கையில் மை வைத்து ஓட்டுப் போட சென்ற மூதாட்டி பலி... உயிரிழப்பு 3 ஆக உயர்வு!
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் வாக்களிக்க வந்த மூன்று பேர் வாக்குச்சாவடிகளிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Lok Sabha Election 2024: தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலையில் 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து 39 மக்களவை தொகுதிக்கு மட்டுமின்றி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலின் வாக்குப்பதிவும் இன்று நடைபெற்று வருகிறது.
அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், கட்சி வேட்பாளர்கள், சாமானிய மக்கள் அனைவரும் ஜனநாயக முறைப்படி வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களின் தகுந்த ஆவணங்களை சமர்பித்து தங்களின் வாக்குகளை செலுத்தி ஜனநாயக உரிமையை நிலைநாட்டி வருகின்றனர். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. குறிப்பாக, ஜூன் 4ஆம் தேதிதான் தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
குறைவான வாக்குகளே பதிவு
அந்த வகையில், தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுவதால் மக்கள் ஆர்வமுடன் காலை 7 மணியில் இருந்து வாக்களித்து வருகின்றனர். காலை 11 மணிவரை தமிழ்நாடு முழுவதும், 24.37 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியிலும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையிலும் வாக்குள் பதிவாகியிருந்தன. சென்னையின் மூன்று தொகுதிகளிலும் வழக்கம் போல் குறைவான வாக்குகளே பதிவாகி வருகின்றன.
மேலும் படிக்க | நாங்க போட்டாச்சு... நீங்க? ஜனநாயக கடமையாற்றிய தமிழக அரசியல் பிரமுகர்கள்!!
மை வைத்த பின் உயிரிழப்பு
இதுஒருபுறம், தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு வந்த மூன்று பேர் இன்று உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாப்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வாக்குச்சாவடி எண் 250இல் கொண்டயம்பள்ளி ரோடு பகுதியை சேர்ந்த ரங்கசாமி மனைவி சின்னப்பொண்ணு (77) என்ற மூதாட்டி தனது மகன் கோவிந்தராஜ் மற்றும் மருமகள் சித்ரா ஆகியோருடன் வாக்களிக்க சென்றுள்ளார்.
மேலும் இருவர் பலி
அப்போது வாக்களிப்பதற்காக வாக்குச்சாவடி மையத்தில் பதிவு செய்து கைவிரலில் மை வைத்து வாக்களிக்க சென்றபோது மூதாட்டி சின்னப்பொண்ணு தீடீரென வாக்கு மையத்திலேயே மயங்கி விழுந்தார் அங்கு வந்த செந்தாரப்பட்டி அரசு மருத்துவர்கள் பரிசோதித்தபோது அந்த மூதாட்டி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த தம்மம்பட்டி போலீஸார் மூதாட்டி உடலை கைபற்றி உடற்கூறாய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வாக்கு சாவடியில் மூதாட்டி சின்னப்பொன்னுதனது ஜனநாயக கடமையாற்ற சென்றபோது மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே சேலத்தில், சூரமங்கலம் பகுதியில் தனது மனைவியுடன் வாக்களிக்க வந்த பழனிசாமி (65) என்பவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். வெயிலின் தாக்கம் காரணமாக சின்னப்பொண்ணு மற்றும் பழனிசாமி ஆகியோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர். சேலத்தில் வாக்களிக்க வந்த இரண்டு மூத்த குடிமக்களும் உயிரிழந்த நிலையில், அரக்கோணம் அருகே நெமிலி கிராமத்தை சேர்ந்த ஒன்றவரும் உயிரிழந்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
தலைமை தேர்தல் அதிகாரி கூறியது என்ன?
அரக்கோணம் அருகே நெமிலி கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ் என்பவர் வாக்குச்சாவடியில் வாக்களிக்க நிற்கும் போது மயங்கி விழுந்து உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் வாக்களிக்க வாக்குச்சாவடி வந்த உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக உயிர்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளில் உயிரிழந்தது குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறுகையில், "இதுகுறித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் அறிக்கை கோரியுள்ளோம். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை மேற்கொள்வோம்" என்றார்.
மேலும் படிக்க | வாக்காளர்கள் கவனத்திற்கு... ஓட்டு போட செல்லும்போது 'இதை' கொண்டு போகாதீர்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ