முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதாகக் கூறும் அரசு, சபரிமலை விவகாரத்தில் பின்பற்றாதது ஏன்? என திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஸ்லாமிய பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) மசோதா, 2019 மீதான விவாதம் இன்று மக்களவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவிக்கையில்., ''இந்த மசோதாவை நான் எதிர்க்கிறேன். இது சரியான திசை நோக்கிச் பயணிக்கவில்லை. ஆணவக் கொலைகளை நிறுத்தும் வகையில் அரசு மசோதா தாக்கல் செய்யவேண்டும். சாதி எனும் பெயராலும், மதம் எனும் பெயராலும் தினந்தோறும் ஆணவக் கொலைகள் நடைபெறுகிறது. அவற்றைத் தடுத்து நிறுத்த என்ன சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்?


கும்பல் வன்முறைக்கு எதிராகவும் நாம் மசோதாவை நிறைவேற்றவேண்டும். இதுதான் இப்போதைய அவசியத் தேவை. பெண்களுக்கு என்ன தேவை என்பது பெண்களுக்கு தானே தெரியும், எங்களுக்கு தற்போது திருமண உரிமைகள் பாதுகாப்பு மசோதா அவசியம் இல்லை. 


உண்மையில் பெண்கள் நலனை மத்திய அரசு கருத்தில் கொண்டால் அவர்கள் முதலில் கொண்டு வர வேண்டியது 33% இட ஒதுக்கீடு மசோதா தான், பெண்கள் ஒதுக்கீடு மசோதா அவர்களின் தேர்தல் வாக்குறுதியிலேயே உள்ளது. இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தும் இதுகுறித்துப் பேசவில்லை. ஆனால் முஸ்லிம் பெண்கள் குறித்து ஆர்வம் காட்டி வருகின்றனர்.



முஸ்லிம் பெண்கள் மசோதா பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் பாகுபாடு காட்டுவதாகவும் அமைந்துள்ளது. முத்தலாக் விவகாரம் சிவில் பிரச்சினையாக இருக்கும்போது அதை குற்றவியலாக மாற்றுவது ஏன்?


சம்பந்தப்பட்ட அமைச்சர் ஏன் முஸ்லிம் பெண்களைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறார்? இந்து, கிறிஸ்தவப் பெண்களின் மீது அக்கறை கொள்ளாதது ஏன்? முஸ்லிம் ஆண்களை மட்டும் குறிவைப்பது ஏன்?


குடும்ப வன்முறை தடுப்புச் சட்டங்களே இஸ்லாமிய பெண்களைப் பாதுகாக்கப் போதுமானவை. முத்தலாக் விவகாரத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றுவதாகக் கூறும்போது, சபரிமலை விவகாரத்தில் பின்பற்றாதது ஏன்?'' என்று கேள்வி எழுப்பினார்.