சென்னை ஐஐடி-யில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் மகா கணபதி!
சென்னை ஐ.ஐ.டி-யில் நடந்த மத்திய அரசு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு பதில் சமஸ்கிருதத்தில் ‘மகா கணபதி’ பாடல் ஒலிபரப்பியதால் சர்ச்சை.
சென்னை: சென்னை ஐ.ஐ.டி-யுடன் தேசிய துறைமுகம், நீர்வழிப்பாதை, கடற்கரை தொழில்நுட்பத்துறை ஒப்பந்தம் செய்து கொள்ளும் விழா, சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் இன்று காலை நடந்தது. இதில், சாகர்மாலா திட்டத்தின் கீழ் சென்னை ஐ.ஐ.டி-யில் தேசிய தொழில்நுட்ப மையம் அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது.
இவ்விழாவில் மத்திய கப்பல் போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இவ்விழாவின் துவக்கத்தில் வழக்கமாக ஒலிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு பதிலாக, 'மகா கணபதி' என துவங்கும் சமஸ்கிருத பாடலை மாணவர்கள் பாடினர். மத்திய அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் சமஸ்கிருத மொழி பாடல் பாடப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை ஐ.ஐ.டி இயக்குனர் பாஸ்கரன் ராமமூர்த்தி, மாணவர்கள் தாமாக முன்வந்தே சமஸ்கிருத பாடலை பாடினர். சமஸ்கிருத பாடல் சர்ச்சை தேவையற்றது என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து, இனி தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.