அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் கோரிக்கை!! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"கிராமப்புற & நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீதான வெறுப்புணர்வை பாஜக அரசு கைவிட்டு - புதுச்சேரி (Puducherry) அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக்கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு ஒப்புதல் வழங்க வேண்டும்" என திமுக தலைவர் முக.ஸ்டாலின் (MK.Stalin) கோரிக்கை விடுத்துள்ளார். 


- கழக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., “மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை ஏற்க முடியாது” என்று புதுச்சேரியைச் சேர்ந்த ப்ளஸ்-டூ மாணவியின் தாயார் தொடர்ந்துள்ள வழக்கில், மத்திய BJP அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.


மத்திய உள்துறை அமைச்சகம், குடும்ப நல அமைச்சகம் (Ministry of Family Welfare), பணியாளர் மற்றும் பயிற்சித் துறை அமைச்சகம் அனைத்தும் ஓரணியில் நின்று “அரசுப் பள்ளி (Govt School) மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது, கல்வியின் தரத்தைப் பாதிக்கும்” என, ‘தரத்தைப்’ பற்றி நீண்ட காலமாக, பொதுவெளியில் வைக்கப்படும்  சொத்தை வாதத்தைச்  சென்னை உயர்நீதிமன்றத்திலும் முன்வைத்திருப்பது, இளைஞர்களுக்கு அநீதி இழைப்பதாகும்!


நீட் தேர்வை வலுக்கட்டாயமாகத் திணித்து, கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்களின் மருத்துக் கல்விக் கனவைச் சிதைத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு (BJP Govt) - அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் புதுச்சேரி மாநில அரசு வழங்க முன்வந்துள்ள 10 சதவீத இடஒதுக்கீட்டையும் தடுத்து நிறுத்திட, அம்மாநில துணைநிலை ஆளுநருடன் சேர்ந்து சூழ்ச்சி செய்கிறது. குறிப்பாக, “இந்த ஆண்டு அந்த இடஒதுக்கீடு வழங்குவதற்கு வாய்ப்பே இல்லை” என்று மத்திய பா.ஜ.க. அரசு வாதிடுவது, அக்கட்சித் தலைமையிலான ஆட்சிக்கு சமூகநீதிக் கொள்கைகள் மீதும் - இடஒதுக்கீட்டுக் கொள்கைகள் மீதும் - பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின இளைஞர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளைப் பெற்று முன்னேற மேற்கொள்ளும் முயற்சிகளின் மீதும் - இருக்கும் நீங்கா வெறுப்புணர்வைக் காட்டுகிறது.


ALSO READ | அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி இடஒதுக்கீடு வழங்கினால் தரம் குறையுமா?


இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு ஆதரவு போல் ஒருபுறம் வேடம் போட்டு, இன்னொருபுறம், ஏதாவது ஒரு வகையில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஒழித்து விடத் துடிக்கிறது மத்திய அரசு. 


நீட் தேர்வு எழுதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டில், மாநிலத்திற்கு மாநிலம் வெவ்வேறு நிலைப்பாட்டை எடுத்து, சமூகநீதியை எப்படியெல்லாம் காயப்படுத்திச் சாய்த்திட முடியுமோ அப்படியெல்லாம் செய்து வருகிறது.


தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுடன் கொண்டு வரப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 இடஒதுக்கீட்டை வழங்காமல் மாநில ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் போராட்டத்தாலும் - உயர்நீதிமன்றத்தின் உத்தரவாலும் - நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தார். அவ்வாறு ஒப்புதல் அளித்த போது தமிழக ஆளுநர் அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தமிழக அரசின் மசோதா மீது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் 26.9.2020 அன்று கருத்து (Opinion) கேட்கப்பட்டது. அதற்கு 29.10.2020 அன்று அவர் தனது கருத்தினை அளித்தார்” என்று கூறியதோடு நில்லாமல், ஆளுநர் அவர்களின் செயலாளர், சொலிசிட்டர் ஜெனரலுக்கு எழுதிய கடிதத்தையும், அதற்கு சொலிசிட்டர் ஜெனரல் அளித்த கருத்தையும்  பொதுமக்கள் பார்வைக்கு இணைத்தே வெளியிட்டிருந்தார். 


தமிழக ஆளுநர் அவர்களின் அந்தச் செய்திக்குறிப்பில் இடம்பெற்றுள்ள கருத்துரையில், “நீட் தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கும்  மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது (in consonance with the Constitution of India)" என்று மிகத் தெளிவாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்திருக்கிறார். இதன் அடிப்படையில்தான் ஆளுநர் அவர்கள், தமிழக அரசின் மசோதாவிற்கு 30.10.2020 அன்று ஒப்புதல் அளித்தார்.
தமிழக அரசின் மசோதா அரசியல் சட்டப்படி இருக்கிறது என்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலே கூறியிருக்கும் போது, அவரின்கீழ் பணிபுரியும் மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டரும், மத்திய அரசின் பல்வேறு துறைகளும் எப்படி புதுச்சேரி மாநில அரசு வழங்கும் 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் மாறுபாடான  நிலைப்பாட்டை எடுக்கிறார்கள்? குறிப்பாக, தமிழக மசோதா தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கில், உயர்நீதிமன்றமே தடை விதிக்க முடியாது என்று மறுத்து விட்ட நிலையில் - புதுச்சேரி மாநில விவகாரத்தில் இப்படியொரு நிலைப்பாட்டை உயர்நீதிமன்றத்திற்குத் தெரிவித்து - தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் போராடிப் பெற்ற 7.5 சதவீத இடஒதுக்கீட்டைச் சீர்குலைக்க மத்திய அரசு திட்டமிடுகிறதோ என்ற அடிப்படையான  சந்தேகம் எழுந்துள்ளது. மத்திய பா.ஜ.க. அரசு, தமிழக மாணவர்களின் எதிர்காலத்துடன் அப்படியொரு விபரீத விளையாட்டை நடத்திடக் கனவிலும் நினைக்கக்கூடாது.


ALSO READ | சசிகலாவுக்கு கடும் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை!


தமிழகத்திலும் - புதுச்சேரியிலும் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள் மீது - குறிப்பாக, மருத்துவக் கல்வி கற்க வேண்டும் என்று கருதும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மீது இருக்கும் வெறுப்புணர்வை மத்திய பா.ஜ.க. அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும், புதுச்சேரி மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து, இந்த ஆண்டே புதுச்சேரி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், மருத்துவக் கல்வியில் முன்னுரிமை இடஒதுக்கீடு கிடைப்பதை உறுதி  செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.


“விளம்பர மோகத்தில்” மயங்கிக்  கிடக்கும் முதலமைச்சர் திரு. பழனிசாமி, மத்திய அரசின் புதிய நிலைப்பாட்டால் தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வில் வழங்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எவ்வித ஆபத்தும் வந்திடாதவாறு - மிகவும் விழிப்புடன் இருந்து பாதுகாத்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்...


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR