தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீடு, பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒன்பது மாதங்களாகியும் ஒப்புதல் அளிக்க ஆளுனர் மறுப்பது சமூகநீதிக்கு எதிரானது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழ்நாட்டில் (Tamil Nadu) பள்ளிக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழில் படித்தவர்களுக்கு மட்டுமே 20% இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட வேண்டும் என்று கோரி தொடரப்பட்ட வழக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் நேற்று விசாரணைக்கு வந்த போது தான் இதுதொடர்பான சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. இந்த வழக்கு விசாரணையின் போது,  தொடக்கம் முதலே தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே இடஒதுக்கீடு வழங்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுனர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என தமிழக அரசின் வழக்கறிஞர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் ஆளுனர் (Governor) செய்யும் தாமதம் மிகவும் வேதனையளிக்கிறது.


ALSO READ | சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி: தனி இடஒதுக்கீடு உடனே வழங்குக!


தமிழ்வழிக் கல்வி இடஒதுக்கீட்டுக்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு தமிழக ஆளுனர் இந்த அளவுக்கு காலதாமதம் செய்வது தேவையற்றது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு  மருத்துவக் கல்வியில் தனி இட ஒதுக்கீடு வழங்குவது, மகளிருக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது,  தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது போன்ற சிறப்பு ஒதுக்கீடுகளை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு என்பதை பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றமும்,  உயர்நீதிமன்றங்களும் உறுதி செய்திருக்கின்றன. அதுமட்டுமின்றி தமிழ்வழியில் படித்தவர்களுக்காக இட ஒதுக்கீடு என்பது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தானே தவிர, யாருடைய உரிமையையும் பறிக்கும் செயல் அல்ல. அத்தகைய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுனர் தயங்குவது ஏன்? எனத் தெரியவில்லை.


தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியைத் தான் ஊக்குவிக்க வேண்டும். ஜெர்மன் மொழி வழிக் கல்வியையோ, பிரெஞ்ச் மொழி வழிக் கல்வியையோ ஊக்குவிக்க முடியாது. தமிழ்வழியில் பயில்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்ட நிலையில், தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழில் படிப்பவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தினால் கூட தவறில்லை; அது மிகவும் சரியானதாக இருக்கும்.


ALSO READ | PMK on Reservation: வன்னியர் தனி இட ஒதுக்கீடு, கிராம அளவிலான போராட்டத்திற்கு அழைப்பு


தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் எந்த சட்டத்தையும் நிராகரிக்கும் உரிமை ஆளுனருக்கு இல்லை; சட்டத்தின் நோக்கத்தில் ஆளுனருக்கு உடன்பாடு இல்லை என்றால் அதை அரசுக்கு திருப்பி அனுப்பலாம். அத்தகைய சூழலில் ஆளுனரின் ஒப்புதலுக்காக சட்டத்தை அரசு மீண்டும் அனுப்பினால் அதற்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுனருக்கு வேறுவழியில்லை. அதேநேரத்தில் ஒரு சட்டத்திற்கு குறிப்பிட்ட காலத்திற்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்பட வில்லை என்பதால், அதைப் பயன்படுத்திக் கொண்டு தமக்கு உடன்பாடு இல்லாத சட்டங்கள், பரிந்துரை தீர்மானங்களை கிடப்பில் போடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் ஆளுனர் பன்வாரிலால் புரோகித் (Banwarilal Purohit).


பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலைக்கான தமிழக அமைச்சரவையின் பரிந்துரை தீர்மானம், மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீட்டுச் சட்டம் ஆகியவற்றிலும் இதே அணுகுமுறையைத் தான் ஆளுனர் கையாண்டார். தமிழகத்தில் எழுந்த கடும் எதிர்ப்பு காரணமாக மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு மட்டும் அண்மையில் ஒப்புதல் அளித்தார். தமிழ்வழி கல்வி இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம், 7 தமிழர் விடுதலை ஆகிய விவகாரங்களில் ஆளுனரின் தாமதப்படுத்தும் தந்திரம் தொடர்கிறது. இது நியாயமல்ல.


ALSO READ | Ramadoss on Reservation: சாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி


தமிழ்மொழியில் படிப்பவர்களுக்கான 20% இட ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட  பாட்டாளி மக்கள் கட்சி முக்கியக் காரணம் ஆகும். தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் 20% இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் 2010&ஆம் ஆண்டு அப்போதைய திமுக ஆட்சியில் நிறைவேற்றப் பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் பெரும்பாலான பணிகளுக்கு பட்டப்படிப்பு அடிப்படைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், ஏற்கெனவே பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை ஆங்கில வழியில் படித்த பலரும், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை மட்டும் அஞ்சல் வழியில் தமிழ் மொழியில் படித்துவிட்டு, அரசுத் துறை வேலைவாய்ப்புகளில் 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டைப் பெற்று பயனடைந்து வருகின்றனர். இதனால், இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதன் அடிப்படை நோக்கமே சிதைக்கப்பட்டுவிட்டது. இதைத் தடுக்கும் வகையில், பள்ளிக் கல்வி முதல் பட்டப்படிப்பு வரை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டும் இந்த 20% இட ஒதுக்கீடு கிடைக்கும் சட்டத் திருத்தம் செய்ய வேண்டும் என்று பாமக (Pattali Makkal Katchi) பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. அதனடிப்படையில் தான் இந்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டது.


தமிழர், தமிழ் மொழி, சமூகநீதி சார்ந்த சட்டங்களை ஆளுனர் பன்வாரிலால் முடக்கி வைத்திருப்பது  எந்த வகையிலும் சரியல்ல. இதற்காக எத்தகைய சட்ட ஆலோசனை நடத்தினாலும், இவ்வளவு காலதாமதம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்வழிக் கல்வி 20% இட ஒதுக்கீட்டுச் சட்டத்திருத்தத்திற்கு ஆளுனர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுனர் அதை செய்ய மறுத்தால், தமிழக அரசே நேரடி அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR