CM MK Stalin - Governor RN Ravi Meeting In Tamil: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை சந்தித்தனர். இந்த சந்திப்புக்கு பின்னர், தற்போது தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"உச்ச நீதிமன்றம்‌ அறிவுறுத்தியதன்‌ அடிப்படையில்‌, தமிழ்நாடு ஆளுநர்‌ ஆர்.என். ரவி‌ அழைப்புவிடுத்தன் பேரில், தமிழ்நாடு முதலமைச்சர்‌, ஆளுநரை சந்தித்து நிலுவையில் உள்ள மசோதாக்கள்‌ மற்றும்‌ கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல்‌ அளிக்க வலியுறுத்தினார்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆளுநர் அழைப்பு


அந்த அறிக்கையில்,"தமிழ்நாடு ஆளுநர்‌‌, தமிழ்நாடு அரசின்‌ சார்பில்‌ அனுப்பப்பட்ட மசோதாக்கள்‌ மற்றும்‌ கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல்‌ அளிக்காமல்‌ நிலுவையில்‌ வைத்திருப்பது தொடர்பாக, தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகள்‌ வழங்க வேண்டி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில்‌ வழக்கு தொடுத்திருந்தது. அவ்வழக்கில்‌, தமிழ்நாடு ஆளுநரிடம்‌ நிலுவையில்‌ உள்ள மசோதாக்கள்‌ மற்றும்‌ கோப்புகள்‌ தொடர்பாக முதலமைச்சர்‌ ஸ்டாலின் ஆலோசனை நடத்திட வேண்டுமென்று உச்சநீதிமன்றம்‌ அறிவுறுத்தியிருந்ததன்‌ அடிப்படையில்‌, ஆளுநர்‌ முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள்‌.



மேலும் படிக்க | தமிழகத்தில் பீதியை கிளப்பும் கொரோனா பரவல்!


10 மசோதாக்கள்...


ஆளுநரின் அழைப்பினை ஏற்று, தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின் இன்று (டிச. 30) ஆளுநர்‌ மாளிகையில்‌,  நீர்வளத்துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, நிதி மற்றும்‌ மனிதவள மேலாண்மைத்‌ துறை அமைச்சர்‌ தங்கம்‌ தென்னரசு, சட்டத்‌ துறை எஸ்‌. இரகுபதி, பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்‌துறை மற்றும்‌ உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ ஆர்‌.எஸ்‌. ராஜகண்ணப்பன்‌ மற்றும்‌ தலைமைச்‌ செயலாளர்‌ சிவ்‌ தாஸ்‌ மீனா, ஆகியோருடன்‌ ஆளுநரைச்‌ சந்தித்தார்‌.


ஆளுநருடனான இச்சந்திப்பின்போது, பல மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில்‌ இருக்கும்‌ பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல்‌ அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று முதலமைச்சர்‌ ஸ்டாலின், ஆளுநரிடம்‌ வலியுறுத்தினார்‌. அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம்‌ மீண்டும்‌ நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல்‌ சாசனத்தில்‌ எங்கும்‌ குறிப்பிடாத வகையில்‌, தேவையின்றி குடியரசுத்‌ தலைவருக்கு ஆளுநர்‌‌ அனுப்பி வைத்துள்ளதைத்‌ திரும்பப்‌ பெற்று, அவற்றிற்கும்‌ விரைந்து ஒப்புதல்‌ அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும்‌ ஆளுநரை, முதலமைச்சர் கேட்டுக்கொண்டார்.


மேலும் படிக்க | பிரமாண்டமாக திறக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்! எந்த எந்த பேருந்துகள் இங்கிருந்து செல்லும்?


அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்கு


ஊழல்‌ வழக்குகளில்‌ சம்மந்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள்‌ அமைச்சர்கள்‌ கே.சி. வீரமணி,‌ எம்‌.ஆர்‌. விஜயபாஸ்கர்‌ ஆகியோர்‌ மீது லஞ்ச ஒழிப்புத்‌ துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும்‌ பல மாதங்களாக ஆளுநர்‌ வசம்‌ நிலுவையில்‌ உள்ளன. அவற்றிற்கும்‌ விரைந்து ஒப்புதல்‌ வழங்க இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது. இதில்‌ கே.சி. வீரமணி தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும்‌, எம்‌.ஆர்‌. விஜயபாஸ்கர்‌ தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும்‌ ஆளுநர்‌ அவர்கள்‌ நிலுவையில்‌ வைத்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும்‌, தமிழ்நாடு அரசுப்‌ பணியாளர்‌ தேர்வாணையத்தில்‌ காலியாக உள்ள உறுப்பினர்‌ பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம்‌ செய்வது தொடர்பான கோப்பும்‌, நீண்ட காலமாக ஆளுநரிடம்‌ நிலுவையில்‌ உள்ளது குறித்தும்‌ தெரிவிக்கப்பட்டு அவற்றிற்கு ஒப்புதல்‌ அளித்து திரும்ப அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.


தாமதத்தை தவிர்த்திட கோரிக்கை


பொதுவாக, அரசியல்‌ சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர்‌ செயல்பட வேண்டுமென்றும்‌, அப்போதுதான்‌ மாநில மக்களின்‌ நலனுக்கும்‌, நிர்வாகத்திற்கும்‌ பயனளிக்கக்கூடிய வகையில்‌ ஆளுநரின் செயல்பாடு அமையும்‌ என்றும்‌ முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌, ஆளுநரிடம் எடுத்துரைத்தார்‌.


மேலும் படிக்க | சென்னையில் புத்தாண்டு கொண்டாட திட்டமா... இதையெல்லாம் மனசுல வச்சுக்கோங்க!


ஆளுநரிடம் நிலுவையில்‌ உள்ள மசோதாக்கள்‌ மற்றும்‌ கோப்புகள்‌ தொடர்பாக அவர்‌ கோரிய அனைத்து விவரங்களும்‌, சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள்‌ மற்றும்‌ அலுவலர்களால்‌ ஆளுநருக்கு நேரிலும்‌, எழுத்துப்பூர்வமாகவும்‌ அளிக்கப்பட்டுள்ள நிலையில்‌, உச்ச நீதிமன்றம்‌ தெரிவித்துள்ள கருத்துக்களை ஆளுநர்‌ மனதில்கொண்டு, நிலுவையில்‌ உள்ள மசோதாக்களுக்கும்‌, கோப்புகளுக்கும்‌ உரிய காலத்தில்‌ ஒப்புதல்‌ வழங்கிட வேண்டுமென்றும்‌, வருங்காலங்களில்‌ இதுபோன்ற தாமதங்களை ஆளுநர்‌ தவிர்த்திட வேண்டுமென்றும்‌ முதலமைச்சர்‌‌, ஆளுநரைக்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.


இந்த ஆலோசனையின்‌ போது, அரசின்‌ சார்பாக மேற்படி கருத்துக்களை முதலமைச்சரும்‌, அமைச்சர்களும், தலைமைச்‌ செயலாளரும்,‌ விரிவாக எடுத்துக்‌ கூறினர்‌. முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌, ஆளுநருக்கு கடிதம்‌ ஒன்றையும்‌ அப்போது வழங்கினார்‌. இக்கடிதத்தில்‌ அரசியல்‌ சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர்‌ அமைப்புகளின்மீதும்‌ தனக்கு மிக உயர்ந்த மதிப்பும்‌, மரியாதையும்‌ வைத்திருப்பதாகத்‌ தெரிவித்துள்ள முதலமைச்சர்‌‌, நிலுவையிலுள்ள மசோதாக்கள்‌ மற்றும்‌ கோப்புகள்‌ குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம்‌ மற்றும்‌ பொதுமக்களின்‌ நலன்‌ கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும்‌ என்ற நோக்கத்தில்தான் என்பதையும்‌ குறிப்பிட்டுள்ளார்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | விஜயகாந்த் தேமுதிக மோதிரத்துடன் நல்லடக்கம்... ஸ்டாலின், உதயநிதிக்கு நன்றி கூறிய பிரேமலதா


தொடர்ந்து, ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,"தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மாநில அரசின் விவகாரங்கள் பற்றி விவாதிக்கக் கூட்டத்திற்கு அழைத்திருந்தார். அதன் எதிரொலியாக இன்று மாலை 5.30 மணிக்கு முதலமைச்சர் ஆளுநரை சந்தித்தார். சென்னை ராஜ்பவனில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, எஸ்.ரகுபதி மற்றும் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், செயலாளர், முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் பொது செயலாளர் ஆகியோர் இருந்தனர்.



சந்திப்பு சுமுகமாக இருந்தது. தமிழக ஆளுநர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மரியாதையை பரிமாறிக் கொண்டனர். பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதித்து தங்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். தமிழக ஆளுநர், தமிழக மக்களின் நலனுக்கான தனது முழு அர்ப்பணிப்பையும் மீண்டும் வலியுறுத்தினார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எல்லைக்குள் மாநில அரசுக்குத் தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் அவர் உறுதியளித்தார். மாநிலத்தின் நலனுக்காக முதலமைச்சருடன் அவ்வப்போது சந்திப்பதன் அவசியத்தையும் நன்மையையும் தமிழக ஆளுநர் வலியுறுத்தினார்.


மேலும் படிக்க | செல்வ மகள் சேமிப்பு திட்டம்... வட்டி விகிதத்தை உயா்த்தியது மத்திய அரசு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ