விடிய விடிய நடைபெற்ற சோதனை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்!

திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் 20 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி கைது விவகாரம், மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய விடிய தீவிர சோதனை.  

Written by - RK Spark | Last Updated : Dec 2, 2023, 08:58 AM IST
  • லஞ்சம் வாங்கி சிக்கி கொண்ட அதிகாரி.
  • லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்து விசாரணை.
  • மேலும் சில அதிகாரிகள் பிடிபடுவார்கள் என்று தகவல்.
விடிய விடிய நடைபெற்ற சோதனை! அமலாக்கத்துறை அலுவலகத்தில் சிக்கிய ஆவணங்கள்! title=

திண்டுக்கல் புது அக்ரகாரம் பகுதியைச் சேர்ந்த டாக்டர். சுரேஷ்பாபு என்பவர் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது கடந்த 2018 ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு அந்த வழக்கு முடிக்கப்பட்டது.  இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் துணை அமலாக்கத்துறை அதிகாரியாக பணிபுரிந்து வந்த அங்கித் திவாரி, 2022 ஆம் ஆண்டு பதவி உயர்வு பெற்று அதன் பிறகு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மதுரையில் அமலாக்கத்துறை அதிகாரியாக பணியில் இணைந்துள்ளார்.  அங்கித் திவாரி என்பவர், திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்பாபு விடம் 2018 ஆம் ஆண்டு நடந்து முடிந்த சொத்துக் குவிப்பு வழக்கு தன்னுடைய மேஜைக்கு வந்துள்ளதாகவும் அதனை மறு விசாரணை செய்யும் அதிகாரியாக என்னை நியமித்துள்ளார்கள், இது சம்பந்தமாக தங்களை விசாரிக்க வேண்டும் என கூறி உள்ளார். 

மேலும் படிக்க | புயலால் பாதிக்கப்படப்போகும் மாவட்டங்கள் இவை தான் - மக்களே உஷார்

மேலும் , இந்த வழக்கில் இருந்து உங்களை மறு விசாரணை நடத்தாமல் இருக்க வேண்டும் என்றால் 3 கோடி ரூபாய் லஞ்சமாக கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்,  ஒரு கட்டத்தில் பேரம் பேசி முடித்த பிறகு 51 லட்ச ரூபாய் தர வேண்டும் என whatsapp ஆடியோ கால் மூலம் பேசி முடித்துள்ளனர். இதற்கு ஒப்புக்கொண்ட மருத்துவர் சுரேஷ்பாபு கடந்த நவம்பர் மாதம் 1ஆம் தேதி திண்டுக்கல் நத்தம் சாலையில் வைத்து,  முன்பணமாக 20 லட்சத்தை அமலாக்கத்துறை அதிகாரியாக அங்கித் திவாரி என்பவரிடம் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நேற்று இரவு மீதி 31 லட்சம் விரைவில் தருமாறு அங்கித் திவாரி மருத்துவர் சுரேஷ்பாபுவிற்கு  நெருக்கடி தந்துள்ளார்.  இதனை அடுத்து அரசு மருத்துவர் சுரேஷ்பாபு 20 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை மருத்துவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். 

திண்டுக்கல் - மதுரை தேசிய நான்குவழிச் சாலை பகுதியில் தோமையார்புரம் அருகே அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை டாக்டர் சுரேஷ்பாபு சந்தித்து பணத்தை கொடுத்துள்ளார். பணத்தை கையில் வாங்காமல் அங்கித் திவாரியின் கார் டிக்கியில் வைக்குமாறு கூறியதை தொடர்ந்து சுரேஷ்பாபு கார் டிக்கியில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனை அடுத்து விரைந்து கிளம்பிய அங்கித் திவாரி காரை நான்கு வழிச்சாலையில் விரட்டிச் சென்று லஞ்ச ஒழிப்புத் துறையினர் சாலையின் நடுவே காரை மறித்து நிறுத்தியுள்ளனர். அதிகாரிகளின் காரை இடித்து விட்டு தப்பிச் சென்ற அங்கித் திவாரியை சுமார் 30 கிலோமீட்டர் விரட்டிச் சென்று கொடைரோடு சுங்கச்சாவடிக்கு தகவல் தெரிவித்து அங்கே அமலாக்கத்துறை அதிகாரியை  மடக்கி பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அங்கித்  திவாரியை திண்டுக்கல் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை அலுவலகத்தில் வைத்து தற்போது வரை சுமார் 12  மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடைபெற்று வருகிறது. 

விசாரணையில் அங்கித் திவாரி என்பவர் அமலாக்கத்துறை அதிகாரி என்பதும், மருத்துவரிடம் 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதும் உண்மைதான் என்பது அம்பலமாகியுள்ளது. இதனை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி  சரவணன் மற்றும் டிஎஸ்பி நாகராஜ் தலைமையிலான குழுவினர், அவரிடமிருந்து 20 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு,  அவர் மீது தற்போது வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைக்க உள்ளதாக  தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை மருத்துவ பரிசோதனைக்கு பின் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். திண்டுக்கல் முதன்மை நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி மோகனாவின் இல்லத்தில் அவரது முன் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அங்கிட் திவாரியை ஆஜர் படுத்தினர். அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி மோகனா உத்தரவுவிட்டுள்ளார்.

மேலும் படிக்க | அதிக விலை கொடுத்து துவரம் பருப்பு வாங்குவது ஏன் - வானதி சீனிவாசன் கேள்வி

இதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் வீட்டில் சோதனை நடத்திய நிலையில் இதுபோன்று மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள அமலாக்கத்துறை துணை மண்டல அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணிக்கு தொடங்கிய நிலையில் விடிய விடிய சோதனை நடத்தப்பட்டது. அப்போது பாதுகாப்ப்பிற்காக 100க்கும் மேற்பட்ட காவல்துறையினரும், 50க்கும் மேற்பட்ட இந்தோ திபெத் எல்கை பாதுகாப்பு  படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  முன்னதாக சோதனைக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் அமலாக்கத்துறை அதிகாரிகள் மறுத்தபோது அவர்களை காவல்துறையினர் தள்ளிவிட்டு அலுவலகத்தில் சென்று சோதனை நடத்த முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனிடையே இச்சோதனையின்போது அங்கிட் திவாரிக்கு தொடர்புடைய  பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. 

அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் சோதனை நடைபெற்ற நிலையில் கோயம்புத்தூரில் இருந்து 10க்கும் மேற்பட்ட CRPF படையினர் அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு பாதுகாப்பிற்கு செல்ல முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தல்லாகுளம் காவல்நிலைய காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன் ஏற்கனவே இந்தோ திபெத் படையினர் பாதுகாப்பு பணியில் உள்ளதால் CRPF படையினரை அனுமதிக்க முடியாது என கூறினர். அப்போது அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர்கள் வாக்குவாதம் செய்த நிலையில் காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து CRPF அதிகாரிகள் 3 மணி நேரத்திற்கு மேலாக வெளியிலயே காத்துக்கிடந்தனர். இதனால் அமலாக்கத்துறை அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அம்ரித் திவாரி அமலாக்கத்துறையின் பெயரில் யாரையும் மிரட்டியோ அல்லது அச்சுறுத்தியோ இதேபோன்ற யுக்தியை பயன்படுத்தி கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளாரா? என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர். இதேபோன்று அம்ரித் திவாரி லஞ்சம் பெற்ற நிகழ்வில் பிற அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவர் அளித்த தகவலின் அடிப்படையில் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அம்ரித் திவாரி பயன்படுத்திய அறையில் லஞ்ச ஒழிப்புத்துறை DSP சத்யசீலன்  தலைமையிலான அதிகாரிகள் விடிய விடிய 11 மணி நேரத்தை கடந்தும் சோதனையில் ஈடுபட்டுவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: 12 மாவட்ட அதிகாரிகளுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் உத்தரவு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News