தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் உள்ள அமமுக அலுவலகத்தில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அமமுக வேட்பாளர் உட்பட 150 பேர் மீது வழக்குப்பதிவு!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இறுதிகட்ட பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவு அடைந்த நிலையில் ஆண்டிபட்டி மதுரை சாலையில் உள்ள தனியார் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் அமமுக ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்த சென்றனர். இதற்கு அமமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. வணிக வளாகத்தின் மேல்தளத்தில் உள்ள அறையில் பணம் பதுக்கி வைக்கபட்டிருப்பதாக வந்த தகவலையடுத்து அந்த அறையை திறக்க அதிகாரிகள் முயற்சித்தனர்.


இதனால் அதிகாரிகளுக்கும் அமமுகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் வானத்தை நோக்கி 4 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து அங்கு கூடியிருந்த தொண்டர்கள் சிதறி ஓடினர். தகவல் அறிந்து வந்த மாவட்ட ஆட்சியர் மரியம் பல்லவி பல்தேவ் அங்கு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். போலீசாரின் தற்காப்பிற்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.


ஆண்டிபட்டியில் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக 150 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆண்டிபட்டி அமமுக வேட்பாளர் ஜெயகுமார் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துமீறி நுழைதல், ஆயுதங்களை வைத்து மிரட்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்கு செய்யப்பட்டுள்ளது. மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்தானது போல ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலும் ரத்தாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது