சென்னை: குஜராத் மாநிலத்தில் அதானி குழுமத்தால் நடத்தப்படும் முந்த்ரா துறைமுகத்தில் 2,988.21 கிலோ எடையும், 21,000 கோடியிலான சந்தை மதிப்பும் கொண்ட போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, இசுலாமியரென்பதாலேயே ஷாருக்கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா? என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் தனது கண்டனத்தையும் சீமான் பதிவு செய்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 


நடிகர் ஷாருக்கானின் மகனான ஆர்யன் கானைப் போதைப்பொருள் பயன்படுத்தியதாகக் கைதுசெய்த வழக்கில் அதிகார அத்துமீறலும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளும் நடந்தேறி வருவது நாடெங்கிலும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 


இவ்வழக்கில் கைதுசெய்யப்பட்டவர் ஒரு இசுலாமியர் என்பதாலேயே, அவரைக் குறிவைத்து அரசதிகாரம் காய்களை நகர்த்தி வருவது கடும் கண்டனத்திற்குறியது. ஆர்யன் கானை விடுவிக்க 25 கோடிகள் வரை பேரம் பேசப்பட்டன என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.


ஆர்யன் கானையைப் பிணையில் விடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு, போதை விருந்து நடந்ததாகச் சொல்லப்படும் சொகுசுக்கப்பல் நிர்வாகத்தின் மீது எடுத்த நடவடிக்கையென்ன? என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. தவிர்க்க இயலா பல்வேறு ஐயங்களும், விடைதெரியா கேள்விகளும் எழும் நிலையில், ஷாருக்கானின் மகன் என்பதாலேயே, இவ்வழக்கில் ஆர்யன் கான் சிக்க வைக்கப்பட்டுள்ளார் எனும் வாதத்தில் உண்மையில்லாமல் இல்லை.


குஜராத் மாநிலத்தில் அதானி குழுமத்தால் நடத்தப்படும் முந்த்ரா துறைமுகத்தில் 2,988.21 கிலோ எடையும், 21,000 கோடியிலான சந்தை மதிப்பும் கொண்ட போதைப்பொருள் கடத்தப்பட்ட வழக்கில் ஆர்வம் காட்டாத மத்தியில் ஆளும் பாஜக அரசு, போதைப்பொருள் பயன்படுத்தியதாக ஆர்யன் கானை கைதுசெய்த வழக்கில் காட்டும் முனைப்பும், தீவிரமும் பாஜக அரசின் அப்பட்டமான அதிகார தலையீட்டையும், அரசியல் இலாப நட்ட கணக்கீடுகளையுமே காட்டுகிறது. 


முந்த்ரா துறைமுகத்தில் போதைப்பொருள் கடத்தப்பட்ட விவகாரத்தில் பின்புலத்திலுள்ள வலைப்பின்னல் குறித்தும், கடத்தல் பெரும் புள்ளிகள் குறித்தும் வாய்திறக்காது, அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளைப் பாய்ச்சாத இந்நாட்டின் ஆட்சியாளர்கள், ஆர்யன் கான் வழக்கில் காட்டும் அதீதக்கவனம் இயல்பானதல்ல.


பழங்குடி மக்களுக்காகப் போராடிய பெருமகன் ஐயா ஸ்டோன் சுவாமி அவர்களைப் பொய்யான வழக்கில் கொடுஞ்சட்டத்தைக் கொண்டு பிணைத்து, அவரைச் சிறைக்குள்ளேயே சாகடித்த இந்நாட்டின் ஆட்சியாளர்கள், தங்களது அரசியல் ஆதாயத்திற்காகவும், பழிவாங்கல் போக்குக்காகவும் எதை வேண்டுமானாலும் செய்வார்கள்.


எவரை வேண்டுமானாலும் கைதுசெய்வார்கள் என்பது வெளிப்படையானது. அந்த வகையில், குடியுரிமைச் சட்டத்திருத்தத்திற்கு எதிராகப் போராடியதற்காக உமர் காலித், சர்ச்சில் இமாம், அப்துல் காலித், சைபி, இஷ்ரத் ஜான், மீரான் ஹைதர், குல்பீ ஷா, ஷீபா உர் ரகுமான் போன்றவர்களையும், உத்திரப்பிரதேசத்தில் ஒடுக்கப்பட்ட பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள் குறித்துச் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர் சித்திக் கப்பனையும் இசுலாமியர் எனும் ஒற்றைக் காரணத்திற்காகவே, ஊபா சட்டத்தின் கீழ் சிறைப்படுத்தி வதைத்து வருவது அரசப்பயங்கரவாதத்தின் உச்சமாகும்.


மதச்சார்பின்மை எனும் மகத்தானக் கோட்பாட்டினைக் குலைத்து, சொந்த நாட்டு மக்களையே மதத்தால் பிளந்து பிரிந்து, மத ஒதுக்கல் செய்யும் மத்தியில் ஆளும் மோடி அரசின் செயல் வெட்கக்கேடானது. பாஜக அரசின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு வன்மையான எதிர்ப்பைப் பதிவுசெய்கிறேன்.


இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR