வைரமுத்துவை ஹச்.ராஜா விமர்சித்ததை கண்டித்து தொடர்பாக ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், நம் உயிரினும் மேலான தமிழ் மொழிக்கு காலத்தால் அழியாத காவியங்களை தந்த படைப்பாளிதான் கவிப்பேரரசர் வைரமுத்து. தேனினும் இனிய பாடல்களை கலைத்துறைக்குத் தந்தார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவர் தீட்டிய கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் புதினங்கள் தமிழ்க்குலத்தின் பண்டைய பண்பாட்டு நெறிமுறைகளையும் இருபதாம் நூற்றாண்டின் தமிழனுடைய வாழ்க்கைப் போராட்டத்தையும் அற்புதமாக சித்தரித்தவை. 


நீண்ட நெடிய தமிழ் இலக்கிய வரலாற்றில் அடுத்த தலைமுறையின் சிந்தனைக்கு கருவூலமாக்கித் தரும் அவரது தமிழ்ப் பணி இன்னும் பல நூறாண்டுகளுக்குப் போற்றப்படும் என்று தெரிவித்துள்ளார்.


மேலும், தென்பாண்டிக் கடல் முத்தாக ஒளிவீசும் வைரமாக தமிழ்த் தாய்க்குக் கிடைத்த ஒப்பற்ற புகழ் அணிதான் வைரமுத்து. அரை நூற்றாண்டுக் காலத்துக்கு மேலாக செந்தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் அவர் ஆற்றி வருகிற இலக்கிய பணி நன்றிக்குரியதாகும். 


வைரமுத்து தனி மனிதரல்ல; தமிழர்களின் சொத்து. சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாம் போற்றத்தகும் ஆண்டாளையும் அவர் தந்த பாடல்களை மிக உன்னதமாகச் சித்தரித்துள்ளார்.


மணிமுடி வேந்தர்களின் அரணாக வளர்ந்த தமிழையே ஆண்டாள்; தமிழ் மொழியையே ஆட்சி புரிந்தாள் என்று தலைப்பிட்டு அவர் எழுதினார். விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கும் கருத்து குறித்து அச்செந்தமிழ்க் கவிஞன் வருத்தம் தெரிவித்துள்ளார். 


அவரது கருத்தை விமர்சிப்பது, அது தவறு எனக் கூறுவது ஒவ்வொருவர் உரிமையாகும். ஆனால், கவிஞர் வைரமுத்துவை கொடூரமான சொற்களால் இழிவுபடுத்தி மிரட்ட முயல்வதும் உயிருக்கே உலை வைப்போம் என்று கூச்சலிடுவதும் கண்டனத்திற்குரியதாகும்.


தென்பாண்டி மண்டலத்தின் தீரமிகு கவிஞரை மிரட்டலாம் என்றோ அவருக்கு ஊறு விளைவிக்கலாம் என்றோ எவரும் கனவுகூட காண வேண்டாம் என வைகோ தெரிவித்துள்ளார்.