தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை குறித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தனர். தடையை மீறி ஊர்வலம் சென்ற பொது மக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு கடந்த மே மாதம் 24 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது.


இந்நிலையில், கடந்த 21 ஆம் தேதி டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது.


ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியை பாத்திமா பாபு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. 


இந்நிலையில் மதுரை நீதிமன்ற கிளையின் உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனுவில், தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. 


எனவே, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை ரத்துசெய்து, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.