இரான் புரட்சிகர காவலர் படையால் பயிற்சியளிக்கப்பட்ட பயங்கரவாத செல்லை நொறுக்கிய Saudi Arabia
செளதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது கடந்த ஆண்டு இரான் ஏவுகணைகள் கொண்டும், ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியதாக ரியாத் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது டெஹ்ரன்.
செளதி அரேபியாவின் எண்ணெய் நிலையங்கள் மீது கடந்த ஆண்டு இரான் ஏவுகணைகள் கொண்டும், ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியதாக ரியாத் குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுக்கிறது டெஹ்ரன்.
இரானின் புரட்சிகர காவலர் படையினரிடம் (Iran's Revolutionary Guards) பயிற்சி பெற்ற பயங்கரவாத செல் ஒன்றை இந்த மாதம் தகர்த்ததாகக் செளதி அரேபியா கூறுகிறது. அது மட்டுமல்ல, 10 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை பறிமுதல் செய்ததாகவும் செளதி அரேபியா தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் மூன்று பேர் இரானில் பயிற்சி பெற்றவர்கள் என்று கூறும் செளதி, மீதமுள்ளவர்கள் "பயங்கரவாத பிரிவில் பல்வேறு பங்கு வகித்தவர்கள்" என்று ஆணித்தரமாக கூறுகிறது. அரச பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் அரசு ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத பிரிவின் உறுப்பினர்கள், 2017ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பல வாரங்கள் இரானில் புரட்சிகர காவல்படையிடம் "வெடிபொருட்களை எவ்வாறு தயாரிப்பது என்பது உட்பட ராணுவ மற்றும் களப் பயிற்சியைப் பெற்றனர்" என்றும் அவர் கூறினார்.
உலகின் மிகப் பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளர் மற்றும் அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான வளைகுடா அரபு நாட்டில் ஒரு வீடு மற்றும் ஒரு பண்ணை வீடு என இரு இடங்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் 23 அன்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் தனது முதல் உரையின் போது பேசிய செளதி அரேபியாவின் மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ் (Salman bin Abdulaziz), இரான் குறித்து ஒரு விரிவான தீர்வு காண வேண்டும் என்றும், லெபனானில் அதன் பயங்கரவாத துணை அமைப்பான ஹெஸ்பொல்லாவை நிராயுதபாணியாக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
உலக வல்லரசுகளுடனான 2015 அணுசக்தி ஒப்பந்தத்தை "தனது விரிவாக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும், பயங்கரவாத கட்டமைப்பை உருவாக்கவும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கவும்" இரான் பயன்படுத்தியதாக மன்னர் சல்மான் கூறியிருந்தார். மேலும் இது, "குழப்பம், தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை" தவிர வேறொன்றையும் உருவாக்கவில்லை என்றும் கூறினார்.
வளைகுடா பிராந்தியத்தில், ஏமன் உட்பட சுன்னி மற்றும் ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த நாடுகள் பல பினாமி போர்களில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஆண்டு செளதியின் எண்ணெய் நிலையங்கள் மீது இரான் இதற்கு முன் இல்லாதவாறு ஏவுகணைகள் கொண்டும், ட்ரோன்கள் மூலமாகவும் தாக்குதல் நடத்தியதாக ரியாத் குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுக்கிறது டெஹ்ரன்.