உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிறைவுபெற்றது!
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கி இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி கோலாகலமாக தொடங்கி இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
இன்று நடைப்பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த காளை மற்றும் வீரர்களுக்கு பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 15 காளைகளை அடக்கிய ரஞ்சித் குமார் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த காளையாக பரம்பப்பட்டி சென்னியம்மன் காளை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
காலை துவங்கி 9 சுற்றுகளாக நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 729 காளைகள் பங்கேற்றன, 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அதேவேலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 22 மாடுபிடி வீரர்கள் உள்பட 44 பேர் காயம் அடைந்துள்ளனர். இன்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அடக்க பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 848 மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர்.
பெரும் உற்சாகத்துடன் நடைப்பெற்ற இன்றைய ஜல்லிக்கட்டு போட்டிக்கு இடையில், ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த அலங்காநல்லூர் காங்கேயன் என்கிற சசையாண்டி கூட்ட நெரிசலில் சிக்கி மாரடைப்பு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
முன்னதாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர், ஆகிய கிராமங்களில் பொங்கல் விழாவை முன்னிட்டு பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் 15, 16, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் அறிவிப்பின்படி கடந்த இரண்டு நாட்களாக அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஜல்லிக்கட்டு நடைப்பெற்றது. இதனையடுத்து இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடைப்பெற்றது.
இன்றைய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக 12 மருத்துவக்குழு தயார் நிலையில் நிறுத்தப்பட்டனர். மேலும் மதுரை எஸ்பி தலைமையில் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.