TN Budget 2022; அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்து, வயிற்றில் அடிக்கும் வஞ்சகச் செயல்: கொந்தளித்த சீமான்
திமுக அரசின் நிதி நிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக அரசின் நிதி நிலை அறிக்கை வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட ஒரு விளம்பர அறிக்கை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:
''தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2022-23 ஆம் ஆண்டுக்கான திமுக அரசின் நிதிநிலை அறிக்கையானது யாதொரு தொலைநோக்குத் திட்டமுமின்றி வெற்று விளம்பர அறிக்கையாக மட்டுமே இருப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாகத் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்குரிய அறிவிப்புகளை நிதிநிலை அறிக்கையில் வெளியிடாமல் ஆளும் திமுக அரசு நழுவி வருவது தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.
மாநிலப் பள்ளிக் கல்வித்துறைக்கான ஒதுக்கீடு ஏறத்தாழ 4,298 கோடி ரூபாய் அளவு குறைக்கப்பட்டு அது நேரடி கல்வித் திட்டங்களுக்கு இல்லாமல் மாற்றுத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பது கண்டனத்திற்குரியது. கல்வித்துறையில் நீட் தேர்வு, புதிய கல்விக்கொள்கை எனப் பல சவால்களை எதிர்கொள்ளும் தற்போதைய காலகட்டத்தில், கல்விக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான தொகையை அதிகப்படுத்தாமல், குறைத்திருப்பது மிகத்தவறான திட்டமிடலாகும். மேலும், மகளிருக்கான 1000 ரூபாய் மாத உரிமைத்தொகை, கல்விக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, எரிபொருள் விலைக் குறைப்பு, சமையல் எரிகாற்று உருளைக்கு 100 ரூபாய் மானியம் போன்ற வாக்குறுதிகளைத் தனது தேர்தல் அறிக்கையில் அள்ளி வீசி, மாநில அதிகாரத்தைக் கைப்பற்றிய திமுக, ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் அவற்றை நிறைவேற்ற எந்தவொரு முன்னெடுப்பையும் செய்யாமல் நிதிநிலை அறிக்கையைத் தயாரித்திருப்பது நம்பி வாக்களித்த மக்களை ஏமாற்றும் துரோகச் செயலாகும்.
அதுமட்டுமின்றி, மறுவாழ்வு முகாம்களில் வாழும் ஈழத்தமிழ் சொந்தங்களுக்கு உதவித் தொகையாக மாதம் 1,500 ரூபாய் வழங்கும் அறிவிப்பு, மீனவக் குடும்பங்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டித்தரும் அறிவிப்பு போன்ற வாக்குறுதிகளைப் பற்றி இந்நிதிநிலை அறிக்கையில் எதுவும் குறிப்பிடாதது அடித்தட்டு உழைக்கும் மக்களை வஞ்சித்து, அவர்களின் வயிற்றில் அடிக்கும் வஞ்சகச் செயலாகும்.
2022-23 ஆம் ஆண்டில் மாநிலத்தின் மொத்தக் கடன் 6,53,000 கோடி ரூபாய் எனும் நிதியமைச்சரின் அறிவிப்பு பெரும் அதிர்ச்சியைத் தருகிறது. 2022-23 ஆம் நிதியாண்டில் முதலீட்டுச்செலவுகள் 43,000 கோடி ரூபாய்தான் எனத் தெரிவித்த பிறகு, ஒரே ஆண்டில் மேலும் 90,000 கோடி ரூபாய் கடன்கள் அதிகமானது எப்படி? என்பது புரியவில்லை. அப்படியென்றால், இந்த அரசு அன்றாடச்செலவுகளுக்கே கடன் வாங்கும் சூழ்நிலையில்தான் உள்ளதா? எனும் அடிப்படை கேள்வி எழுகிறது.
2022-23ஆம் நிதி ஆண்டில் மாநிலத்தின் வருமானம் அனைத்து விதத்திலும் அதிகரிக்கும் எனும்போது 90,000 கோடி ரூபாய் கூடுதலாகக் கடன் வாங்க வேண்டிய தேவையென்ன? இவ்வாறாக, மாநிலத்தின் செலவினங்களை கடந்த ஓராண்டில் திமுக அரசு கட்டுக்குள் வைக்கத் தவறியது கண்கூடாகத் தெரிகிறது. இதுவெல்லாம், திமுக அரசின் நிர்வாகத் திறமையின்மையையே படம்பிடித்துக் காட்டுகிறது.
மேலும் படிக்க | தமிழக பட்ஜெட்டில் இடம்பெறாத 12 முக்கிய அம்சங்கள்: பட்டியலிட்ட ஓபிஎஸ்
2021-22ஆம் ஆண்டில் 1,21,857 கோடி ரூபாயாக இருந்த மாநில வரி வருமானம், 2022-23 ஆம் ஆண்டில் 1,42,799 கோடி ரூபாயாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. கூடுதலாகக் கணக்கிடப்படும் 21,000 கோடி ரூபாயை எந்த முறையில் ஈட்டப்போகிறார்கள்? எனும் கேள்விக்குப் பதிலில்லை. இதன்மூலம், மாநில வரிகள் நாளடைவில் கூட்டப்பட்டு, மக்களின் தலைமீது சுமை ஏறுமோ? எனும் ஐயம் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. மாநில மின் பகிர்மானக்கட்டுமானக்கழகத்தின் இழப்பான 13,000 கோடி ரூபாயை மாநில அரசு ஏற்கும் என்ற அறிவிப்பின் மூலம், இவ்வளவு ஆண்டுகளாகியும் இழப்பில் இயங்கி வரும் அந்நிறுவனத்தை பொருளாதாரச் சீரமைப்பு செய்யவோ அல்லது புதிய முதலீடுகள் மூலம் புத்துயிர்ப்பெறச் செய்யவோ திமுக அரசு முயலவில்லை என்பது புலனாகிறது. இதன் வாயிலாக, கடந்த அதிமுக அரசைப் போலவே, தற்போதைய திமுக அரசும் செயல்பாடற்றத்தன்மையோடு இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.
இத்தோடு, மாநிலத்தின் நேரடி வருமானத்தை ஈட்டும் நிறுவனமாக தொடர்ந்து டாஸ்மாக் இருந்து வருவதும், அதன் வருவாயைப் பெரிதளவில் அரசு நம்பி நிற்பதும் பேரவலத்தின் உச்சமாகும். மாநிலத்தின் கனிமவளங்களை முறைப்படுத்தி வணிகம் செய்தாலே ஆண்டொன்றுக்கு 20,000 கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்ட முடியும் என்ற நிலையில், 3471 அனுமதிகளாக அதனைப் பிரித்து, தனியாருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம், வெறும் 983 கோடி ரூபாயையே வருமானமாகப் பெறுவதென்பது என்ன வகையானப் பொருளாதார நிர்வாகம்? வெட்கக்கேடு!
பன்னெடுங்காலமாக மாநில வருவாயின் பெரும் செலவுத்தொகையாக இருக்கிற அரசு ஊழியர்களின் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றோடு, நடப்பாண்டில் இன்னப் பிற சலுகைகளுக்காக, மேலும் 19,000 கோடி ரூபாய் அளவுக்கு செலவு அதிகமாகும் என்கிறார் நிதி அமைச்சர். இன்றுவரை ஒரு முறைப்படுத்தப்படாத செலவு மையமாகவே இருந்து வரும் இச்செலவின வகையை இந்த ஆண்டும் சரி செய்ய முற்படாதது ஏனென்று புரியவில்லை. மாநிலத்திற்குள் உள்ளூர் முதலீடுகளை ஈர்க்க எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்காத இந்த நிதிநிலை அறிக்கை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தையோ அல்லது வாழ்வாதாரத்தையோ மேம்படுத்த எந்த ஒரு திட்டத்தையும் அறிவிக்கவில்லை என்பதே உண்மை நிலையாகும்.
ஒட்டுமொத்தத்தில், திமுக அரசின் இந்நிதிநிலை அறிக்கையினை, மக்களுக்கு நலன் பயக்காத வகையில் வழமையாக வரும் வெற்று அறிவிப்புகளை மட்டுமே கொண்ட விளம்பர அறிக்கையென மதிப்பிடுகிறேன்''.
இவ்வாறு சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | மாதம் ரூ.1,000 உரிமைத்தொகை எப்போது?..மகளிர் ஏமாற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR