#ThoothukudiFiring: வளர்ச்சி என்ற பெயரில் நியாயப்படுத்த முடியுமா? அகிலேஷ் கேள்வி
தூத்துக்குடி சம்பவத்தை பதிவிட்டு பல கேள்விகளை எழுப்பிய உ.பி.,யின் முன்னால் முதல்வர் அகிலேஷ் யாதவ்
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைகயை மூடக்கோரி நடந்த போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையை கட்டுப்படுத்த, பொதுமக்களின் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி, துப்பாக்கிச் சூடு என நடத்தப்பட்டது. இந்த துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர். 100-க்கு மேற்ப்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டை சம்பவத்தை கண்டித்து பல அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் தமிழகம் முழுவதும் பல இடங்களில் அரசியல் கட்சியினர் மற்றும் பொது மக்கள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தை குறித்து உத்தர பிரதேச மாநிலத்தின் முன்னால் முதல்வரும், முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் நாளிதழ் செய்தியை பதிவிட்டு, மத்திய அரசை நோக்கி பல கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, "வளர்ச்சி என்ற பெயரில் இதுபோன்ற சம்பவங்களை நியாயப்படுத்த முடியாது. சுற்றுச்சூழல் அழுகிறது. கங்கை உலர்ந்துக் கொண்டு இருக்கிறது. யமுனா வற்றிக் கொண்டு இருக்கிறது. காடுகள் அழிக்கப்படுகின்றன. இதனால் விலங்குகள் உணவு இல்லாமல் வேறு பாதைக்கு செல்கின்றன. இதுபோன்ற சம்பவங்களால் நமக்கு என்ன திரும்ப கிடக்கப் போகிறது? ஒழுங்கற்ற காலநிலை. சுற்றுச்சூழல் சீரழிவு. மூச்சுத் திணறல் என மூச்சுவிட முடியாத சூழல் தான் நமக்கு திரும்ப கிடைக்கும். இதுதான் வளர்ச்சியா? என கேள்வி எழுப்பி உள்ளார்.
மேலும் இப்போதே அதை நிறுத்துங்கள் (#StopItNow) என்ற ஹேஷ்டேக்கை போட்டுள்ளார்.