தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் நேற்று அரசுமுறை பயணமாக அமெரிக்கா நாட்டிலுள்ள பஃபல்லோ நகரில் உள்ள கால்நடை பண்ணைக்கு நேரில் சென்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அமெரிக்காவில் உள்ள பஃபல்லோ கால்நடை பண்ணையில் செயல்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைக் கொண்டு, பல்வேறு நாட்டு இன மாடுகளின் மரபணு பராமரிப்பு மற்றும் அந்த மரபணுவைக் கொண்டு, அதிகமாக பால் தரக்கூடிய மாட்டு இனங்கள் உருவாக்கும் தொழில்நுட்பத்தையும், நோய் எதிர்ப்பு சக்தி உடைய புதிய ரக மாடுகள் மற்றும் ஆடுகளை உருவாக்கும் தொழில்நுட்பத்தையும், பால் மற்றும் இதர பொருட்களை பதப்படுத்துதல் போன்ற தொழில்நுட்பங்களை ஆய்வு செய்து, இந்தப் புதிய தொழில்நுட்பங்களை, சேலம் மாவட்டம், தலைவாசலில் அமைக்கப்படவுள்ள உலகத்தரம் வாய்ந்த கால்நடைப் பூங்காவில் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். 



மேலும், அப்பண்ணையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தாழ்வான கொட்டகை அமைப்பு, சிறந்த எரு மேலாண்மை, ஒவ்வொரு கறவை பசுவும் நிரந்தரமாக அடையாளம் காணுதல், உடல்நலம் பராமரிப்பு, சமச்சீர் தீவனம், தீவன வங்கிகள், பண்ணைப் பதிவேடு முறைகள், வெப்பம் மற்றும் குளிரினால் ஏற்படும் அயர்ச்சிகளைக் குறைக்கும் வழிமுறைகள், புதிதாக பிறந்த கன்றுகளின் உடல்நலம் சார்ந்த குறிப்பேடுகள், தடுப்பு ஊசி அட்டவணை, கன்று ஈனல், மடிவீக்க நோய், கருப்பை அழற்சி நோய், வளர்சிதை மாற்ற நோய்கள் மற்றும் பிற தொற்று நோய்களுக்கு எதிராக அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் கேட்டறிந்தார்.


இந்த நிகழ்வின் போது தொழில் துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்
துறை அமைச்சர் திரு.ஆர்.பி.உதயகுமார், மாண்புமிகு பால்வளம் மற்றும் பால்பண்ணை வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.கே.டி.ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் திருக.சண்முகம், இ.ஆ.ப., மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.