அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும்: MKS
ஒரு ரேஷன் கார்டுக்கு தலா 5000 ரூபாய் என்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நேரடி நிதியுதவி அளித்து அவர்களின் வாழ்வில் குறைந்தபட்ச ஒளியையாவது ஏற்றிட முன்வர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்!!
ஒரு ரேஷன் கார்டுக்கு தலா 5000 ரூபாய் என்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நேரடி நிதியுதவி அளித்து அவர்களின் வாழ்வில் குறைந்தபட்ச ஒளியையாவது ஏற்றிட முன்வர வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தல்!!
முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசின் தவறான நிதி மேலாண்மையால் மாநில கடன் ரூ.4.56 லட்சம் கோடியாக உயர்ந்து வருவாய் பற்றாக்குறை ரூ.25,000 கோடி என்ற நிலை ஏற்பட்டுவிட்டது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.
2011-ல் இருந்து கடகடவென உயர்ந்து கொண்டிருக்கும் ரூ.4.56 லட்சம் கோடி கடனும், 2014-ல் இருந்து தொடர்ந்து அதிகரித்து 2019-20 நிதியாண்டின் திருத்தப்பட்ட மதிப்பீட்டிலேயே 25 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய்ப் பற்றாக்குறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிதி நிலைமையும் மேலும் அதிகமாகி - தமிழகத்தின் நிதி மேலாண்மையில் அ.தி.மு.க. ஆட்சி முற்றிலும் தோல்வியடைந்து நிற்பது கவலையளிக்கிறது.
இயல்பான நிதியாண்டிலேயே நிதி மேலாண்மையை ஒழுங்காகச் செய்ய முடியாமல் – கடன் வாங்குவதை மட்டுமே தனக்குத் தெரிந்த ஒரே 'நிதி நிர்வாக உத்தியாகக்' கற்றுள்ள முதலமைச்சர் திரு. பழனிசாமி அரசு - கொரோனா பேரிடர் காலத்தில் அசாதாரணமாக - மிக மோசமாகத் தோல்வியடைந்து, தமிழக மக்கள் ஒவ்வொருவரின் தலையிலும் தாங்க முடியாத கடன் சுமையை ஏற்றி வைத்து வேடிக்கை காட்டிக் கொண்டிருக்கிறது.
அதிகக் கடன் வாங்குவது, உட்கட்டமைப்புத் திட்டங்களில் செய்ய வேண்டிய முதலீடுகளைத் தடுத்து - அதிக வட்டி செலுத்துவது ஒன்றே அரசின் பரிதாபகரமான பணி என்ற நிலையை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு, நகர்த்தி அகற்றிட முடியாத தடைக்கல்லை உருவாக்கி, இந்த 9 ஆண்டுகளில் அ.தி.மு.க. அரசு தமிழகப் பொருளாதாரத்திற்கு மன்னிக்க முடியாத துரோகத்தைச் செய்து விட்டது.
2015, 2019 ஆகிய ஆண்டுகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடுகள், முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களின் முதலீடு திரட்டும் 'உலகச்சுற்றுலா', தற்போது கொரோனா காலத்தில் போடப்படும் கண் துடைப்பு 'புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்' என அனைத்திலும் இதுவரை முதலீடுகள் வரவில்லை. வெற்று அறிவிப்புகள், விளம்பரத்திற்காக மட்டுமே அணிவகுத்து நிற்கின்றன. இதுவரை அதிகாரபூர்வமாக அ.தி.மு.க. அரசு 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகளை ஈர்க்க 'புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்' போட்டுவிட்டதாக அறிவிப்பு வெளியிட்டு விட்டது. இதில் 10 சதவீத புதிய முதலீடுகளாவது வந்ததா? அறவே இல்லை.
ALSO READ | ஆகஸ்ட் 17 முதல் தமிழகத்தில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் E-Pass: முதல்வர் கெ.பழனிசாமி
தமிழகத்திற்குக் கிடைத்துள்ள புதிய முதலீடுகள் குறித்து ஒரு வெள்ளை அறிக்கையைக் கூட வெளியிட முடியாத, கையாலாகாத அரசாகவே இன்னும் சில மாதங்களில் இடத்தைக் காலி செய்துவிட்டு, வீட்டுக்குச் செல்லப் போகிறது அ.தி.மு.க. அரசு.
2020-21-ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை வெளியிட்ட கையோடு, கொரோனா பேரிடர் துவங்கி விட்ட நிலையில் - அந்த நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் பற்றி - நிதி ஒதுக்கீடு குறித்து மறுபரிசீலனை செய்து நிதி நிலையை மறுவரையறை செய்துகொள்ள வேண்டுமென்ற ஆக்கபூர்வமான ஆலோசனையை வழங்கினேன். ஆனால் வேறு எதெதெற்கோ நேர காலம் இருக்கும் அ.தி.மு.க. அரசுக்கு, நான் வழங்கிய ஆலோசனை குறித்துச் சிந்தித்துப் பார்க்கவே இதுவரை நேரமில்லாமல் போய்விட்டது.
முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் திரு. ரங்கராஜன் அவர்கள் தலைமையில் ஒரு குழுவை மே மாதம் அமைத்த அரசு - அந்தக் குழுவிடம் இடைக்கால அறிக்கை கொடுங்கள் என்று கூடக் கேட்கவில்லை. குழு அமைத்து மூன்று மாதங்களுக்கு மேலாகியும் இதுவரை அறிக்கை பெறுவது குறித்தும் முதலமைச்சர் கவலைப்படவில்லை. ஆனால், வழக்கம் போல் “110 விதியின்” கீழ் பகட்டான அறிவிப்பு வருகிறதே தவிர - அர்த்தமுள்ள நடவடிக்கைகள் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை தெரியவே இல்லை!
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நிதிகளையும் கேட்டுப் பெறவில்லை. கேட்பதாக 'பாவலா' மட்டும் 'சாமர்த்தியம்' என்று நினைத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதுவரை பல்வேறு பேரிடர்களுக்கு உரிய நிதியையும் பெறவில்லை. பிப்ரவரி மாதத்தில் தமிழகத்திற்கு வர வேண்டிய ஜி.எஸ்.டி வரிப் பாக்கி மட்டும் மத்திய அரசிடம் 12263 கோடி ரூபாய் இருந்தாலும் - அதையும் அழுத்தம் கொடுத்துப் பெறுவதற்கு ஆர்வம் காட்டவில்லை.
ஒவ்வொரு முறை பிரதமரிடம் பேசும்போதும் 'கொரோனா நிதி' கேட்பதை மட்டும் அறிக்கையாக வெளியிடும் முதலமைச்சர், அப்படிக் கேட்டதில் பத்து சதவீத நிதி கூட வரவில்லை என்று வெளிப்படையாக ஏனோ பேசவே அச்சப்படுகிறார். மத்திய அரசு 6 ஆயிரம் கோடி ஒதுக்கி விட்டோம் என்று கூறிய பிறகும் - இன்றுவரை அந்த நிதி வந்ததா இல்லையா என்பது குறித்து அதிகாரபூர்வமாக ஒரு விளக்கத்தைத் தமிழக மக்களுக்குக் கொடுக்கவே தயங்கி நடுங்கி நிற்கிறார்.
மத்திய அரசிடம் அதட்டிக் கேட்பது, தனது பதவிக்கு ஆபத்து என்ற சுயநலத்தின் விளைவாக, தமிழகத்தின் நிதி உரிமையைத் தாரை வார்த்து விட்டார்.
‘நான் அழுவது போல் அழுது கொண்டே இருக்கிறேன்; நீ அடிப்பது போல் தொடர்ந்து அடித்துக் கொண்டே இரு' என்ற நாடகம் முடிவில்லாமல் நடந்து கொண்டே இருக்கிறது. இந்த நாடகத்தைத் தமிழக மக்கள் நம்பவே இல்லை என்பது இருதரப்புக்கும் தெரியாது போலும்!
அ.தி.மு.க. அரசின் மிகமோசமான நிதி மேலாண்மை தோல்வியால், தமிழகம் மேலும் கடனாளி மாநிலமாக அடி ஆழத்திற்குத் தள்ளப்படும் அபாயகரமான சூழல் உருவாகியுள்ளது.
வருவாய்ப் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை இரண்டும், அ.தி.மு.க. ஆட்சியின் இணை பிரியாத கைக் குழந்தைகளாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது; அவை இரண்டும் கைகளில் மாட்டப்பட்டிருக்கும் விலங்குகள்.
ALSO READ | PM Kisan விவசாயிகள் நலத்திட்ட ஊழலில் CBI விசாரணை தேவை: தமிழக விவசாயிகள்
தமிழக நிதிநிலை அறிக்கையில் 12 சதவீதம் – அதாவது 36311 கோடி ரூபாயை வாங்கிய கடன்களுக்காக மட்டும் வட்டி செலுத்துகிறது அ.தி.மு.க. அரசு. விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் - இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் செலவிட வேண்டிய அரசின் நிதியை, ஒரு பக்கம் வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவும் - இன்னொரு பக்கம் ‘கமிஷன்’ அடிப்பதற்கு வாய்ப்புள்ள திட்டங்களிலும் செலவழித்துக் கொண்டிருக்கிறது.
கொரோன பேரிடர் காலம் முடிந்த பிறகு தமிழக நிதி நிலைமை இன்னும் கடுமையாகி - ‘ஐ.சி.யூ’-விற்கு எடுத்துப் போகும் சூழல் எழுந்து விட்டது. அளவுக்கு அதிகமான கடன்களை வாங்கி - ஒட்டுமொத்த தமிழகத்தின் நிதி மேலாண்மையையும் ஒரு பாழுங்கிணற்றில் தள்ளி மூழ்கடித்து விட வேண்டும் என்ற தீய நோக்குடன் - அவசியமற்ற ஆடம்பர டெண்டர்கள் - தாராள கமிஷனுக்கான தரமற்ற வேலைகள் - ஊரடங்கிலும் வெற்று விளம்பர வெளிச்சம் ஆகியவற்றிற்கு மட்டும் அரசு நிதியை அள்ளிவிடும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, தனக்கு 'விபத்தின் மூலம்' கிடைத்த பதவியைக் கொண்டு - தமிழக மக்களின் வயிற்றில் ஓங்கி அடித்து விட்டார் என்றால் மிகையாகாது.
நிதிநிலை அறிக்கைகளில் நிரந்தரமாகக் குடியேறிவிட்ட 'கடன், வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை' எல்லாம், அ.தி.மு.க. அரசின் நிதி மேலாண்மை குளறுபடிகளின் நிலைக்கண்ணாடியாகப் பல்லிளிக்கிறது.
தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தி - தொழில் வளர்ச்சிக்கு கேடு விளைவித்து - இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்காத ஒரு கேடுகெட்ட ஊழல் ஆட்சியை அளித்து - தமிழகத்தின் பொருளாதாரத்தை முதலமைச்சர் திரு. பழனிசாமி அடியோடு புதைத்து விட்டதைத் தமிழக மக்கள் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள்.
ஆகவே, ஒரு கடைசி வாய்ப்பாக இப்போதாவது முதலமைச்சர் திரு பழனிசாமி மனம் திருந்தி - மக்களின் கொரோனா கால பாதிப்பையும், நிதி நிர்வாக சீரழிவையும் மனதில் வைத்து, நிதிநிலை அறிக்கையை மறு ஆய்வு செய்து - எஞ்சியிருக்கும் ஆறு மாதங்களில் ஆக்கபூர்வமான நடவடிக்கை எதையாவது எடுக்க முடியுமா என்று, இயன்றால் ஆராய்ச்சி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கொரோனா பேரிடரின் மீளாத் துயரில் ஒவ்வொரு குடும்பமும் மூழ்கியிருப்பதால் - ஒரு ரேஷன் கார்டுக்கு தலா 5000 ரூபாய் என்று அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் நேரடி நிதியுதவி அளித்து - அவர்களின் வாழ்வில் குறைந்தபட்ச ஒளியையாவது ஏற்றிட முன்வர வேண்டும் என்றும் மீண்டும் ஒருமுறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.