இரட்டை வேடம் போடும் பாகிஸ்தான்: அமெரிக்கா குற்றச்சாட்டு!
பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டுள்ளதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்தை ஒழிப்பதாக கூறி, பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டுள்ளதாக அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐ.நா.,வுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே கூறியதாவது: பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 255 மில்லியன் டாலர் நிதியுதவியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு தெளிவான காரணம் உள்ளது.
கடந்த பல வருடங்களாக பாகிஸ்தான் இரட்டை வேடம் போட்டு வந்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைந்து போராடி வந்த பாகிஸ்தான், மறுபுறம், பயங்கரவாதிகளை உற்பத்தி செய்தது.
அவர்கள் ஆப்கனில் அமெரிக்க ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த இரட்டை வேடத்தை அமெரிக்க அரசு ஏற்று கொள்ளாது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போரில், பாகிஸ்தான் அதிக ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை தொடர்ந்து, செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் கூறுகையில், பயங்கரவாதத்தை நிறுத்த பாகிஸ்தான் இன்னும் அதிக நடவடிக்கை எடுக்க வேண்டும். விரைந்து நடவடிக்கை எடுப்பதே எங்களது விருப்பம் எனக்கூறினார்.