இறக்குமதி செய்த மணலை பயன்பாட்டு நிபந்தனையை தளர்த்த வேண்டும்: ஸ்டாலின்!
இறக்குமதி செய்யப்பட்ட மணல் பயன்பாட்டுக்கான நிபந்தனைகளை தளர்த்தி – உச்ச நீதிமன்ற உத்திரவை ‘குதிரை பேர’ அரசு முறைப்படி செயல்படுத்த வேண்டும் கழக செயல் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இறக்குமதி செய்யப்பட்ட மணல் பயன்பாட்டுக்கான நிபந்தனைகளை தளர்த்தா கோரி மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது:- கட்டுமானத் தொழிலுக்கு அவசியத் தேவையான மணலுக்கு தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல், வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த ‘குதிரை பேர’ அதிமுக அரசு, இப்போது உயர்நீதிமன்றம் தலையிட்ட பிறகு, மணல் இறக்குமதிக்கு அனுமதி வழங்கும் வகையில் புதிய அரசாணை வெளியிட்டிருக்கிறது.
ஆனால், அந்த அரசாணையில் விதிக்கப்பட்டுள்ள 11 நிபந்தனைகள், இறக்குமதி செய்யப்பட்ட மணல், ‘கட்டுமானத் தொழிலுக்கும் - தேவைப்படும் மக்களுக்கும்’ உரியமுறையில் சென்று சேருமா என்ற நியாயமான கேள்வியை எழுப்பியிருக்கிறது.
மணல் இருப்பு வைப்பது, விற்பனை, தரக்கட்டுப்பாடு செய்வது போன்றவை அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டது என்றாலும், இந்த நிபந்தனைகளே, ஆற்றுமணல் குவாரிகளில் ஏற்கனவே ஆட்சியாளர்கள் நடத்தி வரும் முறைகேடுகள் போலவே, மீண்டும் அரங்கேற்றத் துணை போய்விடுமோ என்ற சந்தேகத்தை எழுப்புவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.
தரத்தைப் பரிசோதிப்பது, ஒருவகையில் மக்களுக்கு தரமான மணல் கிடைக்க வேண்டும் என்ற நியாயமான நோக்கம் என்றால், மணல் இறக்குமதி தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கடும் நிபந்தனைகள் இறக்குமதி மணலின் நோக்கத்தையே பாழ்படுத்தி, செயற்கையாக ஒரு மணல் தட்டுப்பாட்டை உருவாக்கி, மீண்டும் ஊழலுக்கு வழி வகுக்கத் திட்டமிடப்பட்டு இருப்பதாகவே தெரிகிறது.
எந்தவித உரிமையும் இல்லாமல் ஒரு நிறுவனம் எப்படி மணலை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியும் என்ற கேள்வியை, இந்த நிபந்தனைகளை விதித்தவர்கள் தங்களுக்குள் கேட்டுக் கொண்டதாகவே தெரியவில்லை. ஏற்கனவே நலிவடைந்து போயிருக்கும் கட்டுமானத் தொழிலையும், இலட்சக்கணக்கான கட்டிடத் தொழிலாளிகளையும் காப்பாற்றும் விதத்தில் இந்த நிபந்தனைகள் வெளியிடப்படவில்லை என்பது இதிலிருந்தே புலனாகிறது.
மணல் தட்டுப்பாட்டைப் போக்குவதற்கு மாறாக, மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கி, மீண்டும் இயற்கை வளங்களை அழிக்கும் மணல் குவாரிகளைத் திறந்து, ஆளுங்கட்சியினர் தமது பைகளை நிரப்பிக் கொள்வதற்க வேண்டும் என்பதற்காகவே, கவைக்குதவாத பதினோரு நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளனவா என்ற அடிப்படை அய்யம் எழுகிறது.
ஆகவே, தமிழகத்தில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதைத் தடுப்பதற்கு முழுமையாக உதவும் வகையில், இறக்குமதி செய்யப்பட்ட மணலுக்கு தளர்வான நிபந்தனைகளை விதித்து, இறக்குமதி மணல் குறித்த உயர்நீதிமன்ற உத்தரவின் உண்மை நோக்கத்தைப் புரிந்து ‘குதிரை பேர’ அதிமுக அரசும் - குறிப்பாக பொதுப்பணித்துறையை தன்னிடம் வைத்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியும் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இல்லாவிட்டால் தலைவலிக்கான மருந்தைப் பயன்படுத்தாமல், ‘திருகுவலி வரட்டும் என்று காத்திருப்பதைப் போன்ற காரியம் இது’ என்றே மக்கள் கருதுவார்கள்" என்று அவர் தெரிவித்தார்.