இரு குறைந்த தூர ஏவுகணைகளை இன்று சோதனை செய்து அமெரிக்காவுக்கு கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது வடகொரியா!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான வடகொரியா, உலக நாடுகளின் எதிர்ப்பையும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறி தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வந்தது.


பின்னர் கடந்த 2018 -ஆம் ஆண்டு சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்னும் சந்தித்து ஒப்பந்தம் மேற்கொண்டனர். 


இந்த ஒப்பந்தத்தின் படி கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா சம்மதித்தது. பின்னர் கடந்த பிப்ரவரியில் மீண்டும் இரு நாட்டு தலைவர்களும் வியட்நாமின் ஹனோயில் சந்தித்து பேசினர். அதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு வடகொரியா ஆக்கப்பூர்வமான வகையில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காதபோதும், ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.


கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ஆம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இது தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இதனால் இருதரப்பு உறவில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.


இந்நிலையில், வடகொரியாவின் வடக்கு பியாங்கன் பகுதியில் குறைந்த தொலைவு செல்லக்கூடிய இரு ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.  இவை 270 மற்றும் 420 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளன. 


கடந்த ஒரு வாரத்திற்குள் இரண்டாவது முறையாக நடத்தப்படும் ஏவுகணை சோதனை இது என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.