இரவு 10 மணி வரை... லேட்டஸ்ட் அப்டேட்


அதேபோல், விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என பாலசந்திரன் தெரிவித்திருந்தார். தற்போதைய லேட்டஸ்ட் அப்டேட்டாக இரவு 10 மணிவரை தமிழ்நாட்டின் 34 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


பள்ளி, கல்லூரி விடுமுறை அப்டேட்கள்


அடுத்தடுத்த நாள்களில் அதி கனமழை முதல் மிக கனமழை எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக இருப்பதால் பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, நாளை நடைபெற இருந்த தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. 


அதி கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை (நவ. 27) திருவாரூர், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கும், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கும் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடலூரில் உள்ள சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கும் நாளை விடுமுறை அறிவித்து அதன் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, தஞ்சாவூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெற இருக்கும் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எச்சரிக்கை காரணமாக இன்றைய தேர்வுகளையும் அந்த பல்கலைக்கழகம் ஒத்திவைத்திருந்த நிலையில், ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் வேறு நாள்களில் நடைபெறும் என்றும் தேர்வு தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பிருப்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த இரண்டு மாவட்டங்களில் தற்போதைக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.


மேலும் படிக்க | தனியார் வானிலையாளர் பிரதீப் ஜான் கூறும் எச்சரிக்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ