MK Stalin: டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயம்... எதனால் இத்தனை உயிரிழப்புகள் - முதல்வர் விளக்கம்
MK Stalin: விழுப்புரம், மரக்காணத்தில் கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்கள் முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
MK Stalin On Illicit Liquor Issue: விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். இதன்பின், கள்ளச்சாராயம் மரணம் தொடர்பாக விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு 4 உள்ளிட்ட மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி கருத்தரங்கு கூட்டத்தில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் பொன்முடி, எ.வ. வேலு, செஞ்சி மஸ்தான், அன்பரசன் மற்றும் டிஜிபி சைலேந்திரபாபு உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்திப்பில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "முதற்கட்ட விசாரணையில் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் பயன்படுத்தியதால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளச்சாராயம் விற்றவர்கள், அதில் மெத்தனால் எரிச்சாரயம் பயன்படுத்தி உள்ளனர். கள்ளச்சாராய உயிரிழப்பு தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்படும். மரக்காணம் சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயம்
இதுதொடர்பாக அனைவரும் கைது செய்யப்படுவர். குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டாஸ்மாக் பாட்டில்களில் கள்ளச்சாராயத்தை அடைத்து விற்றுள்ளனர். சட்டம் ஒழுங்கு, கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பது தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டோருக்கு உடனடியாக அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது" என்றார்.
12 பேர் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பத்தில் கள்ளச் சாராயத்தைக் குடித்த 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, வசந்தா, வெண்ணியப்பன், சந்திரா ஆகிய நால்வரும் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தைக் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த வழக்கில் விஷ சாராயத்தை விற்ற அமாவாசை (40 ) கைது செய்யப்பட்டார்.
10 தனிப்படை
இந்த 2 சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றக் கோணத்திலும், இந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இந்த விஷச் சாராயம் எந்த வகையில் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவுக் குற்றவாளிகளைப் பிடிக்க காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
நிவாரணம் அறிவிப்பு
விழுப்புரம், செங்கல்பட்டு என கள்ளச்சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் விழுப்புரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 10 லட்சம் நிவாரணத்தை முதல்வர் அறிவித்த நிலையில், செங்கல்பட்டு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் அதே நிவாரணம் வழங்கப்படும் என இன்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருபவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிவாரணமாக அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ