ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், கைதான 8 பேருக்கும் தொடர்பே இல்லை - குண்டை தூக்கிப்போடும் பிஎஸ்பி!
Armstrong Murder Latest News Update: பிஎஸ்பி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், தற்போது கைது செய்யப்பட்டுள்ள 8 பேருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அக்கட்சியின் மாநில செயற்குழு தெரிவித்துள்ளது.
BSP Leader Armstrong Murder Latest News Update: பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. மாநில அளவில் மட்டுமின்றி தேசிய அளவிலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தலித் செயற்பாட்டாளராகவும், வழக்கறிஞராகவும், தேசிய கட்சியின் மாநில தலைவராகவும் இருக்கும் ஆம்ஸ்ட்ராங்கை பொதுவெளியில் படுகொலை செய்த சம்பவம் மாநிலத்தின் சட்ட ஒழுங்கின் மீது கடும் விமர்சனங்களை கிளப்பி உள்ளது.
அந்த வகையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலையை கண்டித்து அக்கட்சியின் மாநில செயற்குழு கூட்டத்தின் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சியின் மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆம்ஸ்ட்ராங்கின் படுகொலை திட்டமிட்ட அரசியல் படுகொலையாகும் என்றும் அதனால் இக்கொலை வழக்கினை சிபிஐ கொண்டு விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அரசு மரியாதை கோரிக்கை
ஆம்ஸ்ட்ராங்கின் உடலை அரசு மரியாதை உடன் அரசு பொது இடத்தில் அடக்கம் செய்வதற்கு இடம் ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கையை முன்வைத்துள்ளது. இதுமட்டுமின்றி, இவ்வழக்கில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு கருத்தும் இந்த செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | ஆம்ஸ்ட்ராங் கொலை பழிக்குப் பழி சம்பவமா...? பின்னணி என்ன? - வெளியான பரபரப்பு தகவல்கள்
'உண்மை கொலையாளி...'
தற்போது வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது எனவும் அதனால் உண்மை கொலையாளியை கண்டுபிடித்து கொலையின் பின்னணிகளை கண்டறிய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, காவல் துறையின் உளவுத்துறை பிரிவின் தோல்வியால் இப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதால் உளவுத்துறை ADGP-யை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழகம் வரும் மாயாவதி
தற்போது கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் உடல் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று இறுதி சடங்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு மரியாதை செலுத்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி இன்று உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் இருந்து சென்னை வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில மணிநேரங்களிலேயே மாயாவதி அவரது X பக்கத்தில்,"தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், அவரது சென்னை வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். குற்றவாளிகள் மீது மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என பதிவிட்டிருந்தார்.
முதல்வர் இரங்கல்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆம்ஸ்ட்ராங்கிற்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார். அவரது X பக்கத்தில்,"பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு பல்வேறு கட்சியினர் தங்களின் இரங்கலை தெரிவித்திருந்தனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ