`கடவுளின் துகள்` விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்?
Physicist Peter Higgs Passes Away: `கடவுளின் துகள்` என்றழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவர் குறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.
Physicist Peter Higgs Passes Away: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ். கடவுளின் துகள் (God's Particle) அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்றழைக்கப்படும் புலத்துடன் தொடர்புடைய துகளின் (Mass-giving Particle) கண்டுபிடிப்புக்காக இவர் உலகப் புகழ் பெற்றவர். அதாவது, பிரபஞ்ச உருவாக்கத்தில் இந்த துகள் முக்கிய பங்காற்றியதாக அறிவியலாளர்கள் கூறுவதால், இதனை கடவுளின் துகள் என்று அழைக்கின்றனர்.
இதனை கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்தின் இயற்பியலாளரும், எடின்பெர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான பீட்டர் ஹிக்ஸ் கடந்த 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெல்ஜியத்தை சேர்ந்த இயற்பியலாளர் ஃபிராங்கோயிஸ் எங்லெர்ட் என்பவருடன் இணைந்து வென்றார். கடவுளின் துகள் குறித்து 1964ஆம் ஆண்டே இவர் கோட்பாட்டை வகுத்துள்ளார் என்பத இங்கு குறிப்பிடத்தக்கது.
1964ஆம் ஆண்டின் கோட்பாடு
இவரின் கோட்பாடு சுமார் 49 ஆண்டுகளுக்கு அதாவது 2012ஆம் ஆண்டு அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு மேற்கொண்டு சோதனையில் உறுதியானது. கோட்பாடு பரிசோதனை ரீதியாக உறுதியான பின்னரே இவர் 1964ஆம் ஆண்டு நிறுவிய கோட்பாட்டிற்காக நோபல் பரிசை வென்றார். இந்த கடவுளின் துகள் கண்டுபிடிப்பின் மூலம் பீட்டர் ஹிக்ஸ் உலக புகழ்பெற்றார். அந்த துகளுக்கு அவரின் பெயரை சேர்த்து 'ஹிக்ஸ் போஸான்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | சூரிய கிரகணம்.. தப்பி தவறிக்கூட இவற்றை செய்யாதீங்க... எச்சரிக்கும் நாஸா..!!
பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் முன்வைக்கப்பட்ட சூழலில் பீட்டர் ஹிக்ஸின் இந்த கடவுளின் துகள் கண்டுபிடிப்பு மிகப்பெரிய திறப்பை ஏற்படுத்தியதாக அறிவியலாளர்கள் கூறுவார்கள். மனித வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்தவர் என பீட்டர் ஹிக்ஸை கூறலாம். இவரின் கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த பெரிய திறப்பு ஏற்படலாம்.
மிக முக்கியமானவர்...
அதாவது, பிரபஞ்சத்தின் நிறை எவ்வாறு உள்ளது என்பதை விளக்குவதற்கு பீட்டர் ஹிக்ஸின் கோட்பாடு பயன்படும். இதனால் இயற்பியலில் மிகப்பெரிய புதிர்களில் ஒன்றைத் தீர்க்கலாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் மேக்ஸ் பிளாங்க் போன்ற மாபெரும் விஞ்ஞானிகளின் வரிசையில் பீட்டர் ஹிக்ஸ் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவால் காலமானார்
இந்நிலையில், அவர் கடந்த திங்கட்கிழமை அன்று உயிரிழந்தார் என அவர் பணியாற்றிய எடின்பர்க் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரின் வயது 94. இதுகுறித்து எடின்பெர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"பீட்டர் ஹிக்ஸ் உடல்நலக்குறைவால் கடந்த திங்கட்கிழமை (ஏப். 8) அன்று உயிரிழந்தார்" என தெரிவித்துள்ளது.
எடின்பர்க் பல்கலைக்கழகம் இரங்கல்
மேலும், அந்த அறிவிப்பில்,"பீட்டர் ஹிக்ஸ் ஒரு சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார். இளம் தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஓர் ஊக்குமளிப்பவராகவும் திகழ்ந்தார்" என புகழப்பட்டுள்ளது. மேலும் இந்த துக்கமான நேரத்தில் அவரின் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஊடகங்களுக்கு பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பீட்டர் ஹிக்ஸ் எடின்பர்க் பல்கலைக்கழக்கத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிவர் ஆவார்.
எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பீட்டர் மேதிசன் வெளியிட்ட இரங்கல் பதிவில்,"பீட்டர் ஹிக்ஸ் ஒரு தனித்துவமான மனிதர். அவர் ஒரு திறமையான விஞ்ஞானி, அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் கற்பனை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நம் அறிவையே வளப்படுத்தியுள்ளது. அவரது முன்னோடியான பணி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தியுள்ளது எனலாம். மேலும் அவரது பணி இன்னும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் எனலாம்" என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | பொய் சொன்னவருக்கு 80 கசையடி... பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ