நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,"கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் சிலிண்டர் வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழந்தது தொடர்பான வழக்கு விசாரணையை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும். தேசிய புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இஸ்லாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றஞ்சாட்டுகள் வைக்கப்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசிய புலனாய்வு முகமையின் வசம் இவ்வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல. வன்முறைச்செயலில் ஈடுபட்டு, சமூக அமைதியைக் குலைக்க முனைவோர் எவராயினும் அவர்களை சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு, கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்துக்கும் இடமில்லை. 


'மதக்காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடு'


அதேசமயம், இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே, அச்சமூகத்தினரையே குற்றவாளிகளாகச் சித்தரிக்கும் போக்கென்பது மிக ஆபத்தானது. விபத்து குறித்த காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே, இக்கோர நிகழ்வுக்கு மதச்சாயம் பூசுவது அப்பட்டமான மதக்காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடேயாகும். 


அவ்விபத்து நடந்தவுடன் உடனடியாகக் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்து, உரிய ஒத்துழைப்பு வழங்கி வரும் இஸ்லாமிய மக்களைக் குற்றப்படுத்தும் நோக்கோடு மதவாதிகளால் செய்யப்படும் கருத்துருவாக்கங்களும், கட்டமைப்புகளும் கடும் கண்டனத்திற்குரியது" எனக் குறிப்பிட்டுள்ளார். 


மேலும் படிக்க | 'இந்த 3 விஷயங்களை செயல்படுத்துங்கள்' - ஸ்டாலினுக்கு அண்ணாமலை சொல்லும் அட்வைஸ்


மேலும், "காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே, இவ்வழக்கை அவசர அவசரமாக தேசியப்புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அவசியமென்ன வந்தது? இவ்வழக்கில் பன்னாட்டுத்தொடர்பு இருக்கும் வாய்ப்புள்ளதெனக் காரணம் கற்பிக்கும் திமுக அரசு, விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பே, அத்தகைய முன்முடிவுக்கு எதன் அடிப்படையில் வந்தது? துப்பறிந்து விசாரணை செய்வதில் பெயர்பெற்ற தமிழகக் காவல்துறையிடம் உள்ள வழக்கை தேசியப் புலனாய்வு முகமையிடம் ஒப்படைப்பதன் மூலம் தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது காவல்துறையின் மீதே நம்பிக்கையை இழந்துவிட்டாரா முதல்வர்? எதற்காக இந்த முடிவு? என அடுக்கடுக்காக சீமான் கேள்வியெழுப்பியுள்ளார்.


'பாஜக வழியில் திமுக'


தொடர்ந்து,"காவல்துறையின் மீதே மதச்சாயம் பூசி, மாநில உளவுத்துறையின் தோல்வியென குற்றஞ்சாட்டும் பாஜகவின் கூற்றை ஏற்றுக்கொண்டுதான் வழக்கை கைமாற்றிவிடுகிறதா மாநில அரசு? தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்தியப் புலனாய்வு விசாரணை அமைப்பையே கையகப்படுத்தி, பழிவாங்கும் நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் மீது பாஜக அரசு ஏவி வரும் நிலையில், கட்டற்ற அதிகாரத்தைக் கொண்டிருக்கும் தேசியப் புலனாய்வு முகமையை இதுபோன்ற வழக்குகளில் நுழைய வழிவகை செய்வது மாநிலத்தின் இறையாண்மைக்கு எதிரானது இல்லையா?. 


ஸ்டோன் சுவாமி, வரவர ராவ், ஆனந்த் டெல்டும்டே போன்ற சமூகச்செயற்பாட்டளர்கள் பீமா கொரேகான் வழக்கில் தேசியப்புலனாய்வு முகமையால் கைதுசெய்யப்பட்டுள்ளது போல, இவ்வழக்கில் அப்பாவி இஸ்லாமியர்களும் கைதுசெய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது?. 


'இதுதான் மாநிலத் தன்னாட்சியா?'


தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க, தேசிய புலனாய்வு முகமைக்கு வாசல்திறந்து விடுவதுதான் மாநிலத் தன்னாட்சியைக் கட்டிக்காக்கிற இலட்சணமா" என முதலமைச்சர் ஸ்டாலினை சாடியுள்ளார். 


தொடர்ந்து அந்த அறிக்கையில் சீமான்,"ஆகவே, இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, அக்கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோருகிற அதேவேளையில், தேசியப் புலனாய்வு முகமையிடம் வழக்கைத் தாரைவார்த்திருப்பதற்கு எனது எதிர்ப்பினைப் பதிவுசெய்கிறேன். இத்தோடு, இக்கொடும் நிகழ்வை அடிப்படையாக வைத்து மதப்பூசலுக்கு வித்திட்டு, அரசியல் ஆதாயம் தேட முயலும் மதவாத சக்திகளின் சூழ்ச்சியை முறியடிக்க ஜனநாயக சக்திகள் அணிதிரள வேண்டுமென வலியுறுத்துகிறேன்" என கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும் படிக்க | கோவை வெடிவிபத்து : பன்னாட்டு தொடர்புக்கு வாய்ப்பு... ஏன்ஐஏ விசாரணைக்கு மாற்ற ஸ்டாலின் பரிந்துரை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ