தமிழ்ப்போராளி கி.ஆ.பெ விசுவநாதம் பிறந்த நாள் விழா - பிரபலங்கள் புகழுரை
தமிழ்ப்போராளி கி.ஆ.பெ.விசுவாதத்தின் 114ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது.
தமிழியக்கமும், வி.ஐ.டி பல்கலைக்கழகமும் இணைந்து நடத்திய முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் 124-வது பிறந்த நாள் மற்றும் செந்தமிழ்க் காவலர் சி.இலக்குவனார் அவர்களின் 114-வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் சென்னை வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தின் வேந்தர் மற்றும் நிறுவனரும், தமிழியக்கத்தின் நிறுவனர் மற்றும் தலைவருமான கோ. விசுவநாதன் தலைமைத் தாங்கினார்.
விழாவில், தமிழியக்கத்தின் மாநில செயலாளர் மு.சுகுமார் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழியக்கத்தின் தென்தமிழக ஒருங்கிணைப்பாளர் மு.சிதம்பர பாரதி, வட தமிழக ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு.வணங்காமுடி, பொருளாளர் புலவர் வே.பதுமனார், பொது செயலாளர் கவியருவி அப்துல்காதர், கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் மகள் மணிமேகலை கண்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் தலைமையுரை ஆற்றிய கோ.விசுவநாதன் பேசியதாவது, ‘இரண்டு தமிழ் அறிஞர்களை இத்தனை ஆண்டுகள் நினைவில் வைத்திருப்பதற்கு காரணம் அவர்கள் தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் பாடுப்பட்டார்கள். இவர்களுடைய வாழ்க்கை வரலாற்றினை அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி, பொதுவுடமை கட்சி தலைவர் நல்லக்கண்ணு, முனைவர் வெங்கடசுப்பிரமணியம், முன்னாள் அமைச்சர் காளிமுத்து, எழுத்தாளர் ஜெயபிரகாசம், முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையா போன்றவர்கள் இலக்குவானரிடம் பயின்றவர்கள்.
பேராசிரியர் சி.இலக்குவனார் குடும்பத்துக்காக செலவிட்ட நேரம், பணத்தை விட தமிழ் வளர்ப்புக்காக செய்தது தான் அதிகம். தமிழர்களை பிளவுபடுத்துகிறது என்பதற்காக கி.ஆ.பெ அவர்களுக்கு சாதி ஒழிப்பு மிகவும் பிடிக்கும். தமிழுக்கு தனி பல்கலைக்கழகம் வேண்டும் என்பது அவருடைய ஆசை. அது நிறைவேறுவதற்கு பல ஆண்டுகள் ஆனது. தமிழுக்காகவும், தமிழர்களுக்காகவும் போராடிய இரண்டு தமிழ் அறிஞர்களையும் தமிழியக்கம் கொண்டாடுகிறது.
தமிழியக்கம் வெறும் தமிழுக்காக மட்டுமல்ல தமிழர்களுக்காகவும் பணியாற்றி வருகிறது. தமிழர்கள் வளர வேண்டும், வாழ வேண்டும், பொருளாதாரத்தில் சிறக்க வேண்டும் என்பதையெல்லாம் முயற்சிகளாக எடுத்துள்ளோம். தமிழர்கள் பொருளாதாரத்தில் எப்படி வளர வேண்டும் என்பதற்காக ஒரு குழு அமைத்திருக்கிறோம்.
அந்த குழு எப்படி தமிழ்நாடு இந்தியாவுக்கே முன்மாதிரியாக இருக்க வேண்டும், எப்படி நாம் வளர வேண்டும்,அந்த வளர்ச்சியின் பயன் அனைவருக்கும் எவ்வாறு சேர வேண்டும் என்பதை ஆய்வு செய்கிறது. சமுதாயத்தில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று அந்த குழு அறிக்கையை தயார் செய்து கொண்டிருக்கிறது.’ என்று தெரிவித்தார்.
இந்திய தேசிய கல்வி நிறுவனத்தின் இயக்குநர் க.சிறீகாந்த் நெகிழ்வுரையில் பேசியதாவது, ‘தமிழர்களுக்கு தான் பாரம்பரியமும், கலாசாரமும் இருக்கிறது. இதுபோன்று உலகில் உள்ள பல இனங்களுக்கு கிடையாது’ என்று பேசினார்.
மேலும் படிக்க | சென்னையில் கொடூரம்: காவல் நிலையம் அருகே பட்டப்பகலில் வாலிபர் வெட்டி கொலை
முனைவர் மறைமலை இலக்குவனார் சிறப்புரையில் பேசியதாவது, “இலக்குவனார் தமிழ்ப் போராளியாகத் திகழ்ந்தார். அன்றைய அரசு அவரை கண்டு அஞ்சியது. அவர் எந்த வகையிலும் வளைக்க முடியாதவராக இருந்தார். தமிழ் இலக்கியங்களை காப்பாற்றுவதற்காக உழைத்தார். அவருடைய போர்குணம் இன்றைய இளைய தலைமுறைக்கு இருக்க வேண்டும்” என்று பேசினார்.
விழாவின் நிறைவாக தமிழியக்கத்தின் வடதமிழக மகளிர் ஒருங்கிணைப்பாளர் கவிக்காரிகை.ஞானி நன்றியுரை நிகழ்த்தினார். இந்த விழாவில், தமிழ் ஆர்வலர்கள், விஐடியின் பேராசிரியர்கள், மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ