தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்க கூடாது: HC
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசியர்கள் பணியில் நீடிப்பதை அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!!
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசியர்கள் பணியில் நீடிப்பதை அனுமதிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது!!
மத்திய அரசின் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் சுயநிதி பள்ளிகளில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு இந்த சட்டம் அமலுக்கு வந்தது.
2010 ஆம் ஆண்டுக்கு பின்னர் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இந்த சட்டவிதி பொருந்தும். 2015 ஆம் ஆண்டு மார்ச் 31 ஆம் தேதிக்குள் ஆசிரியர்கள் தேர்ச்சி பெறவேண்டும் என்று காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் இந்த காலக்கெடு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. அரசு கொடுத்த காலக்கெடு கடந்த மாதத்தோடு முடிவடைந்த நிலையில் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதாமல் பணியில் இருக்கும் ஆசிரியர்களை, பணியில் இருந்து நீக்க தடை கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது. இந்த விசாரணையில் நீதிபதி, தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்கள் பணியில் நீடிக்கக் கூடாது என தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மேலும், தேர்வு எழுதாத ஆசிரியர்கள் விளக்கம் அளிக்க 2 வாரங்களில் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்த நோட்டீஸ் குறித்து பதிலளிக்க 10 நாட்கள் அவகாசம் தந்து தமிழக அரசு சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித்தேர்வு முடிக்காத ஆசிரியர்கள் மீது கருணை காட்டக் கூடாது. எனவும் தெரிவித்துள்ளது.