தமிழக பட்ஜெட்: மாணவிகள் உயர்கல்வி தொடர மாதம் ரூ.1000! எப்படி விண்ணப்பிப்பது?
மாணவிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை நேரடியாக செலுத்தப்படும்
6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து முடித்து உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கப்படும் என இன்றைய தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவிகள் உயர் கல்வி தொடர்வரை உறுதி செய்ய இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக பட்ஜெட் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. திமுக அரசு பொறுப்பேற்றதும் தாக்கல் செய்யும் முதல் முழு பட்ஜெட் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. திமுக தேர்தல் வாக்குறுதியில் குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து பல மாதங்கள் கடந்துள்ள நிலையில், அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இதனை சுட்டிக்காட்டி தொடர்ந்து எதிர்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இன்றைய பட்ஜெட்டில் இதுகுறித்த அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமே மிஞ்சியதே. ஆனால் அதற்கு ஈடுசெய்யும் வகையில் மாணவிகளுக்கு உயர்கல்வி தொடர மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும் அறிவிப்பு நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அதே நேரம் மகளிருக்கான உரிமைத் தொகையை வழங்குவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக எடுக்கப்பட வேண்டுமென முதலமைச்சர் அறிவித்துள்ளார் என்றும், சென்ற ஆட்சியில் விட்டுச் சென்ற நிதி நெருக்கடி சூழ்நிலை காரணமாக இந்த வாக்குறுதியை முதலில் செயல்படுத்துவதில் சிக்கல் இருப்பதாகவும், இத் திட்டத்தின் கீழ் பயனடைய உள்ள பயனாளிகளை பல்வேறு தரவுகள் அடிப்படையில் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் பிடிஆர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | TN Budget 2022: ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்
கல்லூரி படிப்பை இடைநிற்றல் இன்றி தொடரும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் என்பது பல வகையில் நன்மை தரும் திட்டம் என்கின்றனர் பெண் கல்வி ஆர்வலர்கள். கல்லூரி படிப்பை தொடர்வதால் இளவயது திருமணங்கள் தவிர்க்கப்படும். அதோடு 18 வயதுக்கு கீழ் சிறுமிகள் கருத்தரிப்பதும் குறையும் என்று கூறப்படுகிறது.
தமிழக பட்ஜெட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மாணவிகள் உயர்கல்வி தொடர வழங்கப்படும் 1000 ரூபாயை அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்பு முடித்த மாணவிகள் அனைவரும் பெற முடியும். அவர்கள் கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை இந்த தொகையை பெற தமிழக அரசு வழிவகை செய்யும். மாணவிகளின் வங்கிக் கணக்கில் இந்த தொகை நேரடியாக செலுத்தப்படும். வேறு கல்வி உதவித்தொகை பெறும் மாணவிகளும் இந்த தொகையை பெற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு ஆண்டும் இந்த திட்டத்தின் கீழ் 6 லட்சம் மாணவிகள் பயன்பெறுவார்கள். இதற்காக வரவு செலவுத்திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளி செல்லும் பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு நாளும் 100 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை அசாம் மாநில அரசு கடந்த ஜனவரி 2021-ல் தொடங்கியது. தற்போது இதே போல தமிழகத்திலும் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR