கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் அக்டோபர் 31 வரை மூடப்படும்..


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தீவிரமாக பரவிவரும் கொரோனா வைரஸ் (Coronavirus) பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 ஆம் தேதி முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இந்த உத்தரவால் தொடர்ந்து 40 நாள்களுக்கு முழு ஊரடங்கு தொடர்ந்த நிலையில், அதன்பிறகு மீண்டும் புதிய புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு (TN Govt) நீட்டிக்கப்பட்டுவருகிறது. அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 30 ஆம் தேதி வரை பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு நாளையுடன் நிறைவடையும் நிலையில், ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) ஆலோசனை நடத்தினர்.


அதனையடுத்து, தற்போது ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில், புதிய சில தளர்வுகளுடன் அக்டோபர் 31 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.


எதற்கெல்லாம் தடை நீடிப்பு: 


  • பள்ளி, கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட தடை நீடிப்பு. 

  • அனைத்து கல்வி நிறுவனங்கள் செயல்பாட்டிற்கான தடை தொடரும். 

  • வெளிநாட்டு விமான போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு. 

  • புறநகர் மின்சார ரயில் போக்குவரத்திற்கான தடை நீட்டிப்பு. 

  • மதம், அரசியல், பொழுது போக்கு கூட்டங்களுக்கான தடை நீட்டிப்பு. 

  • திரையரங்கு, நீச்சல்குளம், பொழுது போக்கு பூங்கா,பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் தடை நீட்டிப்பு. 

  • கடற்கரை, உயிரியல் பூங்கா, அருங்காட்சியகம், சுற்றுலா தலங்களுக்கான தடை நீட்டிப்பு. 


எதற்கெல்லாம் அனுமதி: 


  • டீக்கடைகள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்பட அனுமதி. 

  • டீக்கடைகள், உணவகங்களில் பார்சல் சேவை இரவு 10 மணி வரை செயல்படலாம். 

  • திரைப்பட படப்பிடிப்புகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி. 

  • சென்னை விமான நிலையத்திற்கு தினமும் 100 உள்நாட்டு விமானங்கள் வந்து செல்ல அனுமதி. 

  • கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி, சேலம் விமான நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி தொடரும். 

  • அரசு மற்றும் அரசு துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் செயல்பட அனுமதி. 

  • ஊரக மற்றும் நகர்புற வார சந்தைகள் செயல்பட அனுமதி. 


ALSO READ | இன்றைய வானிலை முன்னறிவிப்பு... 12 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு!!


முழு ஊரடங்கு குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது... "கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.  


அதிமுக அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.  


அதனால்தான் தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதோடு, சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவிகிதம் நாட்டிலேயே அதிகமாக உள்ளது. மேலும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிர் இழப்பும் குறைவாக இருந்து வருகிறது.


அதனால் தான், பிரதமர், கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிய அதிக எண்ணிக்கையில் ஆய்வக பரிசோதனை செய்தல், நோய்த் தொற்றை கட்டுப்படுத்துதல், சிகிச்சை அளித்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கின்றது என்றும், தமிழ்நாட்டை பார்த்து பிற மாநிலங்கள் செயல்பட வேண்டும் என்றும் அண்மையில் நடைபெற்ற காணொலிக் காட்சி ஆலோசனைக் கூட்டத்தில் பாராட்டு தெரிவித்தார்.
 
நான் பல்வேறு தினங்களில் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், மூத்த இந்திய ஆட்சிப் பணி அலுவலர்களைக் கொண்டு அமைக்கப்பட்ட 12 ஒருங்கிணைப்புக் குழுக்களின் கருத்துக்களின் அடிப்படையிலும், பல்வேறு தினங்களில் மாவட்ட ஆட்சியர்களின் காணொலிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்கள் குழுவுடன் நடத்தப்பட்ட  கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களின் அடிப்படையிலும்,  தமிழ்நாட்டில் 30.9.2020 முடிய ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. எனினும், பொதுமக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கத்திலும், பல்வேறு பணிகளுக்கு வரைமுறைகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


பல்வேறு தினங்களில் நான் நடத்திய ஆய்வுக் கூட்டங்களின் அடிப்படையிலும், 29.9.2020 அன்று நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், மருத்துவ நிபுணர்கள் மற்றும் பொது சுகாதார வல்லுநர்களுடன் நடத்தப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையிலும், மூத்த அமைச்சர்களுடன் கலந்தாலோசித்தும், கொரோனா வைரஸ் நோய்த்தொற்றை  தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ்,  30.9.2020 முடிய தமிழ்நாடு முழுவதும் தற்போதுள்ள பொது ஊரடங்கு உத்தரவு, ஏற்கனவே நடைமுறையில் உள்ள பல்வேறு கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும்,  31.10.2020 நள்ளிரவு 12 மணி வரை மேலும் நீட்டிப்பு செய்யப்படுகிறது.  


எனினும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டும், நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டும், தமிழ்நாடு முழுவதும் நோய் கட்டுப்பாட்டு பகுதி தவிர மற்ற பகுதிகளில்  ஏற்கெனவே அனுமதிக்கப்பட்ட பல்வேறு தளர்வுகளுடன் குறிப்பாக கீழ்க்கண்ட பணிகளுக்கு தொடர்ந்து அனுமதி அளிக்கப்படுகிறது:


  1. அரசால் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி, உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.  பார்சல் சேவை இரவு 10 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது.

  2. திரைப்படத் தொழிலுக்கான படப்பிடிப்புகளுக்கு உரிய வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட்டு, ஒரே சமயத்தில் 100 நபர்களுக்கு மிகாமல் பணி செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.   படப்பிடிப்பின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது.

  3. தற்போது நாள்தோறும் சென்னை விமான நிலையத்தில் வெளி மாநிலங்களில் இருந்து 50 விமானங்கள் தரையிறங்க அனுமதித்துள்ள நிலையில், இனி 100 விமானங்கள் வரை தரையிறங்க அனுமதிக்கப்படுகிறது.  இது தவிர கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, தூத்துக்குடி, சேலம் ஆகிய விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலை தொடரும்.

  4. அரசு மற்றும் அரசுத் துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்கள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.

  5. ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் உள்ள வாரச் சந்தைகள் மட்டும் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது.


மேலும், 29.8.2020 மற்றும் 8.9.2020 ஆகிய தேதிகளில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட ஆணைகளின்படி, தமிழ்நாட்டில் 1.10.2020 முதல், அரசு பொதுத் தேர்வு எழுதும் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் அனுமதித்து 24.9.2020 அன்று அரசாணை வெளியிடப்பட்டது. 


ALSO READ | Unlock 5.0 : திரையரங்குகள், சுற்றுலா மையங்கள் திறக்கப்படுமா...!!!


இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஐயப்பாடுகளை கேட்டறிய மட்டும் வழங்கிய அனுமதி குறித்து கவனமுடன் செயல்படலாம் என்ற மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின்படியும், மருத்துவ நிபுணர்கள்  அளித்த கருத்துக்களின் அடிப்படையிலும், தற்போதுள்ள கொரோனா நோய்ப்பரவலின் தன்மையை கருத்தில் கொண்டும், மாணவர்களின் பாதுகாப்பு கருதியும் மாணவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் பள்ளிகளுக்குச் சென்று ஆசிரியர்களிடம் ஐயப்பாடுகளை கேட்டறிய அனுமதிக்கும் அரசாணை தற்சமயம் நிறுத்தி வைக்கப்படுகின்றது.


இது குறித்து மீண்டும் ஆய்வு செய்யப்பட்டு உரிய நேரத்தில் அனுமதி வழங்குவது பற்றி முடிவெடுக்கப்படும். 


பொது


  • மாநிலம் முழுவதும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144ன் கீழ் பொது இடங்களில் ஐந்து நபர்களுக்கு மேல் கூடக் கூடாது என்ற தடை உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும். 

  • தமிழ்நாடு முழுவதும் நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் தற்போதுள்ள நடைமுறைகளின்படி, எந்த விதமான தளர்வுகளுமின்றி ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படும். 

  • பள்ளிகள், கல்லூரிகள், ஆராய்ச்சி நிறுவனங்கள்  மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களின் செயல்பாட்டிற்கான தடை தொடரும்.  

  • திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் (Entertainment / Amusement Parks), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள், கடற்கரை, உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடை நீடிக்கும். 

  • மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர  சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை நீடிக்கும்.

  • புறநகர் மின்சார ரயில் போக்குவரத்து (Sub Urban Trains)

  • மதம் சார்ந்த கூட்டங்கள், சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு, கலாச்சார நிகழ்வுகள்,  கல்வி விழாக்கள், பிற கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள்  நடத்த உள்ள தடை தொடரும். 

  • அதிமுக அரசு கடந்த செப்டம்பர் மாதம் அதிக அளவு தளர்வுகள் வழங்கிய நிலையிலும், நோய்த் தொற்று வேகம் மாநில அளவில் குறைந்துள்ளது. நோய் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்கவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.   

  • பொதுமக்கள் வெளியில் செல்லும்போதும், பொது இடங்களிலும் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் முககவசத்தை கட்டாயம் அணிய வேண்டும்.   

  • பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவுவதையும், வெளியிடங்களில் முககவசத்தை அணிந்து செல்வதையும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால் தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த முடியும்.  

  • திருமண விழாக்களிலும், வழிபாட்டுத் தலங்களிலும், இறுதி ஊர்வலங்களிலும் மற்றும் பிற குடும்ப நிகழ்ச்சிகளிலும் பொதுமக்கள் கண்டிப்பாக அரசின் வழிமுறைகளை கடைப்பிடித்து நோய்த் தொற்றினை தவிர்க்க வேண்டும். 


எனவே, பொதுமக்கள், அரசு எடுத்துவரும் இத்தகைய முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்க கேட்டுக் கொள்கிறேன்.  நோய் தொற்றின் போக்கு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும், நோய் தொற்றின் நிலையையும் கருத்தில் கொண்டு அவ்வப்போது தேவைக்கேற்ப மேலும் தளர்வுகள் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.