பொது வாக்கெடுப்பின் முடிவுகளின்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதியாகிவிட்டதால், அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கேமரூன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொது வாக்கெடுப்பு முடிவுகள் வெளியான பிறகு பிரதமரின் இல்லத்திலிருந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கேமரூன், "மாற்று வழியில் பயணிப்பது என பிரிட்டன் மக்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளனர். ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற வேண்டும் மக்கள் என கூறியுள்ளனர் அவர்களின் முடிவு மதிக்கப்பட வேண்டும். மக்களின் முடிவில் எந்த சந்தேகமும் இல்லை. மக்கள் அளித்த முடிவு நிச்சயம் நிறைவேற்றப்படும். 


இந்நாட்டை புதிய பாதையில் முன்னெடுத்துச் செல்ல புதியத்தலைவர் தேவை என நான் கருதுகிறேன். எனவே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன். வரும் அக்டோபர் மாதத்துக்குள் புதிய தலைமை அமைந்துவிடும்.  இன்னும் 3 மாதங்களுக்கு நான் பிரதமராக இருந்து தேசத்தை நிதானமாக தாங்கிச் செல்வேன். எனக்குப் பின்னால் பிரிட்டனின் பிரதமராக பதவி ஏற்பவர் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து முறைப்படி வெளியேறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.


இச்சம்பவத்தால் பிற ஐரோப்பிய நாடுகளில் வாழும் பிரிட்டிஷ் மக்களுக்கும் பிரிட்டனில் வாழும் பிற ஐரோப்பியர்களுக்கும் உடனடியாக எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.