சந்திரயான் 2: அந்த கடைசி 15 நிமிடங்கள் ஏன் முக்கியம்; எங்கு? எப்படி? பார்க்கலாம்!
சந்திரயான் 2-வின் முக்கியமான தருணத்திற்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த தருணத்தை எப்படி நேரலையாக பார்ப்பது என்பதைக் குறித்து பார்ப்போம்.
புதுடெல்லி: சந்திரயான் 2-வின் முக்கியமான தருணத்திற்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த தருணத்தை எப்படி நேரலையாக பார்ப்பது என்பதைக் குறித்து பார்ப்போம்.
ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் வின்வெளி மையத்தில் உள்ள ஏவு தளத்தில் இருந்து கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான் 2. படிப்படியாக பல சுற்றுப்பாதைகளை கடந்து சந்திரயான் 2-விண்கலத்தின் விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் இறங்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. நாளை அதிகாலை 1:55 மணி அளவில் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்க உள்ளது. இது வெற்றியடைந்தால், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் விண்கலம் என்ற சாதனையை சந்திரயான் 2 படைக்கும்.
சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை கொண்ட விண்கலத் தொகுப்பு ஆகும். ஒன்று நிலவை சுற்றி வரும் கலன். இரண்டு நிலவில் தரையிறங்கும் விக்ரம் கலன். மூன்றாவது நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் பிரக்யான்.
விக்ரம் நிலவில் தரையிறங்கும் கடைசி 15 நிமிடங்கள் மிக மிக முக்கியமானது. ஏனென்றால் இஸ்ரோவில் இருந்து எந்தவித தொடர்பும் இல்லாமல் தானாகவே வழிநடத்திக் கொண்டு நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும். விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கும் தருணத்தில் அங்குமிங்கும் அலைபாயும். அதன் பின்னர் விக்ரம் கலனில் இருந்து பிரக்யான் உலாவி வெளியில் வந்து நிலவில் ஆய்வு மேற்கொள்ளும். எனவே தான் அந்த 15 நிமிடம் மிகவும் முக்கியமானது.
சந்திரயான் 2-வின் முக்கியமான இந்த தருணத்திற்காக 130 கோடி இந்திய மக்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். நமது நாட்டு மக்கள் மட்டுமில்லை, உலகமே ஆவலுடன் காத்திருக்கிறது.
இந்த தருணத்தை எப்படி நேரலையாக பார்ப்பது என்றால், இஸ்ரோபின் இணையதளம், இஸ்ரோவின் சமூக வலைத்தளமான முகநூல், ட்விட்டர் மற்றும் யூடியூப் பக்கங்களிலும் நேரலை ஒளிப்பரப்பாகும். அதேநேரத்தில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் நேரலை ஒளிபரப்பப்படும்.