மோசடி நிதி நிறுவனங்களிடம் மக்கள் தொடர்ந்து ஏமாறுவது ஏன்? அறிவுறுத்தல் வழங்கிய சென்னை HC
Madras HC Direction To Police: பொதுமக்கள் தொடர்ந்து ஏமாந்துக் கொண்டிருக்கும் நிலையில், அதிக வட்டி கொடுக்கும் மோசடி தொடர்பாக போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது
நிதி நிறுவன மோசடிகளில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஏமாறுவதால் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் சுமார் 4 ஆயிரத்து 620 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளதாக சென்னையை சேர்ந்த ஹிஜாவு நிதி நிறுவனத்தின் மீது புகார் எழுந்தது.
சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கியது ஹிஜாவு நிதி நிறுவனம். 15 சதவீத வட்டி தருவதாகக் கூறி, பொதுமக்களிடம் சுமார் 4,620 கோடி ரூபாய் முதலீடுகள் பெற்று மோசடி செய்துள்ளது. இந்த நிறுவனத்தின் மீது பொருளாதாரக் குற்றப் பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, 18 பேரை கைது செய்துள்ள நிலையில், நிறுவன இயக்குநர் அலெக்சாண்டர், முகவர்கள் உள்ளிட்ட 13 பேர் தலைமறைவாக உள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹிஜாவு நிறுவனத்தின் நிர்வாகிகளான கோவிந்தராஜ், சுஜாதா, துரைராஜ் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் தாங்கள் யாரும் நிறுவனத்தின் இயக்குனர்களாக இல்லை எனவும், இந்த முறைகேடுக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்றும் வாதிடப்பட்டது.
காவல்துறை தரப்பில், குற்றம்சாட்டப்பட்ட முக்கிய நபர்கள் வெளிநாட்டில் இருப்பதால் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டது. பல கோடி ரூபாயை பொதுமக்களிடம் இருந்து வசூலித்து மோசடி செய்துள்ள வழக்கின் விசாரணை முக்கிய கட்டத்தில் இருப்பதால் ஜாமின் வழங்க கூடாது என வாதிடப்பட்டது.
பணத்தை முதலீடு செய்து ஏமாந்தவர்கள் தரப்பில், தங்களை போல பலர் ஏமாற்றப்பட்டுள்ளதால் மூவருக்கும் ஜாமின் வழங்கக்கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, மூவரின் ஜாமின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்ட நீதிபதி, இதுபோன்ற நிதி நிறுவன மோசடிகளில் பொதுமக்கள் தொடர்ச்சியாக ஏமாறுவதால், மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டுமென காவல்துறைக்கு அறிவுறுத்தி உள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ