டிடிவி தினகரனை சந்தித்தது உண்மை தான் :ஓபிஎஸ் அதிரடி
குறுக்குவழியில் ஆட்சி பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தினகரன் செயல்பட்டு வருகிறார் என சென்னையில் செய்தியாளர்களை சந்திப்பில் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீா் செல்வம் தெரிவித்தார்.
முதல்வா் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு துணைமுதல்வர் ஓ.பன்னீா் செல்வம் கடந்த ஆண்டு ஜுலை 12 ஆம் நாள் தன்னை சந்தித்தார் என அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருந்தார். இது தமிழக அரசியல் வட்டராத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
இதனையடுத்து, இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த துணைமுதல்வர் ஓ.பன்னீா் செல்வம் கூறியது,
டிடிவி தினகரன் குற்றச்சாட்டு அனைத்தும் தவறானது. தான் முதல்-அமைச்சராக முடியவில்லை என்ற மனச்சுமையில் சுற்றி வருகிறார் தினகரன். அதனால் அபாண்டமான குற்றச்சாட்டுகளை என்மீது கூறிவருகிறார். ஆனால் அவரை சந்தித்தது உண்மை தான். அவர் மனமிட்டு பேச விரும்பியதாக கூறியதால் தான், அவரை சந்திக்க சென்றேன். அவரை சந்திக்க ஏற்ப்பாடு செய்த நபர் இன்று என்னிடம் வந்து, அதற்காக மன்னிப்பு கேட்டார்.
எப்பொழுது அதிமுகவில் மீண்டும் சேர்ந்தனோ, அன்று முதல் டிடிவி தினகரனை சந்திக்கவில்லை. குறுக்குவழியில் ஆட்சி பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தினகரன் செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரால் ஒருபோதும் கட்சி மற்றும் ஆட்சியை கைப்பற்ற முடியாது. எனக்கு குறுக்கு வழியில் ஆட்சியைபிடிக்க எண்ணம் இல்லை.
2014 ஆம் ஆண்டு அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட தினகரன் தற்போது வரை கட்சியில் சேர்க்கவில்லை. தினகரன் செய்த துரோகம் குறித்து எனக்கும், அம்மையார் ஜெயலலிதாவுக்கு மட்டும் தான் தெரியும்.
சசிகலா குடும்பத்திற்கு எதிராக எனது தர்மயுத்தம் தொடரும். அரசின் ஒரு அங்கமாக இருக்கும் நான், ஏன் அரசை கவிழ்க்க நினைக்க வேண்டும். இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.