வடகொரியாவின் செயலை வரவேற்ற அதிபர் டிரம்ப்!!
உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி, அமெரிக்காவை மிரட்டும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இதனால் வடகொரியா மீது அமெரிக்கா மற்றும் பல நாடுகள் பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதற்கு சீனா மற்றும் ரஷியா எதிர்ப்பு தெரிவித்தன.
அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாகவும், அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் வடகொரியா கடந்த வாரம் அறிவித்தது. வடகொரியாவின் இந்த செயல் மற்ற நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்தது.
வடகொரியாவின் செயலால் கோபமடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு தனது டுவிட்டர் பக்கத்தில் இறுதி எச்சரிக்கையை விடுத்து உள்ளார். அதாவது, வடகொரியா தொடர்ச்சியாக முட்டாள் தனமான செயல்களில் ஈடுபடுகிறது. எங்கள் ராணுவ முழு தயார் நிலையில் உள்ளது. எனவே வடகொரியா நல்ல வழியை தேர்வு செய்யும் என நம்புகின்றேன் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு சொந்தமான குவாம் தீவின் மீது ஏவுகணைகளை வீசி நடத்தும் தாக்குதல் தள்ளி வைத்திருப்பதாகவும், தாக்குதல் நடத்த நிறுத்திவைக்கப்பட்ட 4 ஏவுகணைகளையும் வாபஸ் பெறுவதாகவும் வடகொரியா தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, வடகொரியாவின் செயலை வரவேற்கிறேன் என்று அதிபர் டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.