காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களுக்கு துரோகம் செய்த மத்திய பாஜக அரசைக் கண்டித்தும், இன்று சென்னை வரும் பிரதமர் மோடிக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இன்று தமிழகம் முழுவதும் அனைவரும் கருப்புச் சட்டை அணிந்தும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றியும், வானில் கருப்பு பலூன்கள் பறக்க விட்டும் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகொள் விடுத்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் தோழமை கட்சியை சேர்ந்தவர்களும் கருப்பு சட்டை அணிந்து கிண்டி போலீஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அப்போது 2 ஆயிரம் கருப்பு பலூன்களையும், ராட்சத பலூன்களையும் வானில் பறக்க திட்டமிட்டுள்ளனர்.


சென்னை வடக்கு, மேற்கு, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினரும், தோழமை கட்சியினரும் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம், கிண்டி கத்திப்பாரா ஆகிய இடங்களில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.


தமிழகம் வரும் பிரதமர் மோடி அவர்களில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை வேளச்சேரி சாலை, சின்னமலை, வி.எஸ்.டி. மோட்டார் அருகில் ம.தி.மு.க. சார்பில் கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


மனிதநேய மக்கள் கட்சி சார்பில் விமான நிலையம் அருகே கருப்பு கொடியுடன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


சைதாப்பேட்டை கலைஞர் பொன் விழா வளைவு அருகே திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடக்கிறது.


விவசாய சங்கங்கள், தமிழ் அமைப்புகள் உள்பட பல்வேறு அமைப்புகளும் கருப்பு கொடி போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.


போலீசார் அனுமதி இல்லாமல் இந்த ஆர்ப்பாட்டங்கள் நடக்கிறது. ஆர்ப்பாட்டக்காரர்கள் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் வகையில் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.