நான் கிறிஸ்தவர் என்பதால் தேசிய கொடி ஏற்றமாட்டேன் - தலைமை ஆசிரியையின் செயலால் சர்ச்சை
தான் ஒரு கிறிஸ்தவர் என்பதால் தேசிய கொடியை ஏற்றமாட்டேன் என கூறிய தலைமை ஆசிரியையின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அடுத்த பேடரஅள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் 282 மாணவ,மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியர் தமிழ்செல்வி உள்ளிட்ட 13 ஆசிரியர்கள் பணிசெய்து வருகின்றனர். தலைமை ஆசிரியை தமிழ்செல்வி இப்பள்ளியில் கடந்த 4 ஆண்டுகளாக பணிசெய்கிறார். அவர் இந்தாண்டு ஓய்வு பெற உள்ளார். இந்நிலையில் நேற்று 75ஆவது சுதந்திர தினவிழாவையொட்டி அப்பள்ளியில் கொடியேற்ற ஏற்பாடு நடந்தது. விழாவில் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தலைமை ஆசிரியை இந்தாண்டு ஓய்வு பெற உள்ளதால் தலைமை ஆசிரியை தமிழ்செல்வி தேசியகொடி ஏற்ற பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர்.
இதற்கு தலைமை ஆசிரியை தமிழ்செல்வி மறுப்பு தெரிவித்து, நான் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். எனவே கொடி ஏற்றி வணக்கம் வைக்க மாட்டேன். நான் என்னுடைய கடவுளுக்கு மட்டும்தான் வணக்கம் செலுத்துவேன் என்றார். இதனால் கிராம மக்கள் அதிர்சியடைந்தனர்.பிறகு உதவி தலைமை ஆசிரியர் முருகன் மூலம் கொடி ஏற்றப்பட்டது.
தேசிய கொடி ஏற்றவில்லை என்றாலும் பரவாவில்லை பள்ளி குழந்தைகளுக்கு திருக்குறள் புத்தகம் கொடுங்கள் என மக்களும், உடன் பணியாற்றும் ஆசிரியர்களும் கூறியுள்ளனர். அதற்கும் தமிழ்செல்வி தலைமை ஆசிரியை மறுத்துள்ளார். இதனால் கோபமடைந்த கிராம மக்கள் தேசியகொடி ஏற்ற மறுத்த தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தருமபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் மனு அளித்தனர்.
இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும்போது, “தலைமை ஆசிரியை கடந்த நான்கு ஆண்டுகளாக பள்ளியில் நடைபெறும் சுதந்திர தினவிழா மற்றும் குடியரசு தின விழாவில் வந்து கொடியேற்றாமல் எனக்கு உடல்நிலை சரியில்லை என விடுமுறை எடுத்துக்கொள்வார். இதை நாங்கள் எதார்த்தமாக எடுத்துக்கொண்டோம். ஆனால் அதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறதென்று இப்போதுதான் தெரிகிறது.
இவர் வேண்டுமென்றுதான் தேசியக்கொடியை ஏற்றுவதில்லை. உள்ளூர் கோயில் திருவிழாவிற்கு விடுமுறையளிக்க மாட்டார். சமத்துவ பொங்கல் கொண்டாட மாட்டார். மேலும் பள்ளிக்கு பூ,பொட்டு வைத்து வரும் மாணவிகளை கண்டால் தலைமை ஆசிரியைக்கு பிடிக்காது” என்றனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ