கூட்டுறவுச் சங்கங்களை அழிவின் பாதைக்குக் கொண்டு செல்லும் ADMK அரசு: DMK
வளர்ந்து வரும் கூட்டுறவுச் சங்கங்களை அதிமுக அரசு அழிவின் பாதைக்குக் கொண்டு செல்கிறது என ஏ.கே.எஸ்.விஜயன் காட்டம் !
வளர்ந்து வரும் கூட்டுறவுச் சங்கங்களை அதிமுக அரசு அழிவின் பாதைக்குக் கொண்டு செல்கிறது என ஏ.கே.எஸ்.விஜயன் காட்டம் !
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் விவசாயக்கடன் தள்ளுபடி செய்த காரணத்தால் நிமிர்ந்த கூட்டுறவுச் சங்கங்களை அதிமுக அரசு அழிவின் பாதைக்குக் கொண்டு செல்கிறது என ஏ.கே.எஸ்.விஜயன் காட்டம்.
- கழக விவசாய அணிச் செயலாளர் திரு. ஏ.கே.எஸ்.விஜயன் அவர்கள் அறிக்கை.... "தமிழகத்தில் விவசாயிகளுக்கும், ஏழை - எளிய பாமர மக்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கும் பாதுகாப்பாக விளங்கிக்கொண்டிருந்த தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்கள், மண்ணின் மைந்தர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான கழக ஆட்சியின்போது, இயற்கைப் பேரிடரால் விவசாயிகள் தாங்கள் பெற்ற கூட்டுறவுக் கடனைச் செலுத்தமுடியாமல் தவித்தபோது , தாயுள்ளம் கொண்டு அவர்களின் நிலைமையைச் சிந்தித்த கலைஞர் அவர்கள் விவசாயிகளின் 7000 கோடி ரூபாய் விவசாயக்கடனை ஒரே கையெழுத்தில் தள்ளுபடி செய்ததோடு, அந்தக் கடன்தொகை முழுவதையும் அரசே திருப்பிச்செலுத்தும் என அறிவித்தார். அப்படித் தொலைநோக்குத் திட்டத்தோடு செய்யப்பட்ட அந்த விவசாயக் கடன் தள்ளுபடியால்தான், தொடக்க வேளாண் சங்கங்கள் அழிவின் பாதையில் இருந்து மீண்டு கழக ஆட்சியில் புத்துணர்வு பெற்று விளங்கின.
ஆனால் தற்போது தமிழகத்தை ஆளும் செயலற்ற அ.தி.மு.க. அரசின் நிர்வாகத் திறனற்ற செயல்பாடுகளால் கூட்டுறவு சங்கங்கள் அழியும் நிலை ஏற்படுகிறதோ? என்கிற ஐயப்பாடு ஏற்படுகிறது.
தமிழகத்தின் பெரும்பான்மையான கிராமப்புறங்களில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை - எளிய பாமர மக்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் இப்படி பலதரப்பட்ட மக்களுக்கு அங்கே வழங்கப்படும் கடன் தொகைகள், இதுவரை அந்தந்தத் தொடக்க வேளாண்மை மையங்களிலேயே பட்டுவாடா செய்யப்பட்டும், அவை அந்தந்தச் சங்கங்களின் மூலமாகவே திரும்பவும் வசூல் செய்யப்பட்டும் வந்தன.
READ | கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்ய ரூ.15,000 வழங்கப்படும்: CM
ஆனால் தற்போது அந்த நிலையை மாற்றி, தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் கடன் தொகைகளை, கிராமப்புற மக்கள் நகர்ப்புறத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு வந்து தொகையைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நிலையைத் தமிழக அ.தி.மு.க. அரசு உருவாக்கிச் செயல்படுத்தி வருகிறது.
கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழை - எளிய மக்கள் தங்கள் விவசாயத்திற்கும் ஏழ்மை நிலைக்கும் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கும் கடன் தொகையை, தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து பல கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நகர்ப்புற மத்திய கூட்டுறவு வங்கிகளில் வந்து “மிரர் அக்கவுண்ட்” என்கிற கணக்கைத் திறந்து அதன்மூலம் மட்டுமே ரொக்கமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது நடைமுறைக்கு உகந்தது அல்ல.
இப்படிப்பட்ட நிலைகளை நன்கு உணர்ந்திருந்ததால்தான் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது நடைபயணங்களின் போதெல்லாம் விவசாயிகளை அவர்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று சந்தித்தார் என்பதை ஆட்சியாளர்கள் உதாரணமாகக் கொள்ள வேண்டும்.
மேலும் தற்போது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் நோய்த்தொற்று ஆகிய அச்சுறுத்தல்களால் கிராமப்புற மக்கள் பயணம் செய்வதும், அவர்களது பாதுகாப்பும் கேள்விக்குறியாகிறது. அவ்வாறு பயணிக்க அவர்களால் செய்யப்படும் செலவுத்தொகைகள் அனைத்தும் அவர்கள் பெறும் கடனுக்கு மறைமுக வட்டியாகவே கணக்கிடப்படும் என்பதே உண்மை. மேலும், வாங்கிய கடனை வசூல் செய்வதிலும் நகர்ப்புற வங்கிகளுக்கும் நடைமுறை சிக்கல்கள் ஏற்படுவதோடு, கடன் தொகையைத் திருப்பி செலுத்துவதிலும் சிரமங்கள் ஏற்படுகிறது.
எனவே கழக ஆட்சியில் ஏழை - எளிய பாமர மக்களுக்காகவும், விவசாயிகளுக்காகவும், விவசாயத் தொழிலாளர்களுக்காகவும் , மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்காகவும் ஏற்படுத்தப்பட்ட தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகளைக் கழக ஆட்சியில் செயல்படுத்தியது போலவே நடைமுறைப்படுத்தி, அங்கு வழங்கப்படும் கடன்களுக்கான தொகைகளை அதே கிராமப்புற தொடக்க வேளாண் வங்கியில் பணமாகப் பெற்றுக்கொள்ளவும், அந்த கடன் தவணையை அதே இடத்தில் திருப்பிச் செலுத்தவும் கிராமப்புற மக்களுக்கு மீண்டும் அனுமதி வழங்கும் வகையில் அரசாணை பிறப்பிக்க வேண்டும் எனத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.