சீர்மரபினர் சமூகத்தினரை சீர் மரபினர் பழங்குடியினர் என அழைக்கும் வகையில் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் DNC என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனி மத்திய அரசின் இட ஒதுக்கீட்டை பெற வசதியாக DNT அதாவது சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், சீர்மரபினர் சமூகத்தினர் என்பது தமிழகத்தை பொருத்தவரை சீர்மரபினர் பழங்குடியினரை மட்டுமே குறிப்பிடுவதாக சமூகநலத்துறை அமைத்த குழு தனது அறிக்கை யில் தெரிவித்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தமிழகத்தில் சீர்மரபினர் பிரிவில் 68 சமூகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள் 1979 ஆம் ஆண்டுக்கு முன் வரை சீர் மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்பட்ட நிலையில் சீர்மரபினர் என்று மட்டுமே அழைக்க வேண்டும் என்றும் அவர்கள் பழங்குடியினர் என்ற வார்த்தையை பயன்படுத்தக் கூடாது என்றும் 1979-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


இதனால் தங்களுக்கு பழங்குடியினருக்கான சலுகைகள் மறுக்கப்படுவதாகவும் மீண்டும் சீர்மரபினர் பழங்குடியினர் என மாற்ற நடவடிக்கை எடுக்குமாறும் தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன. இது தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வருவாய் நிர்வாக முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைத்து அரசு உத்தரவிட்டது. அந்தக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் 1979 ஆம் ஆண்டு அரசாணையை திரும்பப் பெற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.