முரசொலி நில சர்ச்சை: வழக்கின் தீர்ப்பு தேதியை குறித்த சென்னை உயர்நீதிமன்றம்
முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக அளித்த புகாரில், தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் அனுப்பிய நோட்டீசை எதிர்த்த வழக்கில் நாளை மறுதினம் தீர்ப்பளிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
திமுக-வின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"-யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணைக்கு அனுப்பபட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக் கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் P.வில்சன் ஆஜராகி, பஞ்சமி நிலம் அல்ல என அரசு அறிக்கை அளித்ததால், புகாரை முடிக்க முடிவெடுத்துள்ளதாக ஆணையம் கூறியதாகவும், ஆனால் திடீரென புகார் நிலுவையில் தான் உள்ளதாகவும் குறிப்பிட்டார். பஞ்சமி நிலம் என்பதற்கான ஆதாரங்களை புகார்தாரர் சமர்ப்பிக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
அரசியல் காரணத்திற்காக தேசிய எஸ்.சி. ஆணையம் இந்த புகாரை நிலுவையில் வைத்துள்ளதாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் குறிப்பிட்டார். ஆணையம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது எனவும், பஞ்சமி நிலமா இல்லையா என வருவாய் துறை தான் விசாரிக்க முடியுமே தவிர, தேசிய எஸ்.சி. ஆணையம் தலையிட முடியாது என தெரிவித்தார். தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தரப்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் A.R.L.சுந்தரேசன் ஆஜராகி பட்டா மற்றும் விற்பனை பத்திரம் ஆகியவை உரிமையாளரை முடிவுசெய்வதற்கான இறுதியான ஆதாரம் அல்ல எனவும், ஆணையத்தின் விசாரணைக்கு தடை விதிக்க கூடாது எனவும், தொடர்வதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
புகார்தாரர் சீனிவாசன் தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.ரவி ஆஜராகி, வழக்கு நிலுவையில் இருந்த போது பட்டா வழங்கப்பட்டதாகவும், அதனால் ஆணையம் விசாரணை செய்வது சரியானது தான் என தெரிவித்தார். வில்லங்க சான்றிதழில் 1974ல் மாதவன் நாயர் பெயரோ, அஞ்சுகம் பதிப்பகம் பெயரோ இல்லை என்றும், திருவண்ணாமலை நிலம் தொடர்பாகத் தான் உள்ளதாக தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பளிப்பதாக நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அறிவித்தார்.
மேலும் படிக்க | கனமழை காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ