தமிழக மீனவர்களை சிறைப்பிடித்த தமிழக மீனவர்கள்! தொழில்போட்டியால் குறையும் மீனவர்களின் ஒற்றுமை!
கன்னியாகுமரியைச் சேர்ந்த 39 மீனவர்களை நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இடிந்தகரை மீனவர்கள் சிறைப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயற்கை பேரிடர்கள் என்று எதுவாகினும் முதலில் பாதிக்கப்படுவது மீனவர்கள்தான். சென்னை பேரிடர் வெள்ளத்தின் போது ஊரே வெள்ளத்தில் தத்தளித்தது. காசிமேடு முதல் பட்டினம்பாக்கம், டுமீல்குப்பம் வரை கரையில் இருந்த படகுகள் ஊருக்குள் உலா வந்த அரிய காட்சிகளை மக்கள் கண்டார்கள். வெள்ளத்தில் தத்தளித்த குடும்பங்களை படகுகள் மூலம் மீட்டு பத்திரமாக காப்பாற்றிய மீனவர்களை சென்னை மக்கள் மட்டுமல்லாமல் தமிழகமே கொண்டாடியது. இந்த பாராட்டுக்கு உரியவர்கள்தான் மீனவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஒன்று, மீனவர்களை இப்படி பாராட்டிப் புனிதப்படுத்தி தூக்கி வைத்துவிடுகிறோம் அல்லது இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு போன்ற செய்திகளில் வைத்து ‘உச்’ கொட்டுகிறோம். இதைக் கடந்து மீனவர்களின் வாழ்வியலும், அவர்களின் சிக்கல்களும் இன்னும் பொதுமையத்தில் விவாதிக்கப்படவே இல்லை என்று தோன்றுகிறது.
மேலும் படிக்க | தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்: S. Jaishankar
சினிமாக்களில் காட்டப்படும் மீனவர்களின் வாழ்க்கையும் பெரும்பாலும் ‘போலி’ என்று முத்திரை குத்தப்பட்டாயிற்று. மீனவர்களைக் குறித்து கற்பனையாக புனையப்பட்ட மீனவர் அல்லாத ஒருவர் எடுக்கும் திரைப்படம் வேறு எப்படியிருக்க முடியும்.! ஆனாலும், ஒருசில சிறு முயற்சிகள் நடந்திருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. மீனவர்களின் வாழ்க்கையே நாள்தோறும் பெரும் இன்னல்களுக்கு மத்தியில்தான் நகர்கிறது. உப்புக்காற்றுக்கிடையே கண்ணீரும், கொண்டாட்டமுமாக நகரும் மீனவர்களின் வாழ்க்கையை இன்னும் தமிழ்ச்சினிமா யதார்த்தமாக பதிவு செய்ய முன்வரவில்லை. இந்தியா - இலங்கை கிரிக்கெட் போட்டியில் இந்தியா தோற்க வேண்டும் என்று வேளாங்கண்ணி மாதாவிடம் ஜெபம் செய்யும் தாய்மார்கள் இன்றுகூட நாகப்பட்டினத்தில் உண்டு. நெருக்கடியான வீட்டில், இருக்கும் ஒரே அறையை திருமணமான புது தம்பதிக்கு விட்டுக்கொடுத்து வீட்டில் உள்ளவர்கள் கடற்கரையில் உறங்கும் நிலையும் இப்போதும் தொடரத்தான் செய்கிறது. கடலுக்கு அப்பால் இந்தப் பக்கம் உள்ள வாழ்க்கை முறைக்கும், மீனவர்களின் யதார்த்த வாழ்க்கைக்கும் மிகப்பெரிய கலாச்சார மேம்பாலம் இருக்கிறது. இதைப்புரிந்து கொள்ள குறைந்தபட்சம் மீனவர்கள் சமூகத்தில் இருந்து படைப்பாளர்கள் பெருகி வர வேண்டும். இனியாவது அவர்களின் பிரச்சனையை அவர்களே பேசட்டும். பேச வேண்டும்.! சரி விஷயத்துக்கு வருவோம்.!
மேலும் படிக்க | இந்திய மீனவர்களை கொள்ளையடித்த இலங்கை கடற்கொள்ளையர்கள்
இலங்கை கடற்படை சிறைபிடிப்பு, வலைகள் அறுப்பு, படகுகள் சேதம், மீன் திருட்டு, இலங்கை நீதிமன்றத்தில் சிறை வாழ்க்கை, படகுகள் சிறைபிடிப்பு, அவற்றை இலங்கையில் ஏலம் விடும் நடவடிக்கை என சொல்லெனாத் துயரம் நிறைந்தது மீனவர்கள் வாழ்வு. இது ஒரு பக்கம் என்றால், இரட்டைமடி மற்றும் சுருக்குமடி வலைப்பஞ்சாயத்துகள் வேறு. இந்த வலைப்பிரச்சனையால் ராமநாதபுரம் மற்றும் டெல்டா மாவட்ட மீனவர்களுக்கு இடையே அடிக்கடி கடலில் தாக்குதல் நடைபெறும் அளவுக்கு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பல சமயம் கொலை முயற்சிவரை இந்த விவகாரம் செல்கிறது. இன்னும் மீனவ சங்கங்கள்கூட இந்த விவகாரத்தில் ஒரு சரியான முடிவை எடுக்காததால் இந்தப் பிரச்சனையும் கிடப்பில் கிடக்கிறது.
இதுமட்டுமல்லாமல், நாட்டுப்படகு மீனவர்கள் மற்றும் விசைப்படகு மீனவர்கள் சண்டைகள் ஒருபக்கம். இதோ, வரப்போகிறது மீன்பிடித் தடைக்காலம். வழக்கம்போல், நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட மீனவர்கள் தயாராக காத்திருக்கின்றனர். மானிய விலை டீசல், மீன்வளத்துறை அலுவலகத்தில் வழக்கப்படும் டோக்கன் விநியோக முறைகேடு என வரிசைக்கட்டி நிற்கும் பிரச்சனையிது. இதுமட்டுமல்லாமல், குடும்ப அமைப்பின் கலாச்சார நெருக்கடி, இடப்பற்றாக்குறை, இடம்பெயரும் வாழ்வு, பொருளாதார மேம்பாடு என நுண்மையான சிக்கல்களும் மீனவர்களுக்கு நிறைய உண்டு. இவ்வளவு வாழ்வியல் சிக்கல்களுக்கு மத்தியிலும் மீனவர்களிடையே ஓர் ஒற்றுமை இருந்தது.
குமரியில் இருந்து புதுச்சேரி, கோவளம் வரை மீனவர்கள் தாங்கள் ஓர் ‘இனம்’ என்ற கோட்டில் ஒற்றுமையுடன் மீன்பிடித்து வந்தனர். குறிப்பாக, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து மீனவர்கள் இணைந்தே கடலுக்கு மீன் பிடிக்கச் செல்வது வழக்கம். ஒரே சமயத்தில் நூற்றுக்கணக்கான படகுகளில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். பாதுகாப்பு காரணமாகவும் பல மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒன்றாக ஆழ்கடலில் மீன்பிடிப்பர். வழக்கமாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி அண்டை நாடுகளின் கடற்படை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்படுவர். ஆனால், தற்போது தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை தொழில்போட்டி காரணமாக தமிழக மீனவர்களே சிறைபிடிக்கும் சம்பவம் அங்கேறியுள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த 39 மீனவர்கள் நெல்லை மாவட்டம் இடிந்தகரை கடற்கரைப் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த இடிந்தகரை மீனவர்கள், தூண்டில் போட்டு மீன் பிடிப்பதால் வலைகள் அறுந்து விடுவதாக கூறி 7 படகுகளுடன் வந்த 39 குமரி மீனவர்களையும் சிறைப்பிடித்தனர். இந்தச் சம்பவம் மீனவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொழில்போட்டியால் நாளுக்கு நாள் மீனவர்களின் ஒற்றுமை குலைந்து வருவது, அரசியல் மற்றும் புவியியல் ரீதியாக மீனவர்களுக்கு மட்டுமில்லை ; கடலுக்கும் நல்லதல்ல.!
மேலும் படிக்க | Fishermen: இந்திய மீனவர்களை இலங்கை எப்போது திருப்பி அனுப்பும்???
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR