நீண்டகாலமாக மானிய விலையில் சர்க்கரை வழங்கி வந்த திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற முடிவை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்தது. அந்த முடிவை அ.இ.அ.தி.மு.க. அரசு எதிர்க்காத காரணத்தால் பொது விநியோக திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிற சர்க்கரை விலை கிலோ ரூபாய் 25 ஆக தமிழக அரசு
உயர்த்தியிருக்கிறது. இந்த முடிவு தமிழ்நாட்டு மக்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உருவாக்கியிருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. அச்சட்டத்தின்படி நாட்டின்
மக்கள் தொகையில் 67.5 சதவீதத்தினருக்கு, அதாவது 81 கோடி மக்களுக்கு ஒரு கிலோ கோதுமை ரூபாய் 3, ஒரு கிலோ அரிசி ரூபாய் 2, ஒரு கிலோ பருப்பு ரூபாய் 1 என்கிற அளவில் பயனாளிகளுக்கு வழங்க வழிவகை செய்யப்பட்டது.


இதற்காக உணவு மானியமாக ஒரு லட்சத்து 24 ஆயிரம் கோடி ரூபாயை மத்தியஅரசு ஒதுக்கியது. இந்த அடிப்படையில் பொது விநியோக திட்டத்தின் கீழ்மாநில அரசுகளுக்கு பொதுச் சந்தையில் ஒரு கிலோ சர்க்கரையை ரூ 34 விலைக்கு வாங்கி, ரூபாய் 13.50 விலையில் மாநில அரசுகளுக்கு வழங்கி வந்தது. இதனால் ஒரு கிலோ சர்க்ரைக்கு மத்திய காங்கிரஸ் அரசு ரூபாய் 20.50 மானியமாக வழங்கியது. இந்த சலுகையை பறிக்கிற வகையில் மத்திய பா.ஜ.க. அரசு எடுத்த முடிவிற்கு ஏற்ப தமிழக அ.இ.அ.தி.மு.க. அரசு ஒரு கிலோ சர்க்கரை விலையை ரூபாய் 13.50 என்கிற நிலையிலிருந்து ரூபாய் 25 ஆக கிட்டத்தட்ட இரண்டு மடங்கு விலையை உயர்த்தியிருக்கிறது. 


இதற்காக என்னகாரணம் கூறப்பட்டாலும் பொது விநியோகத் துறையின் கீழுள்ள நியாயவிலைக் கடைகளில் சர்க்கரை வாங்குவோர் அனைவரும் ஏழைஎளிய மக்கள்தான். பணக்காரர்கள் எவரும் நியாய விலைக் கடைகளில் சர்க்கரை வாங்குவதில்லை.


எனவே, வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள பிரிவினருக்குத் தான் சலுகைவிலையில் சர்க்கரை வழங்கப்படும், மற்றவர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று கூறுவது அப்பட்டமான மக்கள் விரோத நடவடிக்கையாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். 


எனவே, ஒரு கிலோ சர்க்கரை விலை ரூபாய் 25 என்ற விலை உயர்வை ரத்து செய்து, பழைய விலையான ரூபாய் 13.50 என்ற மானிய விலைக்கு நியாய விலைக்கடைகளில் திரும்ப வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.


இவ்வாறு அவர் கூறியுள்ளார்.