விழுப்புரம் விஷ சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை உயர்வு... போலீசாரின் அடுத்த ஆக்‌ஷன் என்ன?

Illicit Liquor Issue: விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷ சாராயம் குடித்து பல உயிரிழந்துள்ள நிலையில், மதுவிலக்கு சோதனை முடக்கி விடப்பட்டு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 14, 2023, 10:22 PM IST
  • விழுப்புரத்தில் இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு.
  • செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தம் நான்கு பேர் உயிரிழப்பு.
  • இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா எனவும் விசாரணை.
விழுப்புரம் விஷ சாராயம் விவகாரம்: பலி எண்ணிக்கை உயர்வு... போலீசாரின் அடுத்த ஆக்‌ஷன் என்ன? title=

Illicit Liquor Issue: விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று (மே 14) மாலை செய்தியாளர்களுக்கு வடக்கு மண்டல ஐஜி என். கண்ணன் பேட்டியளித்தார். உடன் டிஐஜி ஆர்.பகலவன், விழுப்புரம் எஸ்பி என். ஸ்ரீநாதா ஆகியோர் இருந்தனர்.

அப்போது பேசிய ஜஜி என். கண்ணன்,"மெத்தனால் கலந்த விஷ சாராயத்தை குடித்து, விழுப்புரம் மாவட்டத்தில் 5 பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 பேரும் உயிரிந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் வடக்கு மண்டலத்துக்குள்பட்ட மாவட்டங்களில் தீவிர மதுவிலக்கு சோதனை முடக்கிவிடப்பட்டள்ளது.

வடக்கு மண்டல ஐஜி ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பத்தில் விஷம் சாராயத்தைக் குடித்த 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 35க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், இன்று காலை மரக்காணம் காவல் நிலையத்தில் ஐஜி என். கண்ணன் ஆய்வு செய்தார். 

தொடர்ந்து அவர், விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில்,"கள்ளச்சாராயம் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க காவல்துறை மூலம் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புவியியல் ரீதியாக விழுப்புரம் மாவட்டம் புதுச்சேரிக்கு அருகாமையில் உள்ளதால் மதுக்குற்றங்கள் அதிகளவில் நடக்கின்றன.

மருத்துவக் கண்காணிப்பில் 30க்கும் மேற்பட்டோர்

மரக்காணம் வட்டம், எக்கியார்குப்பத்தைச் சேர்ந்த 6 பேர் கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு புதுவை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மே 13,14ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்ட எஸ்பி அங்கு சென்று விசாரணை நடத்தியதில் விஷச்சாராயம் குடித்ததால் இந்த பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

மேலும் படிக்க | கள்ளச்சாராய விற்பனை: அமைச்சர் பொன்முடி கடும் எச்சரிக்கை

இதுகுறித்து கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, மேலும் 33 பேர் மருத்துவக்கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டனர். தொடர்ந்து 5 பேர் மீது சாராய வழக்குப் பதிந்து அமரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் வசமிருந்த சாராயத்தை பறிமுதல் செய்து ஆய்வு செய்ததில் அது மெத்தனால் கலந்த விஷ சாராயம் என்பதும் தெரியவந்தது. இந்த விஷ சாராயத்தை குடித்த எக்கியார் குப்பம் பகுதியைச் சேர்ந்த சி. சங்கர், கோ. தரணிவேல், பெ.சுரேஷ், து. ராஜமூர்த்தி, ரா. மலர்விழி ஆகியோர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

செங்கல்பட்டில் நால்வர் உயிரிழப்பு

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூர் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பேருக்கரணை கிராமத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி, வசந்தா, வெண்ணியப்பன், சந்திரா ஆகிய நால்வரும் மெத்தனால் கலந்த விஷ சாராயத்தைக் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இந்த வழக்கில் விஷ சாராயத்தை விற்ற அமாவாசை (40 ) கைது செய்யப்பட்டார்.

2 சம்பவங்களுக்கும் தொடர்பா?

இந்த 2 சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றக் கோணத்திலும், இந்த தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் இந்த விஷச் சாராயம் எந்த வகையில் கிடைத்தது என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குகளில் தொடர்புடைய தலைமறைவுக் குற்றவாளிகளைப் பிடிக்க காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

வடக்கு மண்டலத்துக்குள்பட்ட விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம் , திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மதுவிலக்கு சோதனை முடக்கி விடப்பட்டுள்ளது. தனிப்படையினர் மாவட்டப் போலீஸருடன் இணைந்து தீவிர மது விலக்கு சோதனையில் ஈடுபடுவர்.

வதந்தியை நம்பாதீர்கள்!

கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக, விழுப்புரம் மாவட்டத்தில் 2 காவல் ஆய்வாளர்கள், 2 உதவி ஆய்வாளர்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரு காவல் ஆய்வாளர், 2 உதவி ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், டாஸ்மாக் மதுக்கடையில் வாங்கிய மதுவினை உட்கொண்டதால் இச்சம்பவங்கள் நிகழ்ந்ததாக வதந்தி பரப்பப்பட்டு வருவது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது" என்றார். விழுப்புரம் சரக காவல்துறைத் துணைத் தலைவர்( பொறுப்பு) ஆர்.பகலவன், விழுப்புரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் என்.ஸ்ரீ நாதா ஆகியோர் உடனிருந்தனர். 

பலி எண்ணிக்கை உயர்வு

இந்நிலையில், விழுப்புரத்தில் விஷ சாரயத்தை குடித்த மன்னாங்கட்டி என்ற நபரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விழுப்புரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. ட

முதல்வர் இரங்கல்

முன்னதாக, உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்தார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருபவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் எனவும் அறிவித்தார். 

மேலும் படிக்க | அடுத்தடுத்த அதிரடியில் ஸ்டாலின்... ஊசலாட்டத்தில் 10 மாவட்ட செயலாளர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News