தமிழ்நாட்டில் மொத்த வாக்குப்பதிவு எவ்வளவு...? சென்னையில் சாதனையா? - முழு விவரம் உள்ளே!
TN Lok Sabha Election 2024: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதியிலும் நேற்று ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் மொத்தம் எத்தனை சதவீத வாக்குகள் பதிவானது என்ற முழுமையான தகவல்களை இதில் காணலாம்.
TN Lok Sabha Election 2024 Total Vote Turnout: 18வது மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நிறைவடைந்தது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணிக்கும் மேலும் நீடித்தது. அதாவது மாலை 6 மணிவரை தான் காலக்கெடு என்றாலும், அதுவரை வழங்கப்பட்ட டோக்கனின் அடிப்படையில் கடைசி வாக்காளர்கள் வரை வாக்களிக்க அனுமதிக்கப்பட்டார்கள். இதற்கு பலனாக, கடைசி நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டில் 10 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பதிவானதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு பிரச்சனையில்லை...
நேற்றைய முதல் கட்டத்தில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் மட்டும் 39 தொகுதிகளில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. குறிப்பாக தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியின் இடைத்தேர்தலும் நேற்றே நடத்தப்பட்டது. மேற்கு வங்கம், மணிப்பூரில் கடும் வன்முறை சம்பவங்கள் நேற்று நடந்த நிலையில், தமிழ்நாட்டில் பெரியளவில் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படவில்லை. சில இடங்களில் மட்டும் கட்சிக்காரர்கள் இடையே வாக்குவாதங்களும், அடிதடி சண்டைகளும் நடந்தன.
மேலும் படிக்க | Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணித்த ‘சில’ கிராமங்கள்..!!
பல்வேறு இடர்பாடுகள்
நேற்று தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கிராமங்கள் தேர்தலை புறக்கணித்தன. நேற்று காலை முதல் பல்வேறு இடங்களில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் பழுதான காரணத்தில் வாக்குப்பதிவும் தடைப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதிகளில் கூட நேற்று மின்னணு வாக்கு இயந்திரங்கல் பழுதானதை பார்க்க முடிந்தது. இருப்பினும், அவை உடனுக்குடன் சரிபார்க்கப்பட்டு மாற்று ஏற்பாடுகளும் வழங்கப்பட்டன. நேற்று கடும் வெயில் நீடித்ததால் மக்களும் வாக்களிக்க சுணக்கம் காட்டியதாகவே தெரிகிறது. மேலும், கடும் வெயிலிலும் வாக்களிக்க வந்த சேலத்தை சேர்ந்த 2 மூத்த குடிமக்களும், அரக்கோணத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று வாக்குச்சாவடியிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவமும் பலரையும் கவலைகொள்ள செய்தது.
வாக்குச் சதவீதம் குறைவு
இத்தனை இடர்பாடுகளுக்கு மத்தியிலும், தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தங்களின் ஜனநாயக கடமையை ஆற்ற பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது. இதனால், பல தரப்பட்ட மக்கள் தங்களின் வாக்குகளை எளிமையாக செலுத்திவிட்டு வீடு திரும்பினர். இந்த முறை தேர்தல் ஆணையம் ஒரு வாக்காளர் வாக்களிக்க ஏறத்தாழ 80 ரூபாய் அளவில் செலவிட்டதாக தகவல்கள் கூறப்படுகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டில் நேற்றைய மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு சிறப்பாக நடைபெற்றது என்றே கூறலாம். இருப்பினும், கடந்த 2019 மக்களவை தேர்தல் வாக்குப்பதிவை விட இம்முறை பதிவான வாக்குகள் குறைவுதான்.
தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள்
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் 72.4 சதவீத வாக்குகள் பதிவான நிலையில் இம்முறை 69.46 சதவீத வாக்குகளே பதிவாகி உள்ளன. இது தேர்தல் ஆணையம் இன்று நள்ளிரவில் வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி உறுதியாகி உள்ளது. தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளின் சதவீதத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாட்டில் நேற்று காலை 9 மணி நிலவரப்படி 12.55% வாக்குகளும், காலை 11 மணி நிலவரப்படி 24.37% வாக்குகளும், மதியம் 1 மணி நிலவரப்படி 40.05% வாக்குகளும், மதியம் 3 மணி நிலவரப்படி 51.41% வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 62.02 % வாக்குகளும் பதிவாகின. மொத்தம் 69.46% வாக்குகளே தமிழ்நாட்டில் பதிவான நிலையில் அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.48 சதவீதமும், குறைந்தபட்சமாக தென்சென்னையில் 54.27% சதவீதமும் வாக்குகள் பதிவாகின. விளவங்கோடு இடைத்தேர்தலில் 64.54% வாக்குகள் பதிவாகி உள்ளன.
சென்னை சாதனையா?
வழக்கமாக சென்னையின் மூன்று தொகுதிகளிலும் வாக்குப்பதிவு குறைவாகவே இருக்கும். தற்போது மற்ற தொகுதிகளை ஒப்பிடும்போது சென்னையில் வாக்குகள் குறைவுதான் என்றாலும், 1980ஆம் ஆண்டுக்கு பின் இந்த தேர்தலில்தான் மூன்று தொகுதிகளிலும் அதிக வாக்குகள் பதிவாகியிருப்பதாகவும், இது யாரும் எதிர்பார்க்காத சாதனை என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது நிச்சயம் சிறந்த வாக்கு சதவீதம் என்று கூற முடியாவிட்டாலும், கண்டிப்பாக கொண்டாட தகுந்த வெற்றி என கூறி வருகின்றனர். இருப்பினும், இது சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தாலும் இதனை யாரும் உறுதி செய்யவில்லை.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ