TN Budget 2022: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்
Tamil Nadu Budget 2022: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு1,230.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் 2022-2023-ம் ஆண்டுக்கான காகிதம் இல்லா பட்ஜெட் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் வாசித்து நிறைவு செய்தார் நிதியமைச்சர். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு முழுமையாக தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன் குறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ள முழுமையான தகவல்களை குறித்து பார்ப்போம்.
ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM) 30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும்.
அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் பகுக்கக்கூடிய கொள்முதல்களில், ஐந்து சதவீதம் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு (Particularly Vulnerable Tribal Groups) இந்த ஆண்டு 20.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
வரும் நிதியாண்டில் மேலும்,1000 புதிய வீடுகள் பண்டைய பழங்குடியினருக்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இம்மதிப்பீடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலன்:
தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களைப் பழுதுபார்ப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு சென்னையில் உள்ள வெஸ்லி தேவாலயம், புனித தோமையர் மலை தேவாலயம், திருநெல்வேலியில் உள்ளகால்டுவெல் தேவாலயம், நாகர்கோவிலில் உள்ள தூய சேவியர் தேவாலயம், சென்னையில் உள்ள நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி தர்கா, நாகூர் தர்கா ஆகிய தொன்மையான வழிபாட்டுத் தலங்கள்புனரமைக்கப்படும்.
இப்பணிகளுக்கு, வரும் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
இம்மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு1,230.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித் துறைக்கு 36,895.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR