சிபிஐக்கு மாறும் அமலாக்கத்துறை லஞ்ச வழக்கு! அடுத்த திருப்பம் என்ன?
ED Raid Tamilnadu: லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது. வழக்கு சிபிஐக்கு மாற்றமா? தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கூறுவது என்ன? முழு விவரம்!
அமலாக்கத் துறையில் உள்ள சில அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்திருப்பதாக தலைமைச் செயலக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். லஞ்சம் பெற்ற விவகாரத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரிக்க உள்ளதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால், இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறையே விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரியுடன் பணிபுரிபவர்களையும் விசாரிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு.
யார் இந்த டாக்டர் சுரேஷ் பாபு?
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் சுரேஷ் பாபு, திண்டுக்கல்லில் தனியாக மருத்துவமனையையும் நடத்தி வருகிறார். இவர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதன்பிறகு அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
மேலும் படிக்க | விடிய விடிய நடைபெற்ற சோதனை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்!
யார் இந்த அங்கித் திவாரி?
2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் துணை அமலாக்கத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்த அங்கித் திவாரி, 2022 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று, 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் இணைந்துள்ளார்.
சுரேஷ் பாபுவை விசாரணைக்கு அழைத்த அங்கித் திவாரி
அதன்பிறகு சில மாதங்களுக்கு முன்பு டாக்டர் சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு விசாரணைக்கு அழைத்துள்ளார். அதாவது அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபுவிடம் 2018 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சொத்துக் குவிப்பு வழக்கு தன்னுடைய மேஜைக்கு வந்துள்ளதாகவும் அதனை மறு விசாரணை செய்யும் அதிகாரியாக என்னை நியமித்துள்ளார்கள், இது சம்பந்தமாக தங்களை விசாரிக்க வேண்டும் எனக்கூறி உள்ளார்.
3 கோடி ரூபாய் பேரம்.. இறுதியாக 51 லட்சத்தில் முடிந்தது
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் பேச்சைக் கேட்டு, நேரில் விசாரணைக்கு ஆஜரான சுரேஷ் பாபுவிடம் பேரம் பேசியுள்ளார். 2018 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கவும், மறு விசாரணை நடத்தாமல் இருக்கவும் 3 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆனால் டாக்டர் இவ்வளவு பணம் இல்லை எனக் கூறியதால், இறுதியாக 51 லட்சம் ரூபாய்க்கு பேரம் பேசியதாகத் தெரிகிறது.
சுரேஷ்பாபுவுக்கு அழுத்தம் கொடுத்த அங்கித் திவாரி
இதற்கு ஒப்புக்கொண்ட டாக்டர் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் மாதம் 1 ஆம் தேதி திண்டுக்கல் நத்தம் சாலையில் வைத்து, முன்பணமாக 20 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரியாக அங்கித் திவாரி என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மீதி 31 லட்சம் விரைவில் தருமாறு அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ்பாபுவிற்கு அழுத்தம் தந்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல், இறுதியாக டாக்டர் சுரேஷ் பாபு லஞ்சஒழிப்புத் துறையை நாடினார்.
லஞ்சஒழிப்புத் துறையை நாடிய டாக்டர் சுரேஷ்பாபு
இதனை அடுத்து டாக்டர் சுரேஷ்பாபு 20 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர்.
லஞ்ச பணத்தை வாங்கிய அங்கித் திவாரி
திண்டுக்கல் - மதுரை தேசிய நான்குவழிச் சாலை பகுதியில் தோமையார்புரம் அருகே அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டாக்டர் சுரேஷ்பாபு சந்தித்து பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை கையில் வாங்காமல் அங்கித் திவாரியின் கார் டிக்கியில் வைக்குமாறு கூறியதை தொடர்ந்து சுரேஷ்பாபு கார் டிக்கியில் வைத்துவிட்டு சென்றுள்ளார்.
தப்பியோடிய அங்கித் திவாரி.. விரட்டி பிடித்த போலீசார்
இதனை அடுத்து விரைந்து கிளம்பிய அங்கித் திவாரி காரை நான்கு வழிச்சாலையில் விரட்டிச் சென்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சாலையின் நடுவே காரை மறித்து நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளின் காரை இடித்து விட்டு தப்பிச் சென்ற அங்கித் திவாரியை சுமார் 30 கிலோமீட்டர் விரட்டிச் சென்று கொடைரோடு சுங்கச்சாவடிக்கு தகவல் தெரிவித்து அங்கே அமலாக்கத்துறை அதிகாரியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அங்கித் திவாரி கைது
கைது செய்யப்பட்ட அங்கித் திவாரியை திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலகத்தில் வைத்து தற்போது வரை சுமார் 12 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்றது.
லஞ்சம் வாங்கியது உண்மைதான் - அங்கித் திவாரி
விசாரணையில் அங்கித் திவாரி என்பவர் அமலாக்கத்துறை அதிகாரி என்பதும், மருத்துவரிடம் 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதும் உண்மைதான் என்பது அம்பலமாகியுள்ளது.
சிறையில் அடைக்கப்பட்ட அங்கித் திவாரி
இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி சரவணன் மற்றும் டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான குழுவினர், அவரிடமிருந்து 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அங்கித் திவாரிக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மருத்துவ பரிசோதனைக்கு பின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். திண்டுக்கல் முதன்மை நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி மோகனாவின் இல்லத்தில் அவரது முன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கிட் திவாரியை ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி மோகனா உத்தரவுவிட்டு உள்ளார்.
சோதனையில் சிக்கிய பல முக்கிய ஆவணங்கள்
இதைத் தொடா்ந்து, நேற்று (டிசம்பர் 01, வெள்ளிக்கிழமை) இரவு 7 மணி முதல், அங்கித் திவாரியின் வீடு மற்றும் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். சுமார் 11 மணி நேரத்திற்கும் மேலாக இரவு முழுவதும் சோதனை நடைபெற்றது. இன்று காலை சோதனை முடிந்து அதிகாரிகள் வெளியேறினர். இந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
தமிழகத்தில் முதல் முறையாக சோதனை
தமிழ்நாட்டில் முதல் முறையாக மத்திய அரசு அலுவலகமான அமலாக்கப் பிரிவு அலுவலகத்துக்குள் மாநில ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் நுழைந்து சோதனை நடத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: 12 மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ